பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

‪வந்தேவிட்டது ; பாஸ்போர்ட்‬ புராணம் (4)

ஆகஸ்ட் 16,17 கடந்து போனது, ஆனால் பாஸ்போர்ட் தான் வரவில்லை. சிங்கப்பூர் விழாவில் கலந்து கொண்டவர்கள் விழா சிறப்பை எடுத்துக் கூறி வெறுப்பேற்றினார்கள். கேட்டு 'மகிழ்ந்தேன்'. உட்கட்சித் தேர்தல் பணிகளில் மூழ்கிப் போனேன். அத்தோடு பாஸ்போர்ட் விஷயம் மறந்தே போனது.

                               

22.08.2014 - மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சென்னை பயணித்தேன். உடன் நண்பர் செல்வம். “நாளை மலேசியாவிலிருந்து ‘அலன்’ வருகிறார். உங்களை சந்திக்க வேண்டுமென்று பலமுறை சொல்லியுள்ளார். நாளை சந்திக்கலாமா?” என்று கேட்டார்.

“சந்திப்போம்” என்றேன். “பாஸ்போர்ட் என்ன ஆயிற்று?” என்றார். உடன் அலைபேசியை எடுத்து பாஸ்போர்ட் அலுவலருக்கு ஒரு நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பினேன். “இது தான் நிலை” என்றேன்.

23.08.2014 – மலேசியாவிலிருந்து ‘அலன்’ ஒரு குழுவினருடன் வந்திருந்தார். அவர்கள் தொழில் நிமித்தமாக வந்திருந்தார்கள். சந்தித்தேன். குழுவில் ஒரு வளரும் அரசியல்வாதி வந்திருந்தார். அவர் பெயர் ‘சையரின்’. மலாய். பாசிகுடாங் முனிசிபல் கவுன்சிலர்.

இரண்டு நாட்டு ஆட்சி முறைகளை பற்றி விவாதித்தோம். சுவாரஸ்யமாக அமைந்தது சந்திப்பு. அவரோடு வந்திருந்தவர்களும் தோழமையானார்கள். மலேசியாவிற்கு வர அழைப்பு விடுத்தார்கள். வருகிறேன் என்று கூறினேன். செல்வத்திற்கு மட்டும் தான் தெரியும், நம்ம பாஸ்போர்ட் கதை.

பேசிக் கொண்டிருக்கும் போதே அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி. “Your Passport has been dispatched today”. உங்க கஷ்டம் புரிந்து ஒரு வழியாக கடவுச்சீட்டு தயார். மண்டல அலுவலர் பாலமுருகன் அவர்களுக்கு நன்றி.

24.08.2014 – ஞாயிற்றுக் கிழமை. தபால்துறை விடுமுறை.

25.08.2014 – அரியலூர் முகவரிக்கு பாஸ்போர்ட் வந்து சேர்ந்தது. உடனே ஒருவர் எடுத்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தார். மலேசியக் குழுவினர் அழைப்பின் பேரில் உடன் விசா எடுக்க ஆயத்தமானோம். 01.09.2014-ல் பயணம் என்று முடிவானது, ஒரு வாரப் பயணம்.

26.08.2014 – மலேசியா விசா வழக்கமாக ஒரு நாளில் வழங்கப்படுமாம். சமீபமாக நான்கு நாட்களாகிவிட்டதாம். இதில் புதியக் குழப்பம், நடுவில் 28- மலேசிய தேசியநாள், விடுமுறை. 29-அன்று விநாயகர் சதுர்த்தி, விடுமுறை. குறிப்பிட்ட நாளுக்குள் மலேசியா விசா கிடைப்பது சிரமம் என்றானது.

27.08.2014 - மலேசிய விசா பிரச்சினையால், சிங்கப்பூர் விசா வாங்கிவிடுவோம் என்றார்கள். அது ஒரே நாளில் கிடைக்கக்கூடியதாம். விண்ணப்பித்தோம். இதற்கிடையில் சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு மலேசியாவிலிருந்து ‘அலன்’ பேசினார், எங்கள் விசாவிற்காக. அதற்கும் விண்ணப்பித்தோம்.

28.08.2014 – சிங்கப்பூர், மலேசியா இரண்டு விசாக்களும் வழங்கப்பட்டன. எல்லாமே மேஜிக் போல நடந்தேறிக் கொண்டிருந்தது.

இது இப்படியே போய்கிட்டிருந்தா நல்லாயிருக்காதே. வந்தது அடுத்த ட்விஸ்ட்.

29.08.2014 – அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு ஒன்றிய, நகர கழகத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் செப்டம்பர் 05,06 தேதிகளில் பெறப்படும் என அறிவிப்பு. பயணம் போவதா? ஒத்திவைப்பதா? புதுக்குழப்பம்.

29,30,31 ஆகிய தேதிகளில் தேர்தலுக்கான முன் ஏற்பாடு பணிகளை முடித்தேன். செப்டம்பர் 1 மாலை சென்னை கிளம்பினேன். ஒரு மலேசிய வாரப்பயணத்தை மூன்று நாட்களாக சுருக்கினோம்.

விமானம் இரவு 1.30-க்கு. விமானம் கிளம்பும் வரை திக்திக் தான். நமது வழக்கப்படி ஏதாவது தடங்கல் வந்து பயணம் ரத்தாகிவிடுமோ என. விமானம் டேக் ஆப் ஆகியது. ஒரு வழியா வெளிநாடு கிளம்பியாச்சி….

# இந்த சிட்டுக்குருவி தனது சிறிய சிறகை மெல்ல விரித்தது, பரந்த உலகை அளக்க….

                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக