பிரபலமான இடுகைகள்

புதன், 12 ஜூலை, 2017

வைஸ் இராமமூர்த்தி

"வைஸ் இல்லீங்களா?". " தோ, தெருமுனையில தான் இருப்பார்". "நாங்க வரும் போது கண்ணுல படலயே". " இப்ப தாங்க போனாரு. ஜனங்க வந்து கூப்பிட்டுகிட்டு போனாங்க". வந்தவர்களுக்கு அவரை பற்றி தெரியாது. அவரது வார்டை சேர்ந்தவர்கள் என்றால், அவர் எங்கு இருப்பார், எந்த நிலையில் இருப்பார் என்று அறிவார்கள்.

வெளியில் இருந்து வந்தவர்கள் என்பதால், வைஸ் பிரசிடெண்ட் பந்தாவாக இருப்பார், கண்ணில் படவில்லையே என நினைத்திருப்பார்கள். அவரும் 'பளிச்' என்று தான் இருப்பார். ஆறடி உயரம் இருப்பார். எப்போதும் சலவை செய்த வெள்ளை வேட்டி, சட்டையில் இருப்பார். வீரப்பன் போல பெரிய மீசை. கையில் 'தாமரைக்கனி' ஸ்டைல் மோதிரம்.

தெருமுனையில் ஒரு கூட்டம் நின்றது. தேடி வந்தவர்கள் கூட்டத்தில் வைஸை தேடினார்கள். கண்ணில் படவில்லை. யாரும் பளிச் என்று தெரியவில்லை. சாக்கடை வாய்க்காலில் ஒருவர் குனிந்து நின்று ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார். "வைஸ் எங்கேங்க?". " அதோ சாக்கடை உள்ள நிக்கிறாரே அவர் தான் வைஸ்".

அவர் வெறுங்கையால் சாக்கடையை அடைத்துக் கொண்டிருந்த  குப்பைகளை அள்ளிக் கொண்டிருந்தார். அது தான் 'வைஸ்' ராமமூர்த்தி. அரியலூர் நகராட்சியின் வைஸ் பிரசிடெண்ட். 2வது வார்டு கவுன்சிலர். தனது வார்டில் ஏதேனும் இது போன்ற குறைகளை யாராவது சொன்னால், அதிகாரிகளையோ பணியாளர்களையோ தேடிக் கொண்டிருக்க மாட்டார். அவரே ஆக்‌ஷனில் இறங்கிவிடுவார்.

முதியோர் உதவித்தொகை வேண்டுமெனக் கேட்டு மூத்தவர்கள் யாராவது உதவி கோரி விட்டால் போதும், அவரே விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு அலுவலகம் போய் விடுவார். உரிய அதிகாரிகளை பக்குவமாக அணுகி அதை பெற்றுக் கொடுக்கும் வரை ஓய மாட்டார். ஓங்கி உயர்ந்த உருவம், பெரிய மீசை தானே ஒழிய, சின்னக் குழந்தை தான். அவ்வளவு பணிவாக நடந்துக் கொள்வார்.

1996 உள்ளாட்சித் தேர்தலில் முதன்முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உடன் பிறந்தோர், உறவினர் அதிகம். அதனாலும், அன்பான சிரிப்பாலும் எளிதாக வென்றார். பிறகு மேற் சொன்ன பணிகளால், மக்கள் மனதில் இடம் பிடித்து 2001 தேர்தலிலும் நிறைய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில், நகராட்சியை அதிமுக கைப்பற்றியது. திமுக சார்பில் குறைவானவர்களே வெற்றி பெற்றனர். அதில் இவரும் ஒருவர்.

2006 உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றிப் பெற்றார். சின்ன குழந்தை பெயர் சொல்லி அழைத்தாலும் நின்று பதில் சொல்வார். பைக்கில் திமுகழகக் கொடி படபடக்க தான் பவனி வருவார், அது எதிர்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும். மறைந்த நகர செயலாளர் பொன்.பக்கிரி அவர்களின் விசுவாசி, வார்ப்பு.

2011 உள்ளாட்சித் தேர்தலில் அண்ணன் இராமமூர்த்திக்கு கடும் போட்டி. கழக சார்பாக இன்னும் இருவர் சீட்டு கேட்டுப் போட்டிப் போட்டனர். அந்த இருவரும் அவர் உடன்பிறந்த சகோதரர்கள் தான். பெரும் பஞ்சாயத்தாக போனது. என்னையும் நகர செயலாளர் முருகேசனையும் தனியாக சந்தித்த அண்ணன் இராமமூர்த்தி, "குடும்பத்திலும் கழகத்திலும் சங்கடம் வேண்டாம். உங்களுக்கும் சங்கடம் வேண்டாம். தம்பிக்கு சீட் கொடுத்து விடுங்கள். ஆனால் அடுத்த முறை நான் தான் போட்டியிடுவேன்" என்றார்.

அவரது தம்பி மாரிமுத்து நிறுத்தப்பட்டு, அவரும் வெற்றி பெற்றார். அந்த அளவிற்கு அந்த வார்டை கழகக் கோட்டையாக வைத்திருந்தார் அண்ணன் இராமமூர்த்தி. சட்டமன்றத் தேர்தலிலும் கூடுதல் வாக்குகள் தான்.  2011க்கு பிறகு, எந்த நிகழ்ச்சியில் சந்தித்தாலும், "அண்ண மறந்துடலியே" எனக் கேட்டு சிரிப்பார். "கவலைப் படாதீங்கண்ணே" என நான் சொல்வேன். இது எங்கள் இருவருக்கிடையேயான வழக்கமான உரையாடல் ஆனது.

2016ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவித்த அன்று என்னைப் பார்த்தவர் ஏதும் சொல்லாமல் சிரித்தார். "மறக்கலண்ணே" என்று நான் சொன்னேன். தேர்தல் தள்ளிப் போய் விட்டது.

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு கத்தை காகிதத்தை நகர செயலாளர் முருகேசனிடம் கொடுத்திருக்கிறார். "எல்லாம் முதியோர் உதவித் தொகை விண்ணப்பங்கள். நிறைய பேருக்கு வரணும்" என சொல்லி இருக்கிறார்.

நேற்று நள்ளிரவு அண்ணன் இராமமூர்த்தி உலகை விட்டு விடுதலை பெற்று விட்டார்.

இரண்டாவது வார்டு மக்களும், முதியோர் உதவித் தொகை கோரியோரும் காத்திருக்கிறார்கள். அண்ணன் இராமமூர்த்தி தான் இல்லை.

# மக்கள் பணி நாயகன் இராமமூர்த்தி நெஞ்சங்களில் வாழ்வார் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக