பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

அன்பான தளபதி

நேற்றிரவு மணி 10.45 அலைபேசி அழைத்தது. அய்யா துரைமுருகன் அவர்களது எண். "மாவட்ட ஷெயலாளரா?". " ஆமாங்கய்யா". "தளபதி பேசுறாங்கப்பா". அலைபேசி கைமாறியது.

"சங்கர், எங்க இருக்கீங்க?", தளபதி அவர்கள் தான். "அரியலூர்ல இருக்கன் அண்ணா". "அப்பா ஊர்ல இருக்காங்களா?". "இருக்காங்க அண்ணா". "கும்பகோணம் வர்றேன் காலையில. அப்பாவ பார்க்க வர்றேன்". "சரிங்க அண்ணா".

அய்யா கோ.சி.மணி அவர்களது படத்திறப்பு விழாவுக்கு கும்பகோணம் வந்துவிட்டு சென்னை செல்லும் போதும் அப்பாவை சந்திக்க முயற்சித்தார். அப்போது அப்பா ஹைதராபாத் செக்கப் சென்றிருந்தார்கள்.

அடுத்து செந்துறை அருகே, கொலை செய்யப்பட்ட நந்தினி இல்லத்திற்கு ஆறுதல் கூற வந்த போதும், கும்பகோணத்தில் சொன்னார், " சங்கர், ஆண்டிமடம் போய் அப்பாவ பார்த்திடலாம்". "அப்பா திருச்சி அப்போலோவுல இருக்காங்க அண்ணா".

திருச்சியிலும் அப்பாவை பார்க்க முயற்சித்தார். அண்ணன் நேரு இல்ல திருமண நேர நெருக்கடியில் சந்திக்க இயலவில்லை. இப்போது கும்பகோணம் பயணம் என்றவுடன் உடனே திட்டமிட்டு விட்டார், அப்பாவை சந்திக்க.

காலை உளுந்தூர்பேட்டை சென்றேன். ச.ம.உ அண்ணன் உதயசூரியன், மா.செ அங்கயற்கண்ணி ஆகியோரோடு வரவேற்பு கொடுத்தோம். தளபதி அவர்களது வாகனத்தில் அண்ணன் கு.க.செல்வம் அவர்களோடு, அண்ணன் உதயசூரியனும் நானும் பயணித்தோம்.

விருத்தாசலத்தில் வரவேற்பு கொடுத்த மா.செயலாளர் கணேசன், ச.ம.உ உடன் இணைந்தார். ஆண்டிமடம் பயணித்தோம். வழியெங்கும் தளபதி அவர்களுக்கு அன்பான வரவேற்பு நிகழ்ச்சிகள்.

ஆண்டிமடம். வீட்டு வாயிலில் கழகத் தோழர்கள் குவிந்திருந்து வரவேற்பளித்தனர். வரவேற்பை ஏற்றுக் கொண்டு வீட்டுக்குள் வந்தார்.

கடந்த நான்கு மாதத்தில் இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐ.சி.யுவில் சிகிச்சை பெற்று திரும்பியிருந்ததால் அப்பா மெலிந்து விட்டார்கள். களைப்பாகவும் இருந்தார்கள்.

வீட்டுக்குள் நுழைந்த எனக்கே ஆச்சரியம். அப்பா வேட்டி, சட்டை, வாட்ச் அணிந்து நாற்காலியில் உட்கார்ந்திருந்தார்கள். தளபதியை பார்த்த உடன் எழுந்தார்கள். பதறிப் போன தளபதி,"நீங்க உக்காருங்கண்ணா" என்றார்.

"எப்படி இருக்கீங்கண்ணே?". அப்பா நல்லா இருக்கேன் என கையால் சைகை காட்டினார்கள். "தலைவரை பத்தி தான் எப்பவும் கேட்டுகிட்டு இருக்காங்க", என்றார் என் அம்மா. "தலைவர் நலம் குறித்து என்னிடமும் கேட்கிறார்கள்", என்றேன்.

உடனே தளபதி தன் அலைபேசியை எடுத்தார். கேலரியை திறந்து கொண்டே," சமீபத்தில் எடுத்த தலைவருடைய புகைப்படம் இருக்கு. பாருங்கண்ணே", என்றவாறு அய்ந்து நிமிடம் பொறுமையாக தேடி எடுத்து அப்பாவிடம் காட்டினார்கள்.

அப்பாவால், அந்தப் புகைப்படத்தை காணும் அரிய வாய்ப்பு எங்களுக்கும் கிடைத்தது. "அம்மா, அப்பாவ பார்க்கும் போது", என்றார் தளபதி. புகைப்படத்தில் தலைவர் கலைஞரும், தயாளு அம்மாள் அவர்களும் எதிரெதிராக அமர்ந்து ஒருவரை ஒருவர் பார்க்கும் காட்சி. தயாளு அம்மாள், தலைவர் கையை பற்றியிருக்கும் உணர்ச்சிமிகு புகைப்படம்.

படத்தை பார்த்த அப்பா லேசாக கலங்க, " தலைவர் கிட்ட நீங்க விசாரிச்சிங்கன்னு சொல்றேன். சென்னை வரும் போது சொல்லுங்க, தலைவர பார்க்க ஏற்பாடு செய்கிறேன்", என தளபதி சொல்ல, அப்பா கண்ணில் அவ்வளவு ஆனந்தம்.

அப்பாவின் சிகிச்சை நிலை, உணவு ஆகியவற்றை குறித்து விசாரித்தார்கள் தளபதி அவர்கள். உடனே அப்பா ,"கிளம்பலாமா?" எனக் கேட்க, எல்லோருக்கும் அதிர்ச்சி. "எங்கப்பா?" என என் தம்பி சிவக்குமார் கேட்க, "கூட்டத்துக்கு தான்" என்றார்கள் அப்பா. 

"மாலையில் தான்ணா கூட்டம். வெயிலா இருக்கு. நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு  மாலை
வாங்க. நான் முன்னாடி கும்பகோணம் கிளம்புறேன்" என்றார்கள் தளபதி.

அப்பா கண்ணீர்  பெருக்கோடு விடைகொடுக்க, "ஏன்ணா இதுக்கா நான் வந்தேன். நீங்க சந்தோஷமா, தெம்பா இருக்கணும் தானே பார்க்க வந்தேன். நல்லா இருப்பீங்க" என கையை பிடித்து சொல்ல, அப்பாவுக்கு ஆறுதல். இது மிகுந்த தெம்பை தரும்.

1989ல் அப்பா எஸ்.சிவசுப்ரமணியன், ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர். பொது நிறுவனங்கள் குழுத் தலைவராக நியமித்தார் அப்போதைய முதல்வர் தலைவர் கலைஞர். குழுவின் உறுப்பினர் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி அவர்கள்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளராக பணியாற்றிய போது, தளபதி அவர்களை அழைத்து வந்து, கிராமங்கள் தோறும் கழக கொடியேற்றும் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் அப்பா. அப்படி நீண்ட கால உறவு இது.

கார் கிளம்பியது. முகநூல் நான்கு ஆண்டுகளுக்கு முன்னான நினைவை காட்டியது. அப்பா ஹைதராபாத்தில் அறுவை சிகிச்சை முடிந்து சென்னை வந்த போது, தளபதி அவர்கள் அப்பாவை சந்தித்து நலம் விசாரித்த நாள் இன்றாம்.

"மணியண்ணன் வீடு மயிலாடுதுறை வழியில தானே சங்கர். கும்பகோணம் போனா அவர் தான் முன்னாடி நின்னு வரவேற்பார்", என்று மறைந்த அய்யா கோ.சி.மணி நினைவில் மூழ்கினார் தளபதி.

போகின்ற வழியெங்கும் இருக்கும் கழகத்திற்கு உழைத்த முன்னோடிகளை நினைவில் கொண்டு, அவர்களை சந்தித்து நலம் விசாரிக்கும் தளபதி அவர்களின் பண்பை வெளிப்படுத்தும் நிகழ்வு இது. மறைந்த முன்னோடிகளையும் நன்றியோடு நினைவு கூறும் பண்பு இளைய தலைமுறைக்கு பாடம்.

# அன்பான, பண்பான, பாசத் தளபதி வழிகாட்டுகிறார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக