“சார், கிளியூர்லருந்து பிளைண்ட் கொளஞ்சிநாதன்
பேசறேன்” அடிக்கடி செல்லில் கணீரென கேட்கும் குரல். பொதுப் பிரச்சினைகளுக்காக
மட்டுமே பேசுபவர், நேரில் வந்தார்.
முற்றிலும் பார்வை இல்லாதவர். அவர் ஊரில்
இருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள் சேர்ந்து கட்டியிருக்கும் சிறு கோவிலுக்கு மின்
இணைப்பு பெறுவதில் இருக்கும் இடர்பாடை நீக்குவது தொடர்பாக சந்தித்தார்.
உடன் அவரது மகன் ஜெகநாதன் வந்திருந்தார்,
ஒன்பதாம் வகுப்பு படிப்பவர். பொதுப் பிரச்சினைகளுக்கு மனு எழுதுபவர் அவர் தான். சமீபத்தில்
ஆங்கிலத்தில் தந்தி எழுதி கொடுத்த மகன் குறித்து பெருமைப்பட்டார்.
ஈழப்பிரச்சினையில் தலையிடக் கோரி குடியரசு தலைவருக்கு தந்தி அது.
பார்வையில்லாத நிலையில் எப்படி பொதுப்
பணிக்கு வந்தீர்கள் எனக் கேட்டேன். பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் படித்தப்
பிறகு, சென்னையிலேயே பேஸின் பிரிட்ஜ் பகுதியில் டெலிபோன் பூத் நடத்தியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் டெலிபோன் பூத்கள்
நசிந்துவிட, ஆவடி ரயில் நிலையம் அருகே தெருவோரக் கடை போடுகிறார். புதிய கட்டிடம்
கட்ட கடை காலி செய்யப்பட திரும்ப ஊருக்கே வந்துவிட்டார்.
பெரமபலூர் பஸ் ஸ்டாண்டில் கடை வைக்கிறார். தினம்
பெரம்பலூர் சென்று வருவதால், ஊரிலிருப்பவர்கள் மனுக்களை இவரிடம் கொடுக்க, மாவட்ட
ஆட்சியர் வசம் கொடுத்து, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கிறார்.
அப்படி மூன்று பேருக்கு முதியோர் உதவித்
தொகை கிடைக்க, கிளியூரில் அரசு உதவி பெற வேண்டுமானால் கொளஞ்சிநாதனை தொடர்பு
கொள்ளும் நிலை வருகிறது. அந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிறது.
மக்கள் இவரை ஊராட்சிமன்ற உறுப்பினர் பொறுப்பிற்கு
நிற்க சொல்ல, செல்வாக்கு மிக்க உறவினர் ஒருவர் எதிர்த்து போட்டியிட்டும் வெற்றி
பெறுகிறார். “பார்வையில்லை என்று அனுதாபப் பட்டு வாக்களிக்காதீர்கள்,
நம்பிக்கையிருந்தால் மட்டும் வாக்களியுங்கள் என்றே வாக்கு கேட்டேன்”
என்கிறார்.
210 வாக்குகளில் 125 வாக்கு இவருக்கு.
ஒன்றரை வருட்த்தில் 60 பேருக்கு முதியோர் உதவி தொகை பெற்று தந்திருக்கிறார். தாலுக்கா
அலுவலகத்தில் சான்றிதழ் பெற ஒருவரும் அலுவலகம் போவதில்லை, அனைத்தும் இவர் தான்.
எப்பொழுது வேண்டுமானாலும் இடியக் கூடிய
நிலையில் வீடு, முழு நேரமும் தொழிலில் ஈடுபட முடியவில்லை, தினக்கூலி வேலைக்கு
செல்லும் மனைவி, மூன்று பிள்ளைகள் இவை எதுவும் இவரது பொதுப்பணிக்கு தடையில்லை.
“வேறு என்ன செய்ய வேண்டும் ?”
என நான் கேட்க, “எனக்கு எதுவும் வேண்டாம் சார், ஊர் பிரச்சினைகள் சொல்வதை மட்டும்
செஞ்சு கொடுங்க” என்கிறார் கொளஞ்சிநாதன்.
“ போன வாரம் சென்னை சென்று போக்குவரத்துத்
துறை அமைச்சரை பார்த்தேன். பக்கத்து ஊருக்கு வரும் பேருந்தை ஒரு கி.மீ நீட்டித்து
எங்கள் ஊர்வரை விட மனு கொடுத்தேன். அது தொடர்பாக துறை அதிகாரிகளை சந்திக்க நாளை
திருச்சி செல்கிறேன்” என விடை பெற்றார்.
# கிளியூருக்கு இவர் தான் ஒளி வீசும் கண்கள்
!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக