பிரபலமான இடுகைகள்

வியாழன், 6 பிப்ரவரி, 2014

அதுவே தலைமைப் பண்பு. எங்களுக்கும் பயிற்சி !

வழக்கமாக எனக்கு ‘லேட் கமர்’ என்று பெயர் உண்டு. யாராவது வந்து விட்டால், அவர்களுக்கு பதில் சொல்லி கிளம்புவது பழக்கம், அதனால் தாமதமாகிவிடும். இது தவிர்க்க முடியாதது. அவர்களை தவிர்த்து கிளம்பினால் மதிப்பதில்லை என்ற பெயர் வந்துவிடும்.

கழக கொறடா அண்ணன் சக்கரபாணி அவர்களுக்கு என் மீது இதில் நல்ல அபிப்ராயம். அதனால் காலை 9.30 மணிக்கு செல்லில் அழைத்தார். “சங்கர் கிளம்பியாச்சா?”. “அண்ணே ஆட்டோ ஏறிட்டேன். கரெக்ட் டைம்க்கு போயிடுவேன்”.

மாநிலங்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு வாங்க சொல்லி முதல் நாளே கொறடா சொல்லியிருந்தார். சகோதரர் டி.ஆர்.பி ராஜாவோடு போக சொல்லியிருந்தார். அவர் தொகுதி நிகழ்ச்சி முடித்து, வரத் தாமதமாகிவிட்டது. நான் மட்டும் செல்வதால், தாமதமாகிவிடுவேன் என்று கொறடா எண்ணம்.

ஆனால் 9.50க்கு சட்டசபைக்கு சென்றுவிட்டேன். சட்டபேரவை செயலாளர் அறைக்கு சரியாக 10.00 மணிக்கு நுழைந்தேன். வேட்புமனு விண்ணப்பம், வாக்காளர் பட்டியல் பெற்றுக் கொண்டேன். கழகத் தொண்டரணி தேவராஜ் அங்கு டூ-வீலரில் வந்திருந்தார். அவரோடு கிளம்பி ச.ம.உ விடுதி வந்தேன்.

அமைப்பு செயலாளர் அண்ணன் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி அவர்களிடம் பேசினேன். அறிவாலயம் வருவதாக சொன்னார். ஆட்டோ பிடித்து விரைந்தேன். வேட்பாளர் அண்ணன் திருச்சி.சிவா அவர்களும் வந்து விட்டார்கள். மனுவை தயார் செய்ய துவங்கினார்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் கிளம்புவதாக தகவல் வந்தது. முன்மொழிந்து முதல் கையெழுத்தை தலைவரிடம் பெற்று விடலாம் என்று அண்ணன் சிவா அவர்கள் சொல்ல, கிளம்பினோம். அப்போது எனது செல்லில் அழைப்பு, Private Number. சமீப காலமாய் வெளிநாட்டு அழைப்புகள் இப்படி வருவதால் குழப்பம்.

“சங்கர், ஸ்டாலின் பேசறேன். வேட்புமனு வாங்கிட்டிங்களா ?”.
“அண்ணா, மனு வாங்கிட்டேன். அறிவாலயம் வந்துட்டேன்”.
“தலைவர் கிளம்பிட போறாங்க. போய் கையெழுத்து வாங்கிடுங்க”.
“தலைவர் அறைக்கு தான் போய்கிட்டு இருக்கோம் அண்ணா”.

பேசும் போதே இணைப்பு கட்டாகிவிட்டது. தலைவர் அறைக்கு சென்று கையொப்பம் பெற்றோம். தலைவர் கிளம்பியவுடன் தளபதி அவர்கள் எண்ணிற்கு அழைத்தேன். தளபதி அவர்கள் அப்போது தான் விழுப்புரத்தில் திருமணம் நடத்தி வைத்து விட்டு கார் ஏறியிருக்கிறார்.

கார் ஏறியவுடனயே இது குறித்து அழைக்கிறார் என்றால், எவ்வளவு கண்ணும் கருத்துமாக பணியில் இருக்கிறார் என்பது புரியும். அவர் கொறடாவிடம் விசாரித்திருக்க முடியும். ஆனால் எனக்கே நேராக அழைக்கிறார் என்றால், எளிமை, அக்கறை.

அடுத்து, அன்று காலை தான் ஒரு நாளிதழில் ஒரு செய்தி, ‘திருச்சி.சிவா அவர்கள் தேர்வில் தளபதி அதிருப்தி’ என. திருப்தி என்பதும் இந்த அழைப்பிலேயே புரியும்.

மீண்டும் நான் அழைத்தேன்.

“அண்ணா, தலைவர் கையெழுத்து வாங்கிட்டோம்”
“வாங்கிட்டிங்களா. மகிழ்ச்சி”

# தளபதியின் தலைமைப் பண்பு. எங்களுக்கும் பயிற்சி !



                                          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக