பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 3 மார்ச், 2013

" மரியாத ராமண்ணா" - தெலுங்குப் பட விமர்சனம்


சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலை தவற விட்டதால், பஸ்ஸை பிடித்தேன், ஹைதராபாத்துக்கு. பகல் முழுதும் 400 கி.மீ பயணம் செய்த களைப்பில் கண் இழுத்தது.


அப்போது பார்த்து பஸ்கிளீனர் பையன் டிவியை இயக்கினான். நான் தூங்க ஆயத்தமானேன். சங்கு சக்கரத்தோடு வெங்கடாஜலபதி பிரசன்னமானார், திரையில் தான்.


திடீரென ஒரு பழைய ஓட்டை சைக்கிளை 50 கி.மீ வேகத்தில், ஒரு நபர் பரபரப்பாக இங்கும் அங்குமாக ஓட்ட படம் துவங்கியது.


பேருந்தோ சென்னை நகர சாலையில் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. தூக்கம் வரும் வரை பார்ப்போ...மே என படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.
 


 தெலுங்கு டப்பிங் படங்களில் கதாநாயகனுக்கு துணையாக வரும் நபர் தான் ஹீரோ. எழுத்து கூட்டி " மரியாத " என்று படிப்பதற்குள் டைட்டில் ஓடிவிட்டது.
 


 

 டப்பிங் படங்களில் பார்த்த ஓரிரு முகங்கள் தவிர தெரிந்த முகங்களே இல்லை, ஹீரோவும் ஹீரோவாக தோணவில்லை. வழக்கமான தெலுங்கு ஹீரோயிச படமாகவும் இல்லை. படம் பெயரும் தெரியவில்லை.

 ஆனாலும் படம் என் தூக்கத்தை விரட்ட ஆரம்பித்தது.

 ஹைதராபாத்தில் தினக்கூலி ஹீரோ. ஓட்டை சைக்கிள் தான் அவரது சொத்து. சென்ற இடமெல்லாம் தோல்வி. செய்து கொண்டிருந்த வேலையும் பறிபோக, தவித்துப் போகிறார்.

 ஒரு மினி டெம்போ வாங்கினால் வாழ்க்கையை ஓட்டலாம் என்றால், பணம் இல்லை என விழித்துக் கொண்டிருக்க, ஒரு தபால் வருகிறது. ராயலசீமாவில் இருக்கும் பூர்வீக சொத்து குறித்து தபால். அதை விற்று வாழ்க்கையை துவங்க முடிவெடுக்கிறார்.

 ராயலசீமாவிற்கு ரயில் ஏறுகிறார். ரயில் கிளம்பிய பிறகு ஓடி வரும் பெண்ணுக்கு உதவ கை கொடுக்கிறார், நாம் எதிர்பார்ப்பது போல. ஆனால் பெண்ணை ரயிலுக்குள் இழுக்க முடியாமல் தலை குப்புற விழுகிறார், பிளாட்பாரத்தில்.
 

 

 வழக்கம் போல் ரயிலில் ஏறும் பெண் தான் ஹீரோயின். ஆனால் படத்தின் கடைசி காட்சி வரை ஹீரோ அவரை காதலிக்கவில்லை.

 இப்படி வழக்கமான சினிமா கிளிஷேக்கள், அடுத்து எதிர்பாராத ட்விஸ்ட்கள் என கலந்து கட்டி படம் ஜெட் வேகத்தில் போகிறது.

 ஹீரோயின் வீட்டுக்கே உதவி கேட்டு போகிறார் ஹீரோ. தனது தம்பியை கொன்றவன் மகனை பழி வாங்க காத்திருக்கிறார்கள் ஹீரோயினின் தந்தையான வில்லனும் அவர் மகன்களும். அந்த மகன் தான் ஹீரோ.

 வீட்டுக்குள் ரத்தம் சிந்தக்கூடாது என்ற சித்தாந்தத்தால் (!) வீட்டுக்கு வெளியே ஹீரோவை கொண்டு வந்து கொல்ல முயற்சிக்க, அவர் தடுக்க, அந்த காமெடி கண்ணாமூச்சி தான் மீதி படம்.

 பயந்தாங் கொள்ளி ஹீரோ, ஆந்திர மிளகாய்கார வில்லன், கிளாமர் இல்லாத இயல்பான ஹீரோயின், பேசும் சைக்கிள் போன்ற கேரக்டர்களை கொண்டு லாஜிக்கோடும், லாஜிக் இல்லாமலும் படத்தை நகர்த்தி, நம்மை ஒன்ற வைத்துவிடுகிறார் டைரக்டர்.

 

 காலையில் ஹைதராபாத்தை அடைந்து நண்பர்களிடம் விசாரித்து தான் படத்தின் விபரங்கள் தெரிந்துக் கொண்டேன். ஹீரோ சுனில், ஹீரோயின் சலோனி அஸ்வானி.


"நான் ஈ" பட டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமௌலி தான் டைரக்டர். படத்தின் பெயர் " மரியாத ராமண்ணா". 2011ல் வந்திருக்கிறது.
 


ராஜமௌலி படங்கள் எல்லாமே தெலுங்கில் சூப்பர் ஹிட்டாம். பார்க்க வேண்டும், நேரம் கிடைத்தால்.


சில குறைகள் இருந்தாலும், நகைச்சுவையாய் ரசித்து பார்க்க ஏற்ற படம், இயக்குநரும் சிறுசிறு விஷயங்களையும் ரசனையாக காட்சிபடுத்தியுள்ளார்.


பார்த்தேன், மகிழ்ந்தேன், பகிர்ந்தேன்.


1 கருத்து: