பிரபலமான இடுகைகள்

வியாழன், 23 மார்ச், 2017

வேப்ப மரத்தடி கேக் கட்டிங்

"அண்ணா சுண்டக்குடியில இருந்து பத்திரிக்கை வைக்க வரணும்னு சொல்றாங்க", அரியலூர் ஒன்றியம் ஜோதி அலைபேசினார். "வர சொல்லுங்கண்ண", என்றேன். வந்து திருமண அழைப்பிதழை அளித்தார்கள். தேதி பார்த்தேன். மார்ச் 23. "ஒன்றியம் தேதி சொன்னாரா? நான் அன்னைக்கு ஊரில் இருக்க மாட்டேனே", என்றேன். " நாங்க தான் இந்த தேதி போட்டோம். ஒன்றியத்துக்கு தெரியாது. அன்னைக்கு நீங்க தான் வந்து தாலி எடுத்துக் கொடுக்கணும்", என்று அன்பாக வலியுறுத்தினார் மணமகன் சுப்ரமணியன்.

நான் அவர்களை சமாளித்து அனுப்பி விட்டு ஒன்றியத்துக்கு போன் அடித்தேன். "என்னண்ணே இப்படி மாட்டி விட்டுட்டிங்க. நான் அன்னைக்கு ஊருல இருக்க மாட்டேன்னு உங்களுக்கு தெரியுமே?", என்றுக் கேட்டேன். " இல்லண்ணே. எனக்கும் பத்திரிக்கை அடிச்சது தெரியாது" என்றார். அடுத்த நாள் நைசாக "தீவிரமான பையன். அவங்க தெருவில் இது தான் முதல் கட்சி திருமணம். அவசியமா போகணும்", என்றார் ஒன்றியம்.

மார்ச் 23, வழக்கமாக தலைமறைவாகும் நாள். அந்த வழக்கப்படி, இன்றும் வெளியூர் பணி முடித்து நேரே திருமணத்திற்கு வருவேன் என்று சொல்லி இருந்தேன். ஆனால் காலையில் சிமெண்ட் தொமுசவினர் வந்துவிட்டனர். அவர்களிடம் வாழ்த்து பெற்று, நகரம் முருகேசனுடன் சுண்டக்குடி கிளம்பினேன். கைக்காட்டியில் ஒன்றியம் ஜோதி இணைந்தார். கழகத் தோழர்கள் சுண்டக்குடியில் வரவேற்று காரில் இருந்து இறங்க சொன்னார்கள். ரோடு ஓரத்தில் இருக்கும் வேப்பமரத்துக்கு கீழ் அழைத்து சென்றார்கள்.

அங்கு ஒரு மர ஸ்டூல் இருந்தது. அதன் மீது ஒரு கேக் காத்திருந்தது. கையில் பிளாஸ்டிக் கத்தியை கொடுத்தார்கள். நான் மறுக்க, அன்பாக திணித்தார்கள். கேக்கை வெட்டி ஆளுக்கொரு துண்டு கொடுக்க, மூத்தவர் ஒருவர் கேக்கை ஊட்டி விட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார். ரோட்டோர வேப்ப மரத்தடியில் "ஹேப்பி பர்த்டே" இதுவாகத் தான் இருக்கணும்.

வழியில் இந்த எதிர்பாராத நிகழ்வுகளோடு மண்டபத்தை அடையும் போது மணி 10.05. மணமேடையில் மணமக்களை காணோம். முகூர்த்த நேரம் 09.00 - 10.00. திருமணம் முடிந்து சாப்பிட போய் விட்டார்களோ என சந்தேகத்தோடு கேட்டேன். " இல்லை. உங்க எல்லோருக்காகவும் தான் காத்திருக்காங்க", என்று எங்களை அமர செய்தனர்.

மணமக்கள் சுப்ரமணியன், ரேகா வந்தனர். புரோகிதர் அங்கேயும், இங்கேயும் பொருட்களை மாற்றி வைத்துக் கொண்டிருந்தார். ஓமகுண்டத்தில் புகையை கிளப்ப எண்ணெய்யை ஊற்றினார். மணமகனின் அண்ணன் அவரை ஒதுங்கச் சொல்லி விட்டு எங்களை மேடைக்கு அழைத்தார். கைக்கு மாங்கல்ய தட்டு வந்தது. என் வழக்கப்படி மங்கல நாணை மணமக்கள் பெற்றோரை அழைத்து அவர்களிடம் கொடுத்து, மணமகனிடம் கொடுக்க சொன்னேன்.

மானமகன் மங்கல நாணை அணிவிக்க, உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்த இனிதே திருமணம் நடந்தேறியது. எங்களை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்த, மணி பார்த்தேன். 10.30. அன்பை மறுக்க முடியாமல் அமர்ந்து ஒரு கை சாம்பார் சாதம், ஒரு கை மோர் சாதம் சாப்பிட்டேன். இதற்கிடையே இடையறாது அலைபேசி வாழ்த்துக்கள். ஒரு நண்பர் கேட்டார், " பர்த்டே ஸ்பெஷல் என்ன ?". "கல்யாண வீட்டில் மோர் சாதம் சாப்பிடறேன்", என்றேன். " என்னது?", என்று நொந்துவிட்டார்.

சாப்பிடும் போது பக்கத்தில் நிழலாடியது. பார்த்தால் மணமக்கள். "சாப்பிடப் போறீங்களா? உட்காருங்க", என்றேன். " இல்ல. நீங்க சாப்பிடுங்க அண்ணே", என்றார். உபசரிக்க வந்திருக்கிறார்கள். போக சொன்னால், மறுத்தார்கள். போட்டோ எடுக்க சொல்லி, அனுப்பி வைத்தோம். சாப்பிட்டு வந்து விடைபெற்றோம். மறுபடியும் மணமக்கள் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து வழியனுப்ப வந்தார்கள். நெகிழ்ந்து போனோம். "ஒற்றுமையா வாழ்ந்து பேரக் காப்பாத்துங்க. இன்னைக்கு உங்களுக்காகத் தான் வந்தேன்", என்றேன். " தெரியும்ணா. பிறந்தநாள்ல வந்துருக்கீங்க. நன்றி அண்ணா" என்றார் மணமகன் சுப்ரமணியன். பிறந்தநாள் பரிசு அந்த 'நன்றி'.

கிளம்பினோம். அடுத்த நிறுத்தம் வாலாஜாநகரம். வாலாஜாநகரம் கழகத் தோழர் ரமேஷ் தாயார் இறந்துவிட்டார். என் பதிவுகளை படிக்கும் நண்பர்களுக்கு ரமேஷை தெரிய வாய்ப்பு உண்டு. நான்கு வருடங்களுக்கு முன் ரமேஷின் பதினோரு வயது மகன் மணீஷ் இறந்த துயர சம்பவம். பேரன் இறந்ததில் இருந்து மனம் பாதிக்கப்பட்டு இருந்த ரமேஷின் தாயார் இறந்து விட்டார். அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, ரமேஷுக்கு ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினேன்.

இந்த நிகழ்வுகளால் , நான் ஊரில் இருக்கும் விஷயம் தெரிந்து விட இன்னும் சில நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து  தெரிவித்தனர். ஆர்.கே.நகர் தேர்தல் பணிக்கு கிளம்பினேன்.

திருமண வாழ்த்து, துக்க ஆறுதல், தோழர்கள் வாழ்த்துக்களோடு, "வேப்பமரத்தடி கேக் கட்டிங்" சேர  இந்த ஆண்டு பிறந்தநாள் சற்று வித்தியாசம்.

# ஒவ்வொரு நாளும் புது அனுபவமே !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக