பிரபலமான இடுகைகள்

புதன், 5 பிப்ரவரி, 2014

அவசியம் "கற்க" வேண்டிய நூல் - விடுபூக்கள்

விடுபூக்கள் - தொ.பரமசிவன்; நூல் அறிமுகம்.

நூலாசிரியர் தொ.பரமசிவன் என்பதே இப்புத்தகத்தின் சிறப்பாகும். பண்பாட்டு ஆய்வாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்துறையின் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழகத்தின் பல கூறுகளை வெளிக் கொணர்ந்தவர். நடிகர் கமல் அடிக்கடி இவரை சந்தித்து தான் தன் வரலாற்று ஆர்வத்தை கூர்மைப்படுத்திக் கொள்வார்.

மாலை கட்டிய பின் எஞ்சிய பூக்களே விடுபூக்கள், அது போல ...பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் என அறிமுகப்படுத்தப்படுகிறது. வீடும் வாழ்வும், பண்பாட்டின் வாழ்வியல் என்ற இரு பிரிவுகளில் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள்.


                                                   


 "குளித்தல்" என்ற சொல்லுக்கான விளக்கமளிக்கும் முதல் கட்டுரையே பிரமிக்க வைக்கிறது. சூரிய வெப்பத்தாலும், உழைப்பாலும் வெப்பமடைந்த உடலை குளிர வைத்தலே "குளிர்த்தல்" ஆகும். மஞ்சள் நீராட்டு, ஆறாட்டு என விரியும் கட்டுரை நமக்கு பல சேதிகளை தருகிறது.

வள்ளி, உள்ளி, பூண்டு ஆகியவற்றை ஏன் பார்ப்பனர்கள் உண்பதில்லை என்பதற்கான விளக்கம், கீரையின் அன்றைய சமூக மதிப்பு ஆகியவை கூறப்படுகிறது. பழம் போடுதல், பயறு அவித்தல் ஆகிய சொல்லாடுதலுக்கான விளக்கம் ஆகியவை உணவும் குறியீடுகளும் என்ற தலைப்பில்.

மலர்களால் தொடுக்கப்படும் மாலையின் குறியீடுகள், அரசியல், அதில் பயன்படுத்தும் மலர்கள், தொடுக்கும் மக்களின் சமூக நிலை, அது சாதியானது என நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஆய்வு.

காது நீளத்தை பார்த்து வகை சொல்லும் "தொன்மை" நமக்கு சினிமாவை தான் நினைவுப்படுத்தும். ஆனால் சங்க இலக்கியங்களில் காணப்படும் பெயர் இப்போதும் புழங்குவது, சங்க இலக்கியத்தில் "பாயசம்" இடம் பெறுவது தொன்மை என நிறுவுகிறார்.

என்ன தான் வரலாற்று ஆய்வாளர் என்றாலும், கைம்பெண்ணும் சொத்துரிமையும் என்றக் கட்டுரையில் வடமாநிலங்களில் ரூப்கன்வர்கள் சதியில் எரிக்கப்படுவதற்கு, பெரியார்-அம்பேத்கர் கருத்துகள் எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கப்படாததே காரணம் என்று சொல்லும் போது, அவரது சமூக அக்கறை வெளிப்படுகிறது.

தம்பி உடையான் என்ற தலைப்பில் கீழக்கரை இசுலாமியர்களிடையே செய்குதம்பி, சக்குதம்பி போன்ற பெயர்கள் இருப்பதற்கு சேது அரச மரபினர் கொடுத்த பட்டம் என்ற விளக்கம் 17ஆம் நூற்றாண்டின் வாழ்வியலை விளக்குகிறது.

நெல்லை மாவட்டம் சிங்கிகுளம் என்ற கிராமத்தில் இருக்கும் கோவிலில் மக்கள் பகவதி அம்மனையும் முனிஸ்வரரையும் தற்போது வணங்குகிறார்களாம். ஆனால் அவை உண்மையில் என்ன திருமேனிகள் என்று அறியும் போது, கோவில்களே இவ்வளவு மாற்றம் பெற்றிருந்தால், வரலாறு எவ்வளவு திரிக்கப்பட்டிருக்கும் என்று தலை சுற்றுகிறது.

அம்பாசமுத்திரம் அருகிலுள்ள மன்னார் கோவில் கிராமத்தில் உள்ள திருமால் கோயிலின் முன் உள்ள பெண் சிலையின் ஆய்வும், திருவிழாக்கள் குறித்த ஆய்வும் நுணுக்கமானவை.

கூலி என்ற ஆங்கில வார்த்தையின் தமிழ் மூலம், ஆதிச்சநல்லூர் தொல்லியல் ஆய்வுகள் குறித்த கட்டுரைகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன.

தஞ்சைப் பெருங்கோவில் குறித்த கட்டுரையும், இராசராச சோழனின் ஏக ஆதிபத்தியம் குறித்த கட்டுரையும் ராசராசனின் சிறப்புகளையும், எதிமறைகளையும் பட்டியலிடுகிறது.

நாம் கற்ற, கற்பிக்கப்பட்ட வரலாற்றின் உண்மை தன்மையை உணர வைக்கிறார். இது அவசியம் உணரப்பட வேண்டியதாகும். நாம் காணும் தோற்றங்கள் திரிக்கப்பட்டவை, திணிக்கப்பட்டவை என்பதை பொட்டில் அறைகிறது நூல்.

வரலாற்றை உண்மையாய் அறிய விருப்பப்படுபவர்கள், வரலாற்று, பணபாட்டு ஆய்வு சிந்தனைக் கொண்டவர்கள் அவசியம் "கற்க" வேண்டிய நூல்.

இந் நூலை படிப்பவர்கள், கோவிலுக்குள் நுழைந்தால் வணங்குவதற்கு முன், கோவிலின் தல வரலாற்றை அறியவே ஆர்வம் காட்டுவார்கள். உணவை உண்பதற்கு முன் அதன் குறியீடை அறிய விரும்புவார்கள்.

நூல்: விடுபூக்கள்.
ஆசிரியர்: தொ.பரமசிவன்
பதிப்பகம்: கயல்கவின், சென்னை
விலை: ரூ 75.00

# விடுபூக்கள், மனதை விடாபூக்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக