மாண்பமை அய்யா எம்.ஏ.எம்.ராமசாமி அய்யா
அவர்களுக்கு,
வணக்கம் !
நான் நமது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்
மாணவன். உங்களது அல்ல, நமது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
1920-ல் மீனாட்சிக் கல்லூரியாய், அண்ணாமலை
செட்டியாரால் துவக்கப்பட்டு, 1929-ல் அண்ணாமலை பல்கலைகழகமாக நிறுவப்பட்டு சிறப்புற
செயல்பட்டு வந்த பல்கலைக்கழகம்.
200 ஏக்கர் நிலத்தையும், 20 லட்ச ரூபாய்
பணத்தையும் அள்ளித் தந்த கல்வி வள்ளல் அண்ணாமலைச் செட்டியாரின் வழித்தோன்றல்
நீங்கள்.
இந்தியாவில் இத்தனை நீண்ட கால வரலாற்றோடு
வேறு பல்கலைக்கழகம் இல்லை. அத்தனைத் துறைகளும் ஒருங்கே, ஓரிடத்தில் அமைந்த
பல்கலைக்கழகம் வேறு இல்லை.
தமிழக அரசியலின் திசைமானியாய் விளங்கிய நம்
பல்கலைக்கழகம், திராவிட இயக்கத்தின் நாற்றங்காலாய் விளங்கியது.
இனமானப் பேராசியர் க. அன்பழகன், தமிழர்
தலைவர் கீ.வீரமணி, மறைந்த நாவலர் நெடுஞ்செழியன், எஸ்.டி.சோமசுந்தரம், பண்ருட்டி
ராமச்சந்திரன், தங்கம். தென்னரசு என தற்கால அரசியல் வரை தொடர்கிறது நம்
பல்கலைக்கழகத்தின் மாணவர் பட்டியல்.
இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரின்
அடையாளமாய், காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் முதல் களப்பலியாகி சிலையாய்
நிற்கிற ராஜேந்திரன் , நம் பல்கலைக்கழகத்தின் மாணவன் தானே...
வட தமிழகத்தின் கல்வி வறட்சியை போக்கிய, வளமார்
பூமியல்லவா நம் பல்கலைக்கழகம், எத்துணை கல்வியாளர்கள், எத்துணை ஆட்சியாளர்கள். பல
தலைமுறைக்கு வழிக்காட்டிய பல்கலைக்கழகம்.
என் சமகாலத் தோழர்கள் இன்று அரசின்
அதிகாரிகளாக, தனியார் நிறுவன அதிகாரிகளாக, தொழிலதிபர்களாக, கல்வியாளர்களாக உலகத்தின்
பல பாகங்களிலும் பரிணமித்து வருகின்றனர்.
ஒரு குட்டி தமிழகமாய் திகழ்ந்த்து நம்
பல்கலைக்கழகம், சென்னை முதல் கன்னியாக்குமரி வரை நண்பர்கள், பக்கத்து அறைத்
தோழர்களாய்...
நம் பல்கலைக்கழகம் எங்கள் அன்னை மடி, மனம்
கவர்ந்த தோழன், மனம் கிளர்ந்த காதலி, போதி மரம், கலங்கரை விளக்கம், சொல்லிக்
கொண்டே போகலாம்....
நாங்கள் இங்குப் படித்தது பாடம் மட்டுமல்ல,
வாழ்க்கையையும் சேர்த்து தான்...
பேரறிஞர் அண்ணா, “ ஏ ! தாழ்ந்த தமிழகமே “ என்ற வரலாற்று
சிறப்புமிக்க உரையை வழங்கிய உயர்ந்த இடம் நம் பல்கலைக்கழகம்.
இன்று
“ ஏ ! தாழ்ந்த பல்கலைக்கழகமே “ என்று அழைக்கப்படும் நிலைக்கு
செல்வதாய் பத்திரிக்கைகள் எச்சரிக்கின்றன...
மனம் வலிக்கிறது...
சீர் செய்யுங்கள். கீர்த்தி கெடாமல்
பார்த்துக் கொள்ளுங்கள்.
என்றும் பல்கலைக் கழக நினைவுகளோடு......
அண்ணாமலை மாணவன்.
எம்ஏஏம் ரா இந்த கல்லூரிக்கு என்று எதுவும் செய்ய வில்லை. அவருக்கு பிடித்தமானது குதிரை மட்டுமே. அப்பச்சி செய்த பலன் இன்று நீங்கள் எழுதுவது. வசூலிக்க மட்டுமே வாழ்ந்தவரை போற்றத் தேவையில்லை. இப்ப தத்து எடுத்து வந்துள்ள மகன் கூட கழுத்தில் கை வைத்து வசூலிப்பதில், சொத்தை பெருக்குவதில் தான் அயராது உழைத்துக் கொண்டுருக்கின்றார்.
பதிலளிநீக்குசெ இனம் பற்றி என்னிடம் கேளுங்கள். புட்டு புட்டு வைக்க முடியும்.
நாகரிகம் கருதி பலவற்றை மென்மையாக கையாண்டு இருக்கீங்க.