பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

'தலைமை' ஆசிரியர் தளபதி !

"என்ன மாவட்டம் மழ உண்டா?". " கொஞ்சம் தான்ணே பேஞ்சுது", என் பதில். "எங்கூர்லயும் மழ இல்ல மாவட்டம். ஆத்துலயும் தண்ணி வர்ல்ல", ஆதங்கப்பட்டார் அண்ணன் பூண்டி கலைவாணன். திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர். என்னை எங்குப் பார்த்தாலும் 'மழையில்' தான் ஆரம்பிப்பார். மண்ணின் மைந்தர், மண் பாசம் மிக்கவர். நான் கொஞ்சம் தணிந்தக் குரலில் பதில் அளித்துக் கொண்டிருந்தேன்.

" உங்க ஊருல நிலத்தடி நீர் என்ன மட்டத்துல இருக்கு, போர் எத்தன அடி ஆழம்?, மோட்டார் எத்தன அடியில நிக்கும்?" என அவர் தொடர்ந்து வினவ, நான் சகஜமாக பதில் அளிக்க ஆரம்பித்தேன். அவர் திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் அவல நிலையை சொல்லிக் கொண்டு வந்தார். டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து, பேசும் சுவாரஸ்யத்தோடு உரையாடிக் கொண்டிருந்தோம்.

ஆனால் நாங்கள் உட்கார்ந்திருந்த இடம் தளபதி அவர்களது காரில். முன் சீட்டில் தளபதி. பின் சீட்டில் எங்கள் இருவர் இல்லாமல் முரசொலி செல்வம் அவர்கள். முரசொலி மாறனின் தம்பி, தலைவர் கலைஞரின் மருமகன்.

சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர். தமிழகத்தின் பிரதானத் தலைவராக உருவெடுத்திருப்பவர்.  அவருக்கு வரும் அலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்துக் கொண்டு, வாட்ஸ் அப் தகவல்களைப் பார்த்துக் கொண்டு அவ்வப்போது எங்கள் உரையாடலிலும் பங்கெடுத்தார் தளபதி. சிலர் இது போல் பேசுவதை இடைஞ்சலாக காட்டிக் கொள்வார்கள், எனது அனுபவம். ஆனால் அவர் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை.

இது பிப்ரவரி 5 அன்று நடந்தது. அன்று காலை தளபதி அலுவலகத்தில் இருந்து அழைப்பு. கொலையுண்ட "நந்தினி" இல்லத்திற்கு வந்து ஆறுதல் கூறுவதற்காக தளபதி வர விரும்புகிறார்கள், உங்களை தொடர்பு கொள்வார்கள் என தகவல் சொன்னார்கள். சில நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அழைப்பு.

சில நொடிகளில் தளபதி அவர்களிடம் இருந்து அழைப்பு. "சங்கர், சாயந்தரம் வந்திடலாமா? திருவாரூர்ல இருந்து எப்படி வரலாம்? நான் மதியம் சாப்பிட்டு விட்டு கிளம்பிவிடுவேன்". " கும்பகோணம் வழியா வந்திடலாங்க அண்ணா". நந்தினிக் குறித்த சில செய்திகளை நான் சொல்ல முற்பட்டேன். அவர் அவற்றை ஏற்கனவே அறிந்து வைத்திருந்தார். "இப்போ புரோக்ராம வெளியில் சொல்ல வேண்டாம். தேவை இல்லாத கூட்டம் கூடிடுவாங்க. அவங்க குடும்பத்தினரிடம் ஃப்ரியா பேச முடியாது", என்றார்.

மாலை கும்பகோணம் கிளம்பினோம். வரும் வழியில் கலைவாணன் அழைத்தார்," மாவட்டம், ஆண்டிமடம் போகிற வழியில இருக்கா?". "இல்லண்ணே, ஏன்?". " தளபதி அப்பாவ பாக்கணும்னாங்க". "அப்பா ஊரில் இல்லை. செக்கப்புக்கு திருச்சி போயிருக்காங்க".

கும்பகோணத்தில் வரவேற்றோம். காரில் ஏறியவுடன் என் தந்தை நலம் குறித்து விசாரித்தார்.

சிறுகடம்பூர் கிராமம் வரை பல இடங்களில் கழகத் தோழர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பொதுமக்கள் கையசைத்து வரவேற்றனர். குமிளியம் கிராமத்தில் வெடி வெடித்து வரவேற்றனர். கார் கிளம்பிய உடன், " என்ன சங்கர் துக்கம் விசாரிக்கப் போறோம். வெடி வெடிக்கறது தப்பில்லையா?", என்றுக் கேட்டார். "ஆர்வக் கோளாறுல செஞ்சிட்டாங்க அண்ணா", சமாளித்தேன்.

கார் சிறுகடம்பூர் கிராமத்தை அடைந்தது. முக்கியச் சாலையில் இருந்து ஊருள் சென்று, தெரு சாலையில் திரும்பிய கார் அந்த சிறு சிமெண்ட் சாலை முன் நின்றது. கட்டுக்கடங்காக் கூட்டம். அலையடிக்கும் கூட்டத்தில் இறங்கி நடந்தார். சிமெண்ட் சாலையில் இருந்து ஒருவர் நடக்கும் பாதை நந்தினி வீட்டுக்கு. அதில் வந்து நந்தினி படத்திற்கு மாலை அணிவித்தார். அவரது தாயார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

பெருங் கூட்டத்தில் யார் அவரை இடிக்கிறார்கள் என்றுக் கூட தெரியவில்லை. மணி 7.00 ஆகியிருந்தது. இருட்டி விட்டது. திரும்புகையில் சிமெண்ட் சாலையில் பத்திரிக்கையாளர்கள் மறித்தனர். இரைச்சல் அடங்கக் காத்திருந்து பேட்டியளித்தார். கார் ஏறிக் கிளம்பினோம்.

அடுத்து வந்த காரில் இருந்து முன்னாள் எம்.பி அண்ணன் ஏ.கே.எஸ் விஜயன் தளபதிக்கு அலைபேசியில் அழைத்து காபி இருக்கிறது என்று சொல்ல, வேண்டாம் என மறுத்தார் தளபதி. அவர் வற்புறுத்தவே அலைபேசியை என்னிடம் கொடுத்தார்கள் தளபதி. " சங்கர், எங்கேயாவது ஓரமா நிறுத்துங்க. அண்ணன் காஃபி சாப்பிடட்டும். மதிய சாப்பாட்டுக்கு பிறகு எதுவும் அண்ணன் சாப்பிடல" , என்றார் விஜயன். செந்துறை தாண்டி கார் நிற்கக் கூடிய ஒரு மரத்தடியை காட்டினேன்.

மரத்தடியில் இறங்கி நின்று காஃபியை அருந்தினார். கார் ஏறிய உடன்,"சங்கர் எத்தனை மணிக்கு திருச்சி போவோம்?" என்றுக் கேட்டார். "ஒன்பதாயிடும்" என்றேன். "நேரு காத்திருப்பார். வரவேற்பிற்கு போயிடணும் அவசியம் வரணும்னு சொல்லி இருக்கார். நேரு கிட்ட பேசி, எந்தப் பாதையில் வர்றோம்னு சொல்லிடுங்க"என்றார்.

08.40 மணிக்கு திருச்சி சுங்கச்சாவடியை அடைந்தோம். " வரவேற்புக்கு போனா சரியா இருக்கும்ல?",என்றுக் கேட்டார்.  அண்ணன் நேரு அவர்களும், அண்ணன் ஆ.ராசா அவர்களும் காத்திருந்தனர். நான் விடைப்பெற்றேன். "பத்திரமா போங்க சங்கர்".

முக்கிய நிகழ்வுகளை மனதில் வைத்திருந்து செல்லுதல், கழக மூத்தவர்களை நினைவில் வைத்து விசாரித்தல் - சந்தித்தல், எளிமையாய் இருத்தல், பதற்றம் இல்லாமல் இயல்பாக இருத்தல்,  தோழர்கள் மீது அக்கறையாய் இருத்தல், அடுத்தவர் கருத்துகளை கவனித்தல் என தனது ஒவ்வொரு அசைவிலும்  தலைமைப் பண்புக்கான பாடத்தை  போதித்தார் தளபதி.

# எம் 'தலைமை' ஆசிரியர் தளபதி வாழ்க !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக