திருமணத்தை நடத்தி வைப்பதற்காகவே காலை சென்னையிலிருந்து விமானத்தில் வந்து, நடத்தி வைத்து, மீண்டும் விமானத்தை பிடித்தார் தளபதி அவர்கள். இது பரிதி திருமணத்திற்கு தளபதி அவர்கள் கொடுத்த முக்கியத்துவம்.
இளம்பரிதிக்கு பல அடையாளங்கள் உண்டு. கழகத்தின் சிறந்த சொற்பொழிவாளர். சட்டக் கல்லூரி மாணவர்களை கழகத்தில் இணைக்கின்றவர். அவர் வார்த்தையில் சொன்னால், முகநூலில் சாக்லெட் பாய்களை உற்சாகப்படுத்துகின்றவர்.
உயர்நீதி மன்ற வழக்கறிஞர். இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிலிருந்து, அமெரிக்காவின் ஒகையா மாநிலத்திற்கு இளம் அரசியல் தலைவர்களாக சிலரை தேர்ந்தெடுத்து அழைப்பார்கள், அதில் தென்னிந்தியாவிலிருந்து கடந்த வருடம் சென்று வந்த பெருமைக்குரியவர்.
நான் அவரை "போஸ்டர் பாய்" என்று அழைப்பது வழக்கம். கழகத்தின் முக்கிய நிகழ்வுகளின் போது சென்னை நகரின் சுவர்களை அலங்கரிப்பது இவரும் கவிகணேசனும் சேர்ந்து அடிக்கும் மெகா போஸ்டர்களாகத் தான் இருக்கும். அதிலும் அதன் வாசகங்கள் தனி முத்திரையோடு இருக்கும்.
இதை தாண்டி அவரது தந்தையார் வி.பி.ராசனின் பணி. கழகத்தில் இளைஞரணி அமைக்கப்பட்ட போது, விருதுநகர் மாவட்டத்தின் முதல் அமைப்பாளர். ராசபாளையம் தொகுதியில் 89, 96 தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்.
கழகத்தின் முதல்தர பேச்சாளர். திருமணத்தில் வாழ்த்தி பேசும் போது தளபதி அவர்கள் குறிப்பிட்டார் " வி.பி.ராசன் பேச ஆரம்பிக்கும் போது மெதுவாகத்தான் ஆரம்பிப்பார். பத்து நிமிடம் தாண்டினால் சூடு பிடிக்கும். அதில் வீரம் இருக்கும், விவேகம் இருக்கும் ".
திருமண மேடையில் தளபதி அவர்களது இருக்கைக்கு அருகே மணமக்கள் இருக்கை. பரிதி அதில் அமர தயங்க, தளபதி அவர்கள் வற்புறுத்த, நெகிழ்ந்த பரிதி கண்களில் கண்ணீர் மழை. அதை குறிப்பிட்ட தளபதி " இப்போ உட்கார், தேர்தலில் வாய்ப்பு வரும் போது நில் என்று சொன்னேன் " என சொல்ல கைத்தட்டலில் அதிர்ந்தது திருமணக் கூடம்.
கழகத் தோழர்களின் முற்றுகையால் ராசபாளையம் நேற்றிலிருந்தே திணற ஆரம்பித்தது. இன்று தளபதி வருகையில் மக்கள் வெள்ளம். முகநூல் நண்பர்களின் அன்பு முற்றுகையில் மணமகன் திணறினார். அண்ணன் வி.பி.ராசன் அவர்களின் நன்றியுரை நெகிழ்ச்சியில் வந்திருந்தோர் திணறினர்.
மணமகனை வாழ்த்த மேடையில் ஏறினோம். அண்ணன் வி.பி.ராசன் இழுத்து மணமகன் பரிதி அருகே நிறுத்தி "கிட்ட நில்லுங்கைய்யா, உங்க போஸ்டர் பாய் அய்யா" என்றார். கூட்ட நெரிசலால் பதில் சொல்ல முடியவில்லை.
( புகைப்படம்- கீரை.தமிழ்ராஜா)
# அய்யா இப்போ பரிதி தளபதியின் "பெட் பாய்", கழகத் தோழர்களின் "ஹிட் பாய்"...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக