பிரபலமான இடுகைகள்

திங்கள், 10 ஜூலை, 2017

குலோத்துங்கன் IAS

மருவத்தூர் கிராமம், அரியலூர் மாவட்டத்தில், செந்துறை வட்டத்தில் இருக்கும் ஒரு சிறு கிராமம். இந்த மருவத்தூருக்கு இது வரை இருந்த அடையாளத்தை குலோத்துங்கன் மாற்றி அமைத்திருக்கிறார்.

செந்துறை தாலுக்காவே வானம் பார்த்த பூமி. நீர் பாசன வசதி இல்லாத காரணத்தால், அந்தக் காலத்தில் முந்திரிகாடுகள் உருவாக்கப்பட்டன. வருடம் ஒருமுறை  தான், முந்திரி காய்த்து வருமானம். முந்திரி தான் இங்கு முக்கியப் பயிர்.

மருவத்தூர் கிராமத்தை சேர்ந்த நமுனார் திராவிட இயக்கத்தின் முன்னோடி. தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். அவரது துணைவியார் தனலட்சுமி, ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றியவர், 1996-2001ல். இன்னும் பழைய ஓட்டு வீட்டில் வசிக்கும் எளிமையானக் குடும்பம்.

நமுனாரின் மூத்த மகன் அசோகன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளை செயலாளர் முப்பது ஆண்டுகளாக. இப்போதும் அவர் தான் ஊராட்சி செயலாளர். என் தந்தையாருக்கும், எனக்கும் தேர்தல் பணியாற்றியவர்.  நெருக்கமான குடும்பம்.

அண்ணன் அசோகனுக்கு  தொழில் சைக்கிள் பழுது நீக்கும் கடை. அண்ணன் அசோகன், மல்லிகா தம்பதியருக்கு ஒரு மகள், ஒரு மகன்.

மகள் வெற்றிச்செல்வி எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி முடித்து மருத்துவராகப் பணியாற்றுகிறார். அவரது கணவர் சரவணன் பி.இ முடித்து முனைவர் பட்டம் பெற்று இஸ்ரோ நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

மகன் குலோத்துங்கன். பள்ளிப் படிப்பை பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். அந்த சுற்று வட்டாரத்தில் நீண்ட வரலாறு கொண்ட பள்ளி.

அரசுக் கல்லூரியான திருச்சி, நவலூர் குட்டப்பட்டில் இருக்கும் அன்பில் தர்மலிங்கம் விவசாயக் கல்லூரியில் இளங்கலை விவசாயம் B.Sc(Agri) பயின்றார் குலோத்துங்கன்.

கோவை, தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகத்தில் விவசாய மேலாண்மையில் உயர்கல்வி (M.B.A) பயின்றார். படிப்பு முடித்து இரண்டு ஆண்டுகள் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.

பணியாற்றினாலும் அடுத்த இலக்கு அவரை உந்தியது. அது இந்திய ஆட்சிப் பணி. சென்னை ஷங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியில் சேர்ந்து பயின்றார். ஓராண்டு பயிற்சி முடித்து தேர்வு எழுதி வெற்றிப் பெற்றார்.

நேர்முகத் தேர்வு தடைகல்லாக அமைந்தது. அயரவில்லை குலோத்துங்கன். ஷங்கர் அகாடமியிலேயே பயிற்றுநராக இணைந்தார். இரண்டாண்டுகள் பணியாற்றினார். தேர்வுக்கும் தயாரானார்.

இதற்கிடையில் இவரது தந்தையார் அண்ணன் அசோகன் அவர்களுக்கு சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டது. பிரச்சினை கடுமையான நிலையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றது. இப்போது நலமாக உள்ளார்.

தந்தையின் சிகிச்சைக்கு இடையிலும் இந்த ஆண்டு தேர்வில் குலோத்துங்கன் வெற்றி பெற்றுள்ளார். தமிழகத்தில் இருந்து தேர்வு பெற்ற பதினான்கு பேரில் ஒருவர். விவசாயத்தையே முதன்மைத் தாளாகக் கொண்டு தேர்வு எழுதினார்.

அடுத்த மூன்று மாதங்கள் முசௌரியில் பயிற்சி வகுப்புகள். பிறகு ஒதுக்கப்படுகிற மாநிலத்தில் ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். மீண்டும் முசௌரி பயிற்சிக்கு பிறகு பணி நியமனம் வழங்குவார்கள்.

தமிழ்நாடு கேடரில் இடம் கிடைத்து, தமிழ்நாட்டில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் மிகச் சிறப்பாக இருக்கும். தமிழ் உணர்வும், ஆர்வமும் கொண்டவர்.

கிராமத்திலிருந்து விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்து, விவசாயத்தை பிரதானப் பாடமாக பயின்று குடிமைத் தேர்விலும் விவசாயத்தை முதன்மையாகக் கொண்டு தேறியவர். கிராம வாழ்க்கை, விவசாய சிரமம் உணர்ந்தவர். சிறப்பாக பணியாற்றுவார்.

தேர்வு பெற்றமைக்கு நன்றி தெரிவித்த, அவரது முகநூல் செய்தி சிறப்பானது. "குடிமைத் தேர்வு சிலருக்கு 100 மீ ஓட்டம், சிலருக்கு 200 மீட்டர் ஓட்டம், ஆனால் எனக்கு மாரத்தான் ஓட்டம். மாரத்தானை வெல்ல காரணமாக இருந்த ஷங்கர் அகாடமி நிறுவனர் ஷங்கர் அவர்களுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார். அவரது உள்ளத்தை வெளிப்படுத்துகிறது.

இன்று சொந்த ஊர் மருவத்தூர் வந்திருந்தார் குலோத்துங்கன். நேரில் சென்று வாழ்த்தினோம். மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ள மண்ணின் மகனை வாழ்த்துவது கடமையல்லவா.

இன்னும் அந்த கிராமத்துக் கூச்சம் விலகாமல், மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். சிறுவயதில் பார்த்த பண்புகள் மாறாமல் இருக்கிறார். இதுவே இவரை உச்சத்திற்குக் கொண்டு சேர்க்கும்.

# வாழ்த்துகள் குலோத்துங்கன் IAS !

(படத்தில் குலோத்துங்கன் அருகில் நிற்பவர் அவரது தந்தை அசோகன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக