தளபதி அவர்களது பிறந்தநாள் அன்று சால்வைக்கு பதில் நூல்களாக வழங்கச் சொன்னதில் நூல்கள் குவிந்தன. அவற்றை பிரித்து பல்வேறு நூலகங்களுக்கு வழங்குவதாக அறிவித்தார்கள் தளபதி அவர்கள்.
அதனைக் கண்ட மாணவி செம்பருத்தி தளபதி அவர்களுக்கு கடிதம் எழுதினார் "தங்களது கிராம நூலகத்திற்கும் நூல்கள் தருமாறு ". நேற்றைய முன் தினம் புதுக்கோட்டை ஞானாலயா நூலகத்திற்கு நேரிடையாக சென்று நூல்களை அளித்தார் தளபதி. இன்று மீதி நூல்களை பத்துக்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு வழங்கினார்.
செம்பருத்தியின் கோரிக்கையை ஏற்று தளபதி அவர்கள் நூல்களை வழங்க உறுதி அளித்தார்கள். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரிடமும் நூல்களை நேரடியாக வழங்கினார்.
கொளப்பாடியில் இருந்து காலை கிளம்பி அறிவாலயம் வந்தடைந்தார் செம்பருத்தி. தளபதி அவர்களை சந்திக்கும் ஆர்வத்திலும், பரபரப்பிலும் இருந்தார். தளபதி அவர்களை சந்திக்கும் முன் " சார், என்ன கேட்பாங்க?" என்றார். "ஒண்ணும் கேக்க மாட்டாங்க. அப்படி கேட்டாக்க பதட்டமில்லாம பதில் சொல்லும்மா" என்றேன். ஆனால் அப்படி கேட்டாரே தவிர, அவர் தயாராகத் தான் இருந்தார் என்பது பிறகு தான் தெரிந்தது.
தளபதி அவர்களது அறையில் நுழைந்தோம். தளபதியை வணங்கினார் செம்பருத்தி. அருகில் அழைத்து நிறுத்தினார் தளபதி. செம்பருத்தி உடன் அவரது அண்ணனும், சித்தியும் வந்திருந்தனர். "சங்கர் வாங்க", என்றழைத்து என்னையும் உடன் நிறுத்தினார். தளபதி அவர்களது மேசை புத்தகங்களால் நிறைந்திருந்தது.
" செம்பருத்தியா?" என்றார். ஆமாம் என்று தலையசைத்தார் செம்பருத்தி. "எந்த ஊர்?", என்றுக் கேட்டார் தளபதி. தளபதியை பார்த்த பிரமிப்பில் நின்றுக் கொண்டிருந்த செம்பருத்தி, " கொளப்பாடி", என்றார். "குன்னம் தொகுதி", என்றேன். " என்ன நூலகம்?", என்றுக் கேட்டார். "ஊர்புற நூலகம். செம்பருத்தியால் கட்டிட வசதி கிடைத்தது. நூல்கள் அன்பளிப்பாக செம்பருத்தியால் சேர்ந்தது", என்றேன்.
"நூலகத்தில் எவ்வளவு புத்தகங்கள் இருக்கிறது?" என்றுக் கேட்டார். "687 புத்தகங்கள் இருக்கிறது", என்று துல்லியமாக பதிலளித்தார் செம்பருத்தி. "இதில் 200 புத்தகங்கள் இருக்கிறது. உங்கள் நூலகத்தில் கொடுத்திடுங்க. வாழ்த்துக்கள்", என்றார் தளபதி. மகிழ்ச்சியாகத் தலையசைத்தார் செம்பருத்தி. வணங்கி விடைப் பெற்றார்கள் செம்பருத்தி குடும்பத்தினர்.
வெளியில் வந்தும் படபடப்பு அடங்கவில்லை செம்பருத்திக்கு. "சார், அந்த போட்டோ கிடைக்குமா?", என்றுக் கேட்டார் செம்பருத்தி. "அவசியம் வாங்கிக் கொடுத்துடறேம்மா", என்றேன். அதற்குள் அவரை தந்தி டிவியினர் பேட்டிக்கு அழைத்தனர். தயங்கினார். "மனசுல பட்டதை பேசும்மா", என்றேன். எளிமையாக பேசினார்.
கீரனூர் நூலகத்திற்கு நூல்கள் பெற வந்த கீரை தமிழ்ராஜா செம்பருத்தியை கண்டு உற்சாகமானார். " அண்ணனால உலகம் பூரா தெரிஞ்சுட்ட, வாழ்த்துக்கள்", என்றார். "அது செம்பருத்தி படிப்பு ஆர்வத்திற்கு கிடைத்த பாராட்டு" என்று ராஜாவிற்கு பதிலளித்தேன்.
செம்பருத்தியை நோக்கி ,"சொன்ன மாதிரி ஐ.பி.எஸ் படிக்க முயற்சி எடுக்கணும். இன்னும் புகழ் பெற வேண்டும் ", என்று வாழ்த்தினேன். " சார், நல்லா படிக்க சொல்லுங்க", என்று சிரித்தவாறு புகார் சொன்னார் செம்பருத்தியின் அண்ணன். "சார், இப்போ பிளஸ் ஒன் தான் . இந்த வருஷம் நல்லா படிச்சி மார்க் வாங்கிடுவேன்" என்று உறுதியளித்தார் செம்பருத்தி.
கொளப்பாடி போய் சேர்த்து அலைபேசினார். "சார், கலைஞர் டிவியில் காட்டினாங்க. மு.க.ஸ்டாலின் சார் கூட இருக்கறது பாத்து எங்க அம்மாவுக்கு சந்தோஷம். போட்டோ மட்டும் அனுப்பிடுங்க சார்", என்றார். " வாட்ஸ் அப் வந்திடுச்சிம்மா. பிரிண்ட் போட்டு அனுப்பிடறேன்", என்றேன்.
செம்பருத்தி தன் படத்தை பார்ப்பதற்கு முன் , உலக அளவில் சென்று விட்டது தளபதி அவர்களது முகநூல் மூலமாக.
# தளபதி அவர்களது வாழ்த்து பெற்ற செம்பருத்தி !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக