04-12-2014. சட்டமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்
முதல் நாள்.
சற்றே பயத்துடனும், ஆவலுடனும் தான்
அவைக்குள் நுழைந்தேன். “அவர்”
அமர்ந்திருந்த இருக்கையை “பயத்துடன்” பார்த்தேன். அவையில் நுழைந்தால் நேரே அந்த இருக்கை தான்
கண்ணில் படும். ஹப்பா, இருக்கையின் மீது ஏதுமில்லை.
பரதன் போல் ஓ.பி.எஸ்
ஆட்சி புரிவார் என்று சொன்னதால் வந்த பயம். தப்பா நினைக்காதீங்க. வழக்கமா மேசை
மீது வைக்கிற “மக்கள் முதல்வர்” படத்த இருக்கை மீது வைத்து விட்டு தன் இருக்கையில்
அமர்வாரோ என்ற சந்தேகம் தான்.
ஆவலுடன் என்
இருக்கைக்கு முன் இருக்கையை சென்று பார்த்தேன். அது தான் தலைவர் கலைஞருக்கு
ஒதுக்கப்பட்ட இடம். தலைவர் அவைக்கு வருவதாக தெரிவித்த போது, சவால் விட்டாரே
ஓ.பி.எஸ். அதற்கேற்ப தலைவரது சக்கர நாற்காலி வர, வசதி செய்யப்பட்டிருக்கிறதா என்று
பார்த்தேன். செய்யப்பட வில்லை.
நான் இப்படி
பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒருவர் குறுக்கே புகுந்து சட்டப்பேரவை செயலாளர்
இருக்கையை சுற்றிக் கொண்டு போனார். அட, முதல்வர் ஓ.பி.எஸ். அம்மா அமர்ந்த
இருக்கைக்கு கூட இடையூறு இல்லாமல் சுற்றி, உள்ளே வந்தார்.
வந்தவர் முதல்வர்
இருக்கையில் அமரவில்லை. அது இரண்டு பேர் அமரக்கூடிய சோபா. அதில் ‘அவர்’ உட்கார்ந்த இடத்தை விட்டுவிட்டு கூட இன்னொரு பாதியில்
அமரலாம். ஆனால் இவரோ தனது வழக்கமான இருக்கையில் அமைச்சராகவே அமர்ந்தார். என்னே ஒரு
பக்தி !
வழக்கமாக ஜெ’ முதல்வராக இருக்கும் போது வந்தால், இரண்டு நிமிடத்திற்கு
முன்பு அவரது கண்ணாடிக் கூடு, கைக்குட்டை போன்றவை வந்துவிடும். அதை பார்த்த உடனேயே
அதிமுகவினர் அலர்ட்டாகி எழுந்து நின்று விடுவார்கள், கூப்பியக் கரங்களோடு.
ஆனால் ஓ.பி.எஸ்
யாருக்கும் தொந்தரவு இல்லாமல், சரக்கென்று வந்து அமர்ந்து விட்டார். சபாநாயகர்
தனது வழக்கமான பாதை வழியாக வந்தார். அவர் நுழையும் இடத்தில் தான் முதலமைச்சர்
நாற்காலி. அந்த காலங்களில் அங்கே அமர்ந்திருக்கும் ஜெ’வை வணங்கி தான் உள்ளே நுழைவார்.
பழக்கதோஷத்திலோ,
அல்லது மரியாதை நிமித்தமாகவோ பழைய முறையிலேயே அந்த காலி இருக்கையை நோக்கி குனிந்து,
வணங்கி நுழைந்தார். அப்போது தான் எனக்கு அடுத்த பயம் வந்தது. பதவியேற்பின் போது
நிகழ்ந்த “அழுகாச்சி காவியம்” ஒன்ஸ்மோர் ஆகிவிடுமோ என.
நல்லகாலம் குரல் தளும்பாமல்,
கண் கலங்காமல் திருக்குறளை வாசித்தார். மற்றவர்களை பார்த்தேன். யாரிடத்திலும்
சோகமில்லை, துக்கமில்லை. பளிச்சென்று மொட மொட வெள்ளை வேட்டி சட்டையில் ஜம்மென்று
அமர்ந்திருந்தனர்.
இரண்டாவது வரிசையில்
மந்திரி உதயக்குமார் மட்டும் நீண்ட தாடியுடன் மிகுந்த சோகமாக அமர்ந்திருந்தார்,
இன்னும் பிரார்த்தனை முடியவில்லை போலும் என நினைத்துக் கொண்டேன். மூன்றாவது
வரிசையில் பழைய மந்திரி பச்சைமால் தாடியோடு இருந்தார். தாடிக்கும் டை அடித்து
கருகரு’வென.
அமைச்சர்கள் செல்லூர்
ராஜூ, செந்தில்பாலாஜி, வேலுமணி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மொட்டையடித்து,
லேசாக முடி வளர்ந்து வந்திருந்தனர். துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மட்டும்
மழமழவென ஃபிரெஷ் மொட்டை தலையாக அமர்ந்திருந்தார்.
# சிம்பாலிக்கா மின்கட்டண
உயர்வ சொல்லியிருப்பாரோ பொள்ளாச்சி ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக