பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

பிரேக்கிங் நியூஸ் காலம் !

இந்த "பிரேக்கிங் நியூஸ், பிக் நியூஸ்" பரபரப்பில் ஒரு விஷயத்தை ஊடகங்கள் மறைக்க முனைகிறார்கள்.

அது தளபதி ஸ்டாலின் அவர்களின் நிதானம், கண்ணியம்.

ஜெயலலிதாவால் வெற்றி பெற்ற 134 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, அதிமுக இரண்டு தரப்பாக பிரிந்து 'பகடை' ஆடிக் கொண்டிருக்கிறது. கட்சியை கைப்பற்றுவதில் நடைபெறுவது இன்னும் அதிகம். ஆனால் அது அவர்கள் உள்கட்சி விவகாரம்.

அதே சமயம் ஆட்சி விவகாரத்தில் நடைபெறும் ஆட்டம், அவர்கள் கட்சிக்கானது மாத்திரமல்ல. தமிழக மக்களின் வாழ்வு சம்பந்தப்பட்டது. வாக்களித்தவர்கள் மாத்திரமல்ல, வாக்குரிமை இல்லா குழந்தைகள் வாழ்வையும் பாதிக்கும் விவகாரம், இவர்கள் ஆட்சிப் பொறுப்பு குறித்து நடத்தும் 'கண்ணாமூச்சி விளையாட்டு'. ஆட்சி இயந்திரம் இயங்காமல் முடங்கியே போய் விட்டது.

134 பேரில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் எத்தனை பேர், சசிகலா அவர்களிடம் எத்தனை பேர் என்பது 'கன்னித்தீவு ரகசியம்' போல் நீடிக்கிறது. ஆளுநர் மாளிகையிலோ, சட்டசபையிலோ பலம் நிரூபிக்கப் படும் வரை இந்தக் குழப்பம் நீடிக்கும். அதுவரை இருவருமே எங்களிடம் 'தான்' அதிக எண்ணிக்கை என அறிவித்தவாறு இருப்பார்கள்.

ஆனால் குழப்பமே இல்லாத எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களை திமுக கொண்டிருக்கிறது. 89 பேர். மிக முக்கியமான ஒரு எண்ணிக்கை, இன்றைய காலக்கட்டத்தில். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டும் என்று நினைத்தால், திமுக ஒரே ஒரு கடிதத்தை ஆளுநர் இடம் அளித்தால் போதும்."எங்கள் இடம் மெஜாரிட்டி இருக்கிறது" என்ற ஒற்றை வரி கடிதம் போதும்.

சசிகலா எப்போது பொதுச்செயலாளர் ஆனாரோ, அப்பொழுதில் இருந்தே பொதுமக்களிடம் இருந்து எழும் வினா ஒன்றே ஒன்று தான், "திமுக ஏன் அமைதி காக்கிறது?". வேகமான தி.மு.கழகத் தோழர்களே வலைதளங்களில் இன்னும் காட்டமாக எழுதினார்கள்," மிக்சர் தின்பது ஓ.பி.எஸ் அல்ல, தி.மு.க தான்". சிலர் வெளிப்படையாகவே கேட்டார்கள், "30 எம்.எல்.ஏக்களை அதிமுகவில் இருந்து உடைத்து ஆட்சி அமைக்க வேண்டியது தானே?".

அது எளிதான காரியம் தான், ஆனால் காலம் எல்லாம் பழிச் சொல்லுக்கு ஆளாக்கும் செயல். திமுக அந்த காரியத்தில் இறங்கவே இல்லை. மிக நிதானமாக அடிகளை எடுத்து வைத்தார் தளபதி அவர்கள். "ஆட்சியின் நலத் திட்டங்களை ஆதரிப்போம்" என்று அறிவித்தவர், ஆட்சியின் அவலங்களை தட்டிக் கேட்பதில் முன்னால் நின்றார்.

ஜல்லிக்கட்டு பிரச்சினை, மாணவர்கள் மற்றும் மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு எதிர்ப்பு என மக்கள் நலன் சார்ந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, அரசின் மீது சாட்டையை சொடுக்கினார். தளபதி அவர்கள் கேள்விகளுக்கு பிறகே அரசு செயல்பட்டது, பல விவகாரங்களில்.

இந்த நேரத்தில் தான், சசிகலாவின் ஆட்சியை பிடிக்கும் வேலை நடந்தது. தமிழகம் எங்கும் சசிகலாவிற்கு எதிரான மனநிலை தான். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகளைத் தவிர அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சசிகலாவிற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டில் உள்ளனர்.

இப்போது திமுக மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகிவிட்டது. இவர்கள் ஏன் ஆட்சி உரிமை கோரக் கூடாது என்ற கேள்வி பொதுமக்களிடத்தில் வலு பெற்றிருக்கிறது.

ஓ.பி.எஸ்ஸோடு எத்தனைப் பேர் என்று தெரியாமல், இப்போது ஐந்து பேர் இணைந்திருக்கிறார்கள். இதுவே திமுக உரிமை கோரினால், கூடுதல் எண்ணிக்கையில் அதிமுகவில் இருந்து, திமுக பக்கம் புலம் பெயரும் வாய்புள்ளது என்பது பொதுவாக எழுந்திருக்கும் கருத்து. அதிலும் தேர்தல் வந்தால் திமுக வெற்றி பெறும் என்ற நிலையில் பலரும் திடமான முடிவெடுப்பார்கள்.

ஆனால் இப்போதும் தளபதி சொல்கிறார், "அதிமுக உறுபினர்களின் உண்மை மன நிலை அறிந்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்". அவர்கள் உரிமையில் தலையிடவில்லை என்பதை தெளிவுப் படுத்தியிருக்கிறார்.

ஆட்சி அதிகாரத்திற்கு அதிமுகவினர் அடித்து கொள்ளும் வேலையில், ஜனநாயக ரீதியாக திமுக அமைதி காக்கிறது, தளபதி கண்ணியமாக செயல்படுகிறார் என மக்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் வழக்கம் போல் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் 'பிரேக்கிங் நியூஸிலேயே' கண்ணாக இருக்கின்றனர். இவர்கள் மறைப்பதை வரலாறு பதிவு செய்யும்.

# பிரேக்கிங் நியூஸை வரலாறு வெல்லும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக