பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

ஒரு குறும்படம் எடுத்திருக்கலாம்....

ஒரு குறும்படம் எடுத்திருக்கலாம், மிஸ்ஸாயிடுச்சி. 

மாநாட்டுக்கு இரண்டு நாள் முன்பே சென்னையில் இருந்து கிளம்பி, காரிலேயே வந்த ஆர்வம். மாநாட்டுக்கு முதல்நாள் காலை ஒரு முறை, மாலை ஒளி வெள்ளத்தில் பார்க்க ஒரு முறை என இரு முறை பந்தலை பார்வையிட்டு ஆலோசனை வழங்கிய நேர்த்தி. விரலால் மைகை வருடி, டெஸ்ட் செய்த லாகவம்.

இரண்டு மாதமாக உடன்பிறப்புகளுக்கு, முரசொலியில் ஏழு கடிதங்கள் மாத்திரமே எழுதி, அதில் இது வரை நடைபெற்ற மாநாடுகளின் வரலாற்றை எல்லாம் தொகுத்து, இயக்க உணர்வை ஊட்டி, வரலாற்று அறிவை வழங்கி, பெருந்திரளாய் திரட்டி, திருச்சியை திக்குமுக்காட வைத்த பாங்கு.

இதை எல்லாம் தாண்டி, இரண்டு நாள் மாநாட்டு நிகழ்வை கையாண்ட விதம் தான் டாப்.

காலையில் மாநாட்டு நிகழ்வுக்கு வந்தால், மதிய உணவு இடைவேளைக்கு செல்வார். மதியம் உணவு முடிந்து வந்தால், இரவு தான் அறைக்கு செல்வார். இரண்டு நாட்களும் இப்படி தான், இயற்கை உபாதைக்காக ஒரே ஒரு முறை தான் மேடைக்கு பின் பக்கம் உள்ள அறைக்கு சென்றாக நினைவு.

மேடை மீது கார் வந்து நின்று, அவரது சக்கர நாற்காலி தரையில் இறங்குவதற்குள்ளாக வணங்குவோருக்கு பதில் வணக்கம். இறங்கி மேடையை அடைவதற்குள், மேடையை ஒரு ஸ்கேன் பார்வை. ஏதாவது திருத்த வேண்டும் எனில் உடன் ஆலோசனை.

மேடைக்கு வந்தவுடன் அந்த சக்கர நாற்காலி மேடையின் நுனிக்கு செல்லும். குழுமியிருக்கும் உடன்பிறப்புகளை கண்டு மலர்ந்த முகத்தோடு, அய்ந்து விரலையும் விரித்து ஒரு கையசைப்பு. அவ்வளவு தான் மாநாட்டு திடலே ஆர்ப்பரிக்கும்.


                     

பந்தலின் கடைகோடியில் இருக்கும் தொண்டனுக்கும் தன்னை பார்த்து தலைவர் கையசைப்பதாகவே உற்சாகம். வந்தவர்களை வரவேற்றதாக அவருக்கும் நிறைவு. இது தான் அவரையும் உடன்பிறப்புகளையும் கட்டிப்போடும் பாச பந்தம்.

மேடையில் வந்து அமர்பவர் அசையாமல், அசராமல் ஒவ்வொருவர் பேச்சையும் கவனித்தார். அது வளரும் சொற்பொழிவாளரோ, கழகத்தின் முன்னோடித் தலைவரோ எல்லோர் பேச்சையும் உன்னிப்பாக கவனித்தார். அவ்வப்போது சிறு புன்னகை.


                      

அருகே வந்து வணங்குபவர்களுக்கு திருப்பி கையசைப்பு, வணக்கம். சால்வை வழங்குபவர்களுக்கு பார்வையாலேயே ஒரு நன்றி. சிறப்பாக பேசுபவர்களை பார்வையாலேயே ஒரு வருடல். கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு முறையான, உரிய மரியாதை.

லேசாக போரடிக்கும் போது முன்னால் இருக்கும் மேசையில் பென்சிலால் சிறு தட்டல்கள். எப்போதாவது சிறு பருப்பு துகளை வாயில் போட்டு மெல்லல்.  உதவியாளர் சண்முகநாதனிடம் சிறு தகவல் பரிமாற்றம்.


                        
                               

அவ்வப்போது தளபதி அவர்களுடன் ஆலோசனை...


                 

ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் நினைவு பரிசு வழங்கிய போது, ஒரு அங்கீகாரச் சிரிப்பு. இந்த படத்தை பார்த்தால் தெரியும்.

                                

தனது நிறைவு பேச்சின் போது முகத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள். “என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே” எனும் போது ஏற்படுத்தும் உற்சாகம். அண்ணன் நேருவுக்கு பாராட்டு, ராம்ஜெயம் குறித்து நெகிழ்வு, ஆளும் அரசுக்கு சாட்டை வீச்சு, கொள்கை முழக்கம் என அனைத்தும் பொதிந்த பேச்சு.

பட்டியலிட்டால் எழுத்திலடங்கா....

இதை எல்லாம் தான் ஒரு குறும்படமாக எடுத்திருக்கலாம். ஒரு ஆய்வே செய்யலாம்.

# அவர் தான் கலைஞர் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக