தொடர் சாலை மறியல் போராட்டம் இரண்டாம் நாளின் போது இன்னும் தீவிரமாகியது. காவல் துறை என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருந்தது. வன்னியர் சங்கத்தினர் இன்னும் உத்வேகத்தோடு களமிறங்கினர்.
காவல்துறை சாலையில் போடப்பட்ட மரங்களை மெல்ல அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்ய முயன்று கொண்டிருந்தது. ஆனாலும் தடைகள் நீடித்தன.
காவல்துறையின் தலைவர் முதல்வர். முதல்வர் எம்.ஜி.ஆரோ அமெரிக்க மருத்துவ மனையில். ஆட்சி நிர்வாகம் கிட்டத்தட்ட முடங்கியிருந்த நேரம் அது.
முதல்வர் என்று அறிவிக்கப்படாமல், பண்ருட்டி ராமச்சந்திரன் பொறுப்பு முதல்வராக செயல்பட்டதாக பத்திரிக்கைகள் சொல்லிவந்தன. பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு வன்னியர் என்பதால், போராட்டத்திற்கு மறைமுக ஆதரவு கொடுத்ததாக அ.தி.மு.கவிலேயே முனுமுனுப்பு.
பலரின் தியாகத்தால் போராட்டம் எழுச்சியடைந்தது. உயிர்களை பறிகொடுத்து, பலவிதமான அடக்குமுறைகளுக்கும் இன்னல்களுக்கும் இடையே வெற்றிகரமாக நடந்த்து போராட்டம்.
சில குழுக்கள் தலைமறைவாக பல கிராமங்களுக்கும் சென்று போராட்டத்தை தீவிரப்படுத்தினர். மறுநாளும் பல இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. சாலைகளில் பேருந்துகளை காவல்துறையினரின அணிவகுப்புடன் நடத்தினர்.
இதனை தடுத்தே தீர வேண்டும் என்று பல கிராமங்களில் முடிவெடுத்தனர். அதற்கு ஒரே வழி சாலையோரம் இருக்கும் மரங்களை வெட்டுவது. சாலைகளை சேதப்படுத்துவது.
காவல்துறையின் நடவடிக்கைகளை பார்த்து, அடுத்த கட்ட வியூகங்கள் வகுக்கப்பட்டன. முக்கிய சாலைகளில் இருந்த பாலங்கள் குறிவைக்கப்பட்டன. சாலைகளின் இணைப்பு நரம்புகள் பாலங்கள் தான்.
பாலங்கள் இல்லையென்றால் புதியப்பாலங்கள் அமைக்க நாட்கள் ஆகும். அதுவரை போக்குவரத்து சீராக நாளாகும் என்பதை கணித்து குறிவைக்கப்பட்டன. முக்கிய சாலைகளில் இருந்த பாலங்கள் அடையாளம் காணப்பட்டு, தகர்க்கப்பட்டன.
போராட்டம் தீவிரமாகியது. போலிசார் இதனை எதிர்பாக்கவில்லை. கலகக்காரர்கள் என்று அறிவித்து கண்டதும் சுட உத்தரவிட்டனர். கோலியனூர் கூட்டு ரோட்டில் முதல் துப்பாக்கி சூடு.
துப்பாக்கி சூடு குறித்து கவலை கொள்ளாமல், போராட்டக்குழுவினர் சாலையில் இறங்கி போராடினர். துப்பாக்கி சூடு விக்கிரவாண்டி, பண்ருட்டி என விரிவடைந்தது.
கிராமங்களுக்கு போலிசார் சென்று வீட்டில் இருப்பவர்களை எல்லாம் அடித்து துவம்சம் செய்த சம்பவங்கள் ஆரம்பித்தன். ஆண்கள் வீட்டில் இருக்க இயலாத நிலை. பல கிராமங்கள் போலிசாரால் சூறையாடப்பட்டன.
உயிர் பலி 21-ஐ எட்டியது....
இந்த சம்பவங்கள் அத்தனையும் நடைபெற்ற போது அ.தி.மு.க ஆட்சி...
( தொடரும்...)
பிரபலமான இடுகைகள்
-
மாநாட்டு பந்தலுக்குள் ஒரு கூட்டம் என்றால், பந்தலுக்கு வெளியே அதே அளவு கூட்டம் இருக்கும். முக்கிய தலைவர்கள் பேச்சுக்கு உள்ளே வர கூட்டம் முண...
-
அவன் தோற்றமே என்னை கவர்ந்தது. சிறிய உருவம். வயதும் குறைவாகத் தான் தெரிந்தது. ஆனால் வயதுக்கும், உருவத்திற்கும் மீறிய உடை. ஒரு நாலடி உயரம் தா...
-
மழைத் தூறலுக்கிடையே ஊருக்குள் நுழைந்தோம். ஆனாலும் மக்கள் கூட்டம், குறிப்பாக பெண்கள் திரண்டிருந்தனர். கூட்ட நிகழ்ச்சிக்கு ஒன்றிய செய...
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக