அத்தனையும் பொய்யா?
சிறுவயதில் இருந்து கண்ட கனவெல்லாம் பொய்த்துப் போனதே. ஒவ்வொரு நாளும் உருகி, உருகி மன்றாடியதெல்லாம் இல்லாமல் போனதே. இந்தப் பிரபஞ்சமே எனக்கு அடிமை என்று இருந்த அகந்தை எல்லாம் அழிந்துப் போனதே. காட்சிகளை எல்லாம் ரசித்து, ரசித்து இழைந்தது அத்தனையும் இல்லாமல் போனதே. அத்தனையும் நாமே என்றிருந்தது எல்லாம் போனதே.
புரட்சித் தலைவர் படம் பார்த்தால், போர்வீரனாய் எண்ணி "அச்சம் என்பது மடமையடா" என்றுப் பாடித் திரிவோம். உலகம் சுற்று வாலிபனாய், "தங்கத் தோணியிலே, தவழும் பெண்ணழகே" என்று லயித்து மகிழ்ந்தோம். "புதிய வானம், புதிய பூமி நான் வருகையிலே" என்று வானம், பூமி பார்த்து கதறித் தீர்ப்போம். அங்கே நாம் தான் எம்.ஜி.ஆர், நாம் தான் டி.எம்.சௌந்தர்ராஜன்.
"யாரடி நீ மோகினி" என்று சிவாஜிகணேசனாய் வரித்துக் கொண்டு துள்ளிக் குதித்தோம். "மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்" என்று பாச மழை பொழிவோமே நடிகர் திலகமாய். "வெள்ளிப் பனி மலை மீதூலவுவோம்" என பாரதியாய் அகமகிழ்ந்தோமே. "யாருக்காக, இது யாருக்காக" என தத்துவம் பாடினோமே. "ஏய் குருவி, சிட்டுக்குருவி" என சிவாஜியாய் நெகிழ்ந்தொமே.
"அம்மாவும் நீயே அப்பாவும் நீயே" என சிறுவன் கமலஹாசனாக உருகுவோம். ஒரு கட்டத்தில், "வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்" என தத்துவம் பாடினோம். "வானிலே தேனிலா ஆடுதே பாடுதே" என காதல் இளவரசன் ஆனோம். "கண்மணி அன்போடு நான் எழுதும் கடிதமே" என கடிதம் எழுதினோம். "ஒன்ன விட இந்த உலகத்திலே" என கமலஹாசனாகவே ஆனோம்.
"மை நேஸ் பில்லா, வாழ்க்கை எல்லாம்" என உச்சி முடி களைத்து ஸ்டைல் காட்டினோம். "காட்டிலொரு சிங்கக் குட்டியாம்" என கர்ஜித்தோம். "அண்ணனுக்கு ஜே, காளையனுக்கு ஜே" என சுற்றி வந்தோம். "சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்ததாம்", என சோகம் பொழிந்தோம். " வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்" என வீர சபதம் எடுத்தோம்.
"ராஜராஜன் சோழன் நான்" என தலையில் கிரீடத்தோடு நடந்தோம். " சங்கீத வானம் தேன் சிந்தும் நேரம்" என்று சங்கீதக் கடலாய் பொங்குவோம். "பேச்சி, பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி" என மாடுகளை கண்டால் இசையால் தாலாட்டினோம். "மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கூறு" என தலையில் கரகம் இல்லாமலே கரகாட்டம் ஆடினோம். "பழமுதிர்சோலை எனக்காகத் தான்" என வரப்புகளில் ஓடினோம்.
பஸ்ஸில் ஏறினால், ஓடும் பாடலுக்கு உடன் பாடுவது, முந்திப் பாடுவது என இசை சாகரத்தில் நீந்திக் கிடந்தோம். காரில் உடன் வருபவர்களுக்கு நம் சங்கீத ஞானத்தைக் காட்ட பாட்டாய் பாடுவோம். காதில் மாட்டியிருக்கும் ஹெட் போனில் ஒலிக்கும் பாடலை, உடன் பாடி தெருவை திரும்பிப் பார்க்க வைப்போம். குளிக்கும் போதும் பாடி, வீட்டை மூழ்கடித்தோம்.
டி.எம்.சௌந்தர்ராஜன் குரலுக்காக உச்சஸ்தாயியில் குரல் உயர்த்துவோம். எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக குரலை மென்மையாய் இழைப்போம். இளையராஜாவிற்காக கரகரப்போம். உன்னிகிருஷ்ணன், கானாபாலா ஒருவரை விடுவதில்லை, ஜெராக்ஸ் குரலாய் பாடுவோம். ஏன் எஸ்.ஜானகி, சித்ராவாக கூட உருவெடுத்து பாடி மகிழ்ந்திருக்கிறோம்.
இப்படி எல்லாம் இருந்த வாழ்வு, கடந்த சில நாட்களாக இருள் சூழ்ந்து விட்டது. காதடைத்துப் போனது. தொண்டை எழ மறுக்கிறது. மூளை சோர்வுற்று விட்டது.
எல்லாம் இந்த தொழில்நுட்பத்தால் தான். Smule appல் எல்லோரும் பாடுகிறார்கள் என முயற்சித்தேன்.
டி.எம்.எஸ் பழித்து காட்டுகிறார். எஸ்.பி.பியை நெருங்க முடியவில்லை. நம்ம குரலுக்கு இளையராஜா தான் சரி எனப் முயற்சித்தால், எட்டா உயரத்தில் இருக்கிறார். கானா பாலாவுக்கு கூட ஒத்துப் போகவில்லை என் குரல்.
அய்யகோ அத்தனையும் பொய்யா. இவ்வளவு நாள் உருகி, உருகிப் பாடியதெல்லாம் பொய்யா. கூட இருந்தவர்கள் மனதில் என்ன ஓடியிருக்கும். நினைக்கவே பயமாய் இருக்கிறது.
இன்னும் ஒரு பாடல் தான் பாக்கி. அதை முயற்சி செய்து விட்டு, பொதுவெளியில் பாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டியது தான்.
கோழிக்கூவுது படத்தில் வரும், "அண்ணே, அண்ணே சிப்பாய் அண்ணே".
# என் சோகக் கதையக் கேளு தமிழ்குலமே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக