பிரபலமான இடுகைகள்

புதன், 3 டிசம்பர், 2014

அதிமுக கூடாரத்தின் கோணங்கித்தனமும், கோணல்களும்…


தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக சட்டப்பேரவையை கூட்ட வேண்டுமென 07.11.2014 அன்று ஒரு அறிக்கை விடுத்தார்கள். “புதிய முதல்வர் பொறுப்பேற்றிருக்கிற வேளையில் சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும். ஆண்டு தோறும் அக்டோபர் மாதத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடத்துவது வழக்கம்.”

“அதிலும் இப்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

                   முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின். | கோப்புப் படம்

அதற்கு பதிலளித்து அறிக்கை வெளியிட்ட தற்காலிக முதல்வர் ஓ.பி.எஸ் அவர்கள் வரைமுறை இல்லாமல் வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். “சட்டசபையை எப்போது கூட்ட வேண்டுமென்று எங்களுக்கு தெரியும். சட்டசபையை கூட்ட ஸ்டாலின் ஆலோசனை சொல்ல தேவையில்லை” என்று ஜெயாவின் ஆணவ வரிகளை அறிக்கையாக வெளியிட்டார்.

அதற்கு பதிலளித்த தளபதி அவர்கள்,“சட்டப் பேரவை ஒன்றும் “கொடநாடு எஸ்டேட்” மற்றும் சிறுதாவூர் அரண்மனை போல தனி நபர் சொத்தல்ல; அ.தி.மு.க. வுக்கு மட்டும் பட்டா பாத்தியமுள்ள இடமுமல்ல. அது தமிழக மக்களின் பொதுச் சொத்து; பேரவையில் அங்கம் வகித்திடும் அனைவருக்கும் உரிய பொதுச் சொத்து.

“சட்டசபையை கேட்பதற்குக் கூட எனக்கு உரிமை இல்லை என்று சொல்வது, என்னைத் தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் குரலை நெரிப்பதற்குச் சமம்; மக்களாட்சியின் மாண்பையே காலில் போட்டு மிதித்திடும்செயல்.

ஸ்டாலின் ஆலோசனை தேவையில்லை” என்று சர்வாதிகாரப் பாணியில் எடுத்தெறிந்து பேச முற்படுவது “பன்னீர்செல்வம்” என்ற பெயருக்குப் பெரும் இழுக்கைத் தேடிக் கொடுத்து விடும். எனவே பன்னீர்செல்வம் அவர்களே “நா காக்க!” “நா காக்க!” என்று காட்டமாகவே எச்சரித்திருந்தார்.

மீண்டும் பினாமி முதல்வர் ஓ.பி.எஸ் அறிக்கை விட்டு கதையளக்கும் வேலையை தொடர்ந்தார். தலைவர் கலைஞர் அரசுக்கு கடமையை நினைவுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டார்கள். அதற்கும் குழாயடி சண்டைக்கு வந்தார் ஓ.பி.எஸ். மற்றக் கட்சி தலைவர்களும், “மிகச் சில” பத்திரிக்கைகளும் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தத் துவங்கினர்.

கூட்டம் நடத்த மனமில்லாமல் அறிக்கை மேல் அறிக்கை விட்டு அழிச்சாட்டியம் செய்த அதிமுக கூடாரம் ஒரு கட்டத்தில் பணிந்தது. டிசம்பர் 4-ல் சட்டமன்றம் கூடும் என்ற அறிவிப்பு ஒரு வழியாக வந்தது. அடுத்த கோணங்கிதனத்தை ஆரம்பித்து விட்டனர்.

சட்டமன்றம் கூடினால், எத்தனை நாட்கள் நடத்துவது, என்ன அலுவல்களை எடுத்துக் கொள்வது என்பதனை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவெடுக்கும். இந்தக் குழு வழக்கமாக சட்டமன்றம் கூடும், முதல் நாள் மாலை கூடி முடிவெடுக்கும். ஆனால் இந்த முறை சட்டமன்றம் கூடுவதற்கு முதல் நாளான இன்றே அவசரமாகக் கூடியிருக்கிறது. முதல் கோணல்.

வழக்கமாக இது போன்ற கூட்டத் தொடர்கள் ஒரு வாரம் நடக்கும். இந்தக் கூட்டத் தொடரை இரண்டு நாளே நடத்துவது என முடிவெடுத்திருக்கிறார்கள், கூட்டத்தில். எதிர்கட்சிகளான திமுக, தேமுதிக, மா.கம்யூ, மமக ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மூன்று நாட்களே நடத்த முடியும் என்று அறிவித்து விட்டார்கள்.

இதனைக் கண்டித்து இந்த எதிர்கட்சிகள் கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்து விட்டன. அப்போதும் அதிமுக ஒத்து வரவில்லை. இது அடுத்தக் கோணல்.

கூட்டம் நடக்கும் மூன்று நாட்களில், இரண்டு நாட்களுக்கு இறந்த முன்னாள் ச.ம.உ-க்களுக்கு இரங்கல் தீர்மானங்கள், கூடுதல் செலவிற்கான துணை நிதிநிலை அறிக்கை, மசோதா தாக்கல் போன்ற அரசு அலுவல்களை மேற்கொள்ள ஒதுக்கி விட்டனர்.

இறுதி நாளான மூன்றாம் நாளே துணை நிதிநிலை அறிக்கை மீது விவாதமும், பதிலுரையும் இடம் பெறுகிறது. அன்றே அதன் மீது வாக்கெடுப்பும் நடக்க இருக்கிறது. இப்படி திட்டமிட்டதற்கு காரணம், ஒரே நாள் என்பதால் எதிர்கட்சிகளுக்கு விவாதிக்க மிகக் குறைந்த நேரமே ஒதுக்கப்படும்.

அந்த நேரத்திற்குள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பிறந்த குழந்தைகளின் மரணம், மூட்டை ஊழல், பருப்பு ஊழல், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, காவேரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, யூரியா தட்டுபாடு என அனைத்தையும் பேச விடாமல் தடுத்து விடலாம் என்பது தான் அதிமுகவின் திட்டம்.

இது முற்றிலுமான கோணல்.

சட்டமன்றத்தில் பேச விடாமல் தடுத்து விட்டால், மக்களுக்கு இந்தப் பிரச்சினைகளை தெரியாமல் மறைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள் போல. மக்கள் என்ன அவ்வளவு ……………… ?

# பூனை கண்ணை மூடினால், உலகம் இருண்டு விடுமாம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக