பிரபலமான இடுகைகள்

வியாழன், 20 ஜூலை, 2017

நண்பன் ஓவியர் சத்தியசீலன் !

நண்பன் சத்தியசீலன் ஓர் ஒவியக் கண்காட்சி வைக்கிறார் என்ற உடன் மகிழ்வுடன் கிளம்பினேன். ஏற்கனவே என்னை தன்னுடைய வரைப்பட்டியில் (டேப்லட்டில்) வரைத்து அனுப்ப, அதனை முகப்பு படமாக வைத்து மகிழ்ந்தேன்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வடிவமைப்பு பிரிவில், மிக முக்கியப் பொறுப்பில் பல்வேறு பணி நெருக்கடிக்கு இடையில் இருந்தாலும், கலையை உயிராக நினைப்பவர், அதற்கு பெரும் நேரம் செலவிடுபவர். பாடல், இசை, இலக்கியம் இத்தோடு ஓவியம். என் பள்ளி, கல்லூரி நண்பன்.

அவ்வப்போது அவர் வடிவமைப்பு செய்த வாகனங்களின் படங்கள், இயற்கை ஓவியங்கள், நண்பர்கள், திரை ஆளுமைகளின் படங்களை வரைந்து அனுப்புவார். ஆனால் ஓவியக் கண்காட்சி நடைபெறும் இடம் வேறு மாதிரியான ஓவியங்களுக்கான இடம்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும்,  Focus art gallery. அந்த சாலையில் பயணிக்கும் போது, இங்கு மாடர்ன் ஆர்ட் கண்காட்சிகள் நடக்கும் விளம்பரங்கள் பார்த்த நினைவு.

புதுமை ஓவியங்களை பல பக்கங்களில் இருந்து பார்த்து அர்த்தம் கண்டு பிடிக்க முயலும் பாமர ரசிகன் நான். இங்கு சத்யாவின் படங்களும் அதே புதுமை ரகம். 15.07.2019 அன்று துவக்க நாள்.

அன்று சென்றேன். "சத்யா, இது..." , என்று நான் துவங்கும் முன்னே சத்யா உணர்ந்துக் கொண்டார். கை உயர்த்தி என்னை அமர்த்தினார். "நீ பாருண்ணே. உனக்கு என்ன தோணுதோ, அது தான் அர்த்தம், அது தான் ஓவியம்", என்றார்.

நான் பார்த்த முதல் ஓவியமே என் மனதில் அறைந்தது.  கருப்பு வெள்ளை படமாக, ஒரு துக்கத்தில் உறைந்த முகம். கண்களில் தேங்கிய சோகமும், நெளிந்த உதடுகளும் ஏதோ ஒரு சொல்ல முடியா சோகத்தை அழுத்தி சொன்னது.

அடுத்து வண்ணமயமாக ஓர் ஓவியம். கூர்ந்து கவனித்தால், திமிறி நிற்கும் காளையும், அடக்கத் துடிக்கிற காளையுமாக ஜல்லிக்கட்டுக் காட்சி. சூழ்ந்த இளஞ்சிவப்பு நிறப்பு நிறம், ஜல்லிக்கட்டின் கொதி நிலைக்கு குறியீடோ. இப்படி நானாக சிந்தித்து, ஒரு வழியாக புதுமை ஓவியக்கலை ரசிகனாக தயாரானேன்.

ஒரு ஓவியம் முழுதும் கோடுகளாலும், அதன் முடிச்சுகளாலும் பின்னப்பட்டிருந்தது. அது புத்தராக இருக்கும் என்பது என் அனுமானம். இன்னொரு ஓவியம் , ஒரு முகம் கீழ் நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. மேலும், கீழுமாக வண்ண வண்ண சுழிகள், வளையங்கள். அது அவதார் படத்தின் வரைகலை முகமாக தோன்றியது.

இங்கே இணைத்திருக்கும் கருப்பு, வெள்ளைப் படம் எனக்கு சத்தியமாக புரியவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

ஒரு சுற்று முடித்து வந்தேன். எங்களது கல்லூரி நண்பர்கள் ரவீந்திரன், சீனுவாசன், கங்காதரன், குமரன் வந்திருந்தனர். துவக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்த புகழ்பெற்ற ஓவியர் 'டிராட்ஸ்கி மருது' அவர்களை அழைத்து என்னை அறிமுகம் செய்து வைத்தார் சத்யா. இந்த நிகழ்ச்சிக்கு சென்றிருக்காவிட்டால், எனக்கு மருது அவர்களது அறிமுகம் கிடைத்திருக்காது.

"இந்த நிகழ்ச்சி மூலமா உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. என் நண்பர் மூலமா கிடைத்த வாய்ப்பு", என்றேன். அவர் சொன்ன பதில் மிக சிறப்பு. "வழக்கமா இங்க நடக்கிற ஓவியக் கண்காட்சிக்கு இவ்வளவு பேர் வரமாட்டாங்க. ஓவியம் தொடர்புடையவர்கள் தான் வருவாங்க. சத்யா நிகழ்ச்சி என்பதால், பெரிய அளவில் திரண்டிருக்கீங்க. இதுவே ஒரு வெற்றி. உங்களை போன்றோர் வந்தது மகிழ்ச்சி", என்றார். எளிய மக்களிடம் புதுமை ஓவியக் கலையை கொண்டு சேர்த்திருக்கிறார் நம்ம ஆள் சத்யா.

ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்திருந்த சத்யாவின் தாய், தந்தையருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. நிச்சயம், அந்த ஓவியங்கள் அவர்களுக்கு புரிந்திருக்காது. ஆனால் தன் மகனின் கலையை ரசிக்க இவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சி, அவர்கள் முகத்தில் தாண்டவமாடியது.

சத்யாவுடன் வாகன வடிவமைப்புத் துறையில் பணிபுரியும் பல உயர் பொறுப்பில் இருந்தோர் வந்திருந்தனர்.  ஆங்கிலேயர் ஒருவரும் வந்திருந்தார். அவரிடம் சத்யா தன் தாயை அறிமுகப்படுத்தினார். "சத்யா சில்ரன் , நோ பிளே. ஒன்லி ஆர்ட்" என தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சத்யாவின் தாய், தன் மகன் குறித்து மகிழ்வாய் பேச எல்லோருக்கும் நெகிழ்ச்சி.

பழச்சாறு தட்டு வந்தது. வந்த உடன் பச்சை நிறத்தில் இருந்த சாறு கொடுத்தார்கள், அது என்ன சாறு என்று தெரியவில்லை. இப்போது இளஞ்சிவப்பு நிறத்தில். தர்பூசணி சாறு, கடைசி சொட்டு வரை ருசித்தது எளிமையாய். சத்யாவின் ஓவியத்தை போலவே. "Flow it in", "உள்ளீடு பரவல்" என்பது காட்சியின் தலைப்பு. சாறும், ஓவியமும் உள்ளீடு பரவல் நிகழ்த்தியது.

நடிகரும், ஓவியருமான நடிகர் சிவக்குமார் பார்வையிட்டு பாராட்டியிருக்கிறார்.

# ஓவிய உலகத்தில் சத்யா, உலகப் பார்வை படட்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக