பிரபலமான இடுகைகள்

சனி, 4 பிப்ரவரி, 2017

கல்லூரி காலம்

ஒரு வாரம் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் போராளி மோடில் இருந்த மனநிலையை 'ரிலாக்ஸ் மோட்'க்கு மாற்றியது கல்லூரி நண்பர்கள் சந்திப்பு. உடலை குளிர்ச்சியூட்டியது ஏலகிரி தட்பவெப்பம். அதனால் ஏலகிரி சந்திப்பு இளமையாக்கியது.

ஏலகிரியில் சுற்றிப் பார்க்க குறிப்பிட்ட சில இடங்கள் தான். பக்தர்களுக்கு இரண்டு கோவில்கள். ஒரு படகு பயண ஏரி. ஒரு பூங்கா. ஒரு குறு நகரத்துக்கான கடைவீதி. அங்கே தொந்தரவு இன்றி, கிளைமேட்டை அனுபவிப்பதற்காக மட்டுமே செல்ல வேண்டும்.

ஜெ-வின் ஹெலிகாப்டர் வெள்ளப் பார்வையிடல் போல், காரில் இருந்தே அவற்றை பார்வையிட்டேன் நான். சிலர் அந்த ஊர் முருகனையும் விடாமல் தரிசித்து திருநீறு தரித்து வந்தனர். ஒருவர் பெருமாள் தரிசனம் என்றார். நாம் சூரிய தரிசனத்தோடு சரி என்பதால் அவர்களை பேட்டி எடுப்பதில் பொழுது போனது.

ஒரு மாதம் முன்பு கென்யா சென்ற சாய்குமார் இந்த சந்திப்பிற்கு வந்தார். சிங்கப்பூரில் இருந்து மூர்த்தி, மன்னை மணி. பணி நெருக்கடிக்கிடையே ஒரு இரவாவது நண்பர்களை சந்திக்க வேண்டும் என்று பெங்களூரில் இருந்து வந்த நந்தா. மாலையில் இருந்து இரவு இரண்டு வரை, "இதோ வந்துட்டேன், இதோ வந்துட்டேன்" என போன் அடித்து பலரையும் தூங்க விடாமல் புண்ணியம் சேர்த்துக் கொண்ட கேட் ராமசாமி.

சிதம்பரம் பல்கலைக்கழகத்திற்கு போய், பழைய மாணவர்கள் என்ற முறையில் தங்கள்  செலவில் டிபார்ட்மெண்டிற்கு ஒரு ஷெட் அமைத்துக் கொடுத்து விட்டு வந்த சிவில் அண்ட் ஸ்ட்ரக்சர்ஸ் டீம். லட்சுமணன் தலைமையில் 100 கி.மீ கூடுதலாக சுற்றி தலையை சுற்றி மூக்கை தொட்டக் கதையாக வந்து சேர்ந்தது அந்த டீம். கடைசியில் "என்னய்யா ஏலகிரிய இங்கக் கொண்டாந்து வச்சிருக்கீங்க", என்ற கேள்வி வேற.

ராமன் கதை தான் நெகிழ்வு. ராமன் மும்பையில் பணி புரிகிறார். விமான டிக்கெட் போட்டிருக்கிறார். திடீரென விமானம் ரத்து. அசரவில்லை ராமன், பஸ் ஏறினார். மும்பை - பெங்களூர் - ஏலகிரி பயணம். இருபத்து நான்கு மணி நேரத்திற்கு மேல் பயணம். நண்பர்களை சந்திக்கும் உணர்வால் உந்தப்பட்டு, நீண்ட பேருந்து பயண சிரமத்தை ஏற்றுக் கொண்டு வந்து சேர்ந்தார் ராமன்.

அதேபோன்று ராம்கி. விசாகப்பட்டினம் அருகில் கடலினுள் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் பணி. விசாகப்பட்டிணத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பணிக்கு சென்றால் அங்கே 15நாட்கள். அடுத்த 15 நாட்கள் ஓய்வு சென்னையில். விடுப்பு போட்டால் 15நாள் ஷிப்ட் முடிந்து தான் மீண்டும் பணி. சந்திப்பிற்காக விடுப்பு எடுத்து வந்தார். முப்பது நாட்கள் கழித்து தான் மீண்டும் டியூட்டி. பரவாயில்லை என்று வந்து விட்டார்.

இன்னொரு நண்பர், பேர் சொன்னால் மாட்டிக் கொள்வார். அரசுப் பணி. மூன்று நாட்கள் அடுத்த மாவட்டத்திற்கு டெப்டேஷன் என்று வீட்டில் சொல்லி வந்து விட்டார். உணர்வு தான் காரணம்.

அந்த உணர்வு தான் இந்த கல்லூரி நண்பர்கள் சந்திப்பின் அடிநாதம். கல்லூரி முடித்து 27 ஆண்டுகள் கழித்தும் அந்த நட்பு ஈர்க்கிறது. இன்னொருபுறம் கவலைகளற்ற அந்தக் கல்லூரிப் பருவத்திற்கு கொண்டு சேர்த்து விடுகிறது.

காலை 08.10 வகுப்புக்கு 07.50க்கு அலாரம் வைத்து பொறுப்பாக எழுந்து, அவசரமாக குளித்து, சாப்பிடாமல் ஓடி அட்டெண்டெஸ் கொடுத்து, நண்பனுக்காக பிராக்ஸி கொடுத்து, அது ஒரு காலம். பட்டாம்பூச்சியாய் வண்ணமயமாய் பறந்து மகிழ்ந்த காலம். அந்த நினைவுகள் என்றும் சுகமானவை. அதை அவ்வப்போது கிளர்த்து மனதை ரெப்ஃரெஷ் ஆக்கிக் கொள்ளும் வாய்ப்பு தான் இந்த சந்திப்பு.

இதை எல்லாம் வட்டமேசை மாநாடு நடத்தி பகிர்ந்து மகிழ்ந்தோம். அதை அவ்வப்போது வாட்ஸ் அப் குரூப்பில் அப்லோடி சந்திப்புக்கு வர இயலாதவர்களையும் மகிழ்விக்கும் பணி ஒரு புறம் நடந்துக் கொண்டிருந்தது. அதற்கு உலகளாவி ரசிகர்கள் காத்திருந்தனர். இதில் எங்கள் எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் குரூப்பில் ஹரி "மச்சி நம்ம டிபார்ட்மெண்ட்ல இருந்து எத்தனை பேர் போயிருக்கீங்க?" என்று கேள்வி. பதிலை செல்ஃபியாய் அனுப்பி வைத்தோம்.

# கல்லூரி  நட்பு காலங்களை கடந்தது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக