பிரபலமான இடுகைகள்

அதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

பிரேக்கிங் நியூஸ் காலம் !

இந்த "பிரேக்கிங் நியூஸ், பிக் நியூஸ்" பரபரப்பில் ஒரு விஷயத்தை ஊடகங்கள் மறைக்க முனைகிறார்கள்.

அது தளபதி ஸ்டாலின் அவர்களின் நிதானம், கண்ணியம்.

ஜெயலலிதாவால் வெற்றி பெற்ற 134 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு, அதிமுக இரண்டு தரப்பாக பிரிந்து 'பகடை' ஆடிக் கொண்டிருக்கிறது. கட்சியை கைப்பற்றுவதில் நடைபெறுவது இன்னும் அதிகம். ஆனால் அது அவர்கள் உள்கட்சி விவகாரம்.

அதே சமயம் ஆட்சி விவகாரத்தில் நடைபெறும் ஆட்டம், அவர்கள் கட்சிக்கானது மாத்திரமல்ல. தமிழக மக்களின் வாழ்வு சம்பந்தப்பட்டது. வாக்களித்தவர்கள் மாத்திரமல்ல, வாக்குரிமை இல்லா குழந்தைகள் வாழ்வையும் பாதிக்கும் விவகாரம், இவர்கள் ஆட்சிப் பொறுப்பு குறித்து நடத்தும் 'கண்ணாமூச்சி விளையாட்டு'. ஆட்சி இயந்திரம் இயங்காமல் முடங்கியே போய் விட்டது.

134 பேரில் ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் எத்தனை பேர், சசிகலா அவர்களிடம் எத்தனை பேர் என்பது 'கன்னித்தீவு ரகசியம்' போல் நீடிக்கிறது. ஆளுநர் மாளிகையிலோ, சட்டசபையிலோ பலம் நிரூபிக்கப் படும் வரை இந்தக் குழப்பம் நீடிக்கும். அதுவரை இருவருமே எங்களிடம் 'தான்' அதிக எண்ணிக்கை என அறிவித்தவாறு இருப்பார்கள்.

ஆனால் குழப்பமே இல்லாத எண்ணிக்கையிலான சட்டமன்ற உறுப்பினர்களை திமுக கொண்டிருக்கிறது. 89 பேர். மிக முக்கியமான ஒரு எண்ணிக்கை, இன்றைய காலக்கட்டத்தில். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க வேண்டும் என்று நினைத்தால், திமுக ஒரே ஒரு கடிதத்தை ஆளுநர் இடம் அளித்தால் போதும்."எங்கள் இடம் மெஜாரிட்டி இருக்கிறது" என்ற ஒற்றை வரி கடிதம் போதும்.

சசிகலா எப்போது பொதுச்செயலாளர் ஆனாரோ, அப்பொழுதில் இருந்தே பொதுமக்களிடம் இருந்து எழும் வினா ஒன்றே ஒன்று தான், "திமுக ஏன் அமைதி காக்கிறது?". வேகமான தி.மு.கழகத் தோழர்களே வலைதளங்களில் இன்னும் காட்டமாக எழுதினார்கள்," மிக்சர் தின்பது ஓ.பி.எஸ் அல்ல, தி.மு.க தான்". சிலர் வெளிப்படையாகவே கேட்டார்கள், "30 எம்.எல்.ஏக்களை அதிமுகவில் இருந்து உடைத்து ஆட்சி அமைக்க வேண்டியது தானே?".

அது எளிதான காரியம் தான், ஆனால் காலம் எல்லாம் பழிச் சொல்லுக்கு ஆளாக்கும் செயல். திமுக அந்த காரியத்தில் இறங்கவே இல்லை. மிக நிதானமாக அடிகளை எடுத்து வைத்தார் தளபதி அவர்கள். "ஆட்சியின் நலத் திட்டங்களை ஆதரிப்போம்" என்று அறிவித்தவர், ஆட்சியின் அவலங்களை தட்டிக் கேட்பதில் முன்னால் நின்றார்.

ஜல்லிக்கட்டு பிரச்சினை, மாணவர்கள் மற்றும் மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம், விவசாயிகள் பிரச்சினை, நீட் தேர்வு எதிர்ப்பு என மக்கள் நலன் சார்ந்தப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, அரசின் மீது சாட்டையை சொடுக்கினார். தளபதி அவர்கள் கேள்விகளுக்கு பிறகே அரசு செயல்பட்டது, பல விவகாரங்களில்.

இந்த நேரத்தில் தான், சசிகலாவின் ஆட்சியை பிடிக்கும் வேலை நடந்தது. தமிழகம் எங்கும் சசிகலாவிற்கு எதிரான மனநிலை தான். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகளைத் தவிர அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சசிகலாவிற்கு எதிரான தீவிர நிலைப்பாட்டில் உள்ளனர்.

இப்போது திமுக மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகிவிட்டது. இவர்கள் ஏன் ஆட்சி உரிமை கோரக் கூடாது என்ற கேள்வி பொதுமக்களிடத்தில் வலு பெற்றிருக்கிறது.

ஓ.பி.எஸ்ஸோடு எத்தனைப் பேர் என்று தெரியாமல், இப்போது ஐந்து பேர் இணைந்திருக்கிறார்கள். இதுவே திமுக உரிமை கோரினால், கூடுதல் எண்ணிக்கையில் அதிமுகவில் இருந்து, திமுக பக்கம் புலம் பெயரும் வாய்புள்ளது என்பது பொதுவாக எழுந்திருக்கும் கருத்து. அதிலும் தேர்தல் வந்தால் திமுக வெற்றி பெறும் என்ற நிலையில் பலரும் திடமான முடிவெடுப்பார்கள்.

ஆனால் இப்போதும் தளபதி சொல்கிறார், "அதிமுக உறுபினர்களின் உண்மை மன நிலை அறிந்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்". அவர்கள் உரிமையில் தலையிடவில்லை என்பதை தெளிவுப் படுத்தியிருக்கிறார்.

ஆட்சி அதிகாரத்திற்கு அதிமுகவினர் அடித்து கொள்ளும் வேலையில், ஜனநாயக ரீதியாக திமுக அமைதி காக்கிறது, தளபதி கண்ணியமாக செயல்படுகிறார் என மக்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் வழக்கம் போல் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் 'பிரேக்கிங் நியூஸிலேயே' கண்ணாக இருக்கின்றனர். இவர்கள் மறைப்பதை வரலாறு பதிவு செய்யும்.

# பிரேக்கிங் நியூஸை வரலாறு வெல்லும் !

வியாழன், 9 பிப்ரவரி, 2017

ஐ சப்போர்ட் சசிகலா

ஐ சப்போர்ட் சின்னம்மா சசிகலா.

சின்னம்மா அவர்களின் அளப்பறிய திறமை காரணமாகத் தான் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருக்கிறார்.

ராஜாஜி, காமராஜர், அண்ணா அமர்ந்த முதல்வர் நாற்காலிக்கு 'இன்ச்' அளவிற்கு நெருங்கி நிற்கிறார் என்றால் அது அவரது உழைப்பு மற்றும் திறமை. படிப்படியாகத் தான் முன்னேறி இருக்கிறார். இதை எல்லோரும் மறைக்கிறார்கள்.

கணவர் அரசுப் பணியில் இருக்கிறார் என்று சும்மா இருந்துவிடாமல், வெளிநாடு சென்று வீடியோ தொழில் குறித்து கற்றறிந்தார். அப்போது யாருமே அதற்காக மெனக்கடாத காலம். இந்தத் தொழில் பிற்காலத்தில் சிறக்கும் என உணர்ந்தது தான் அவரது திறன். அந்த அடிப்படையில் தான் பிற்காலத்தில் ஜெயலலிதா இந்த உயரத்தை அடைந்திடுவார் என கணித்து அவர் நட்பை தேடிப் பிடித்தார். இது அவரது 'கணிப்பை' உறுதி செய்கிறது.

கணவரின் அரசுப் பணியை பயன்படுத்தி மாவட்ட ஆட்சியரின் நட்பைப் பெற்றார். அவர் மூலம் தான் ஜெயலலிதாவை நெருங்கினார், ஒரு நிகழ்ச்சிக்காக. அத்தோடு நிறுத்திவிடாமல், தொடர்ந்து ஜெயலலிதாவை அணுகி அவருக்கு உதவிகள் புரிந்தார். அதன் மூலம் ஜெ'வின் அறிவிக்கப்படாத உதவியாளர் இடத்தைப் பிடித்தார். இது அவரது 'பழகும் பண்பை' வெளிப்படுத்துகிறது.

1991ல் ஜெயலலிதா ஆட்சியை பிடித்த உடன், தன்னை உடன்பிறவா சகோதரியாக அறிவிக்க வைத்தார். தனது அக்காள் மகன் சுதாகரனை, ஜெயலலிதாவின் 'வளர்ப்பு மகனாக'  ஆக்கினார். அவர் திருமணத்தில் இருவரும் ஒட்டியாணம் அணிந்து நடந்தக் காட்சி தான் இன்றைக்கும் அவரது முத்திரை. இது அவரது 'லாபியிங் பவரை' காட்டுகிறது.

1996 திமுக ஆட்சியில், சொத்துக்குவிப்பு வழக்கின் போது, ஜெயலலிதா வாயால் சசிகலா குரூப்பை ஒதுக்கி வைப்பதாக அறிவிக்க வைத்து, பிறகு கூடி கும்மியடித்தது வரலாறு. அப்புறமும் உடன்பிறவா சகோதரியாய் பயணித்தார். ஜெயலலிதாவாலும் தவிர்க்க இயலவில்லை. அது தான் சசியின் 'ஈர்ப்புத் திறன்'. அது கடைசி வரை வேலை செய்தது, சசியின்  'ஆளுமையை' நிலைநாட்டியது.

2001ல் மீண்டும் அதிமுக ஆட்சி. கடந்த ஆட்சிக்காலம் போல் சிக்கலில் மாட்டாமல், இந்த முறை வெளி நாடுகளில் முதலீட்டை துவங்கினார். ஒரு தீவு கையகப் படுத்தப்பட்டது. குடும்பத்தில் ஒவ்வொருவராய் அரசியலில் அறிமுகப்படுத்தினார். பிசிறடித்து, 'அக்கா ஜெ' கோபத்திற்கு ஆளானால், அடுத்தவரை இழுத்து வந்தார். தினகரனில் துவங்கி டாக்டர்.வெங்கடேஷ் வரை இழுத்து வந்தார். இது அவரது 'குடும்ப பாசத்தை' உறுதிப் படுத்துகிறது.

2006 திமுக ஆட்சி வந்தபிறகு சொத்து குவிப்பு வழக்கு மீண்டும் உயிர் பெற்றது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் சசி தான் எனக் காரணம் காட்டி , 'சசியை' போயஸ் தோட்டத்தை விட்டு வெளியேற உத்தரவிட்டார் ஜெயலலிதா. சசியும் வெளியேறினார். இரண்டே மாதங்கள் தான், சசி ஜெ-வை  சமாதானப்படுத்தி கார்டன் நுழைந்தார். மெல்ல, மெல்ல அதிகாரத்தில் தன் கரம் நுழைத்து ஓங்கச் செய்தார் சசி. இது அவரது 'சூழ்ச்சித் திறனை' வெளிக் கொணர்ந்துள்ளது.

2011 தேர்தல் குறித்து அவர்களுக்கே குழப்பம். ஆனால் ஆட்சி அமைந்தது. அப்போது தான், ஆட்சி அதிகாரத்திலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். காவல்துறையில் 'தன்னர்'களை உயர் இடத்தில் கொண்டு வந்து அமர்த்தினார். கொஞ்சம், கொஞ்சமாக ஆக்டோபஸாய் கரம் விரித்தார், தமிழ்நாட்டை வளைத்துப் பிடித்தார். இது தான் இவரது 'மேலாண்மை'யை காட்டுகிறது.

2016ல் உடல்நலம் குறைந்த ஜெயலலிதாவை முன்னிறுத்தி பனியாற்றினார். வெற்றி பெற்ற பிறகு ஆட்சியை அதிகாரத்தோடு செலுத்தினார். 75 நாட்கள் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார் என சொல்லியே, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை உலகிற்கே காட்டாமல் வைத்திருந்தது இவரது 'ரகசியக் காப்புத் திறனை' எடுத்துக் காட்டுகிறது.

இப்படி சசிகலாவின் " 'கணிப்புத் திறன்', 'பழகும் பண்பு', 'லாபியிங் பவர்', 'ஆளுமை', 'குடும்பப் பாசம்', 'சூழ்ச்சித் திறன்', 'மேலாண்மை', 'ரகசியக் காப்புத் திறன்' "ஆகியவை வெளிப்பட்டுள்ளது. இனி இப்படியொருவர் கிடைக்கப் போவதில்லை. இவர் மாத்திரம் வந்தால், இந்தத் திறமைகளை எல்லாம் பயன்படுத்தி, இந்தியாவை உயர் வழிக்கு கொண்டு செல்வது எளிது.

இவர் பிரதமரானால், இந்தியா 'ஏக இந்தியா' ஆக முழு நடவடிக்கைகள் துவங்கும். எதிர்கட்சிகள் முடக்கப்படும்.  காவிரி, பாலாறு, பெரியாறு 'மொத்தமாக' முடிக்கப்படும். அயல்நாடுகள் கண்ட்ரோலுக்கு கொண்டு வரப்படும்.

# ஆதலால், ஐ சப்போர்ட் சின்னம்மா சசிகலா ஃபார் பி.எம். !

வியாழன், 29 டிசம்பர், 2016

மனிதர் உணர்ந்து கொள்ள...

அண்ணன் செங்கோட்டையனை நான் நிரம்ப ரசிப்பேன். அப்போது அவர் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர். நான் ஆளும் திமுக சட்டமன்ற உறுப்பினர். ஆமாம் 2006ம் ஆண்டு. சட்டமன்றத்தில் அண்ணன் உறுமுவார். திமுக அமைச்சர்கள் பேசுவதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் தலையை மறுத்து,மறுத்து ஆட்டுவார். எழுந்தால் கடுமையாக எதிர்த்து பேசுவார்.

அப்போது வேறு சில முன்னாள் அமைச்சர்களின் செயல்பாடுகளையும் கவனித்திருக்கிறேன். கேமரா நோக்குவதால், நின்று பேசும் போது பொங்குவார்கள், பேசி உட்காரும் போதே கண்டித்த அமைச்சர்களை  நோக்கி புன்முறுவல் பூப்பார்கள். ஆனால் அண்ணன் செங்கோட்டையன் அப்படி கிடையாது. பேசும் போதும் கண் பார்க்கமாட்டார், உட்கார்ந்தாலும் பார்க்கமாட்டார்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகமும் அப்படி தான். திமுகவை எதிர்ப்பதென்றால் வெல்லம் சாப்பிட்ட மாதிரி. குலுக்கிவிட்ட சோடா பாட்டில் மாதிரி பொங்குவார்.

2011ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அண்ணன் செங்கோட்டையன் அமைச்சர். நான் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர். நான் கொஞ்சம் முந்திரிகாட்டு மண்ணுக்கே உரித்தான 'தொட்டால் பற்றிக் கொள்ளும் தயார் நிலையில்' இருப்பேன். அதனால் பலமுறை அன்றைய முதல்வர் ஜெயலலிதாவோடு, ஓ.பி.எஸ்ஸொடு, சபாநாயகரோடு மோதிக் கொண்டிருப்பேன். நான் எழுந்தாலே வெளியே அனுப்புவார்கள்.

எழாத ஒரு நாளும், நான் வம்பு செய்ததாக அண்ணன் ஓ.பி.எஸ் புகார் செய்யுமளவு நிலை. அப்படி ஒரு நாள் சபாநாயகர் அறையில் அண்ணன் செங்கோட்டையன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு. "என்ன சிவசங்கர் எப்பவும் பிரச்சினையா?" என்றுக் கேட்டார். "அண்ணா, நேத்து அவ்வளவு இல்லையே அண்ணே", என்றேன். " இல்லை சிவா. சலங்கை கட்டி ஆடறது, சலங்கை கட்டாம ஆடறதுன்னு ரெண்டு வகை இருக்கு. நேத்து கட்டாம ஆடுனிங்க. அவ்வளவு தான்"என்று சிரித்தார்.

அப்போது தான் தெரிந்தது, அவரது வெற்றி ரகசியம். கோபி தொகுதியை ரவுண்டு கட்டி, எல்லோரிடமும் அன்பாக பேசி வென்றிருக்கிறார். ஜெயலலிதா தேர்தல் சுற்றுப்பயணம் கிளம்பினால், இவர் தான் ரூட் போட்டு தருவார். அதிமுகவில் இவர் அளவிற்கு தமிழகத்தையும், அதிமுகவையும் அறிந்தவர்கள் கிடையாது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போதே இவரது அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்தாலும், இவருக்கு சீட் கொடுக்காமல் இருக்கவில்லை. காரணம், இவரது தாக்கம் கொங்கு பெல்ட்டில் என்ன என்பதை ஜெயலலிதா நன்கு அறிந்தவர்.

சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக காட்டிய வேகத்தை தான், அமைச்சர் ஆன பிறகும் சி.வி.சண்முகம் காட்டுவார். செங்ஸ் போல் எதிர்கட்சி ச.ம.உ களிடம் பேச மாட்டார். அதே டென்ஷன் போஸ் தான் கொடுப்பார். இன்னும் சொல்லப் போனால் ஜெயலலிதாவை பார்த்தும் பெரிதாக ரியாக்‌ஷன் இருக்காது. ஜெயலலிதா சட்டமன்றத்தில் நுழையும் போதும், ஏதாவது அறிவிப்பு வெளியிடும் போதும் அண்ணன் ஓ.பி.எஸ் வளைந்து வணங்குவது உலகப் பிரசித்தம்.

ஆனால் சி.வி.சண்முகம் அது போல் வணங்கி நான் பார்த்ததில்லை. அதேபோல கடந்த தேர்தலில், இவரை வேறொரு  தொகுதியில் ஜெயலலிதா வேண்டாவெறுப்பாக தூக்கிப் போட்டும் வென்று வந்தார். எடப்பாடி பழனிசாமியும் இவர் போல் தான். அளவோடு வளைந்தே ஜெயலலிதாவை வணங்குவார். உறுப்பினர்கள் கேள்வி கேட்டாலும் "அம்மாவின் பார்வைக்கு கொண்டு செல்கிறேன்" என்று மற்ற அமைச்சர்களை போல் வழக்கமான பல்லவியை பாடமாட்டார். தன்னிச்சையாக பதிலளிப்பார்.

ஆனால் அப்போதே அண்ணன் ஓ.பி.எஸ் பெர்ஃபார்மன்ஸ் வேறு. அவர் போன்று பணிவையும், விசுவாசத்தையும், அன்பையும், பக்தியையும், நம்பிக்கையையும் உடல்மொழியால் வேறு ஒருவரால் வெளிப்படுத்த முடியாது. எல்லோரும் பிரமிக்கக் கூடியது. அந்த நாட்களில் அதை ரசித்து நான் தனி நிலைத்தகவலே போட்டிருக்கிறேன்.

சமீப நாட்களில் தொலைக்காட்சியை பார்க்கும் போது அண்ணன் ஓ.பி.எஸ் மட்டும் தான் மாறாமல் அப்படியே இருக்கிறார்.

அண்ணன் செங்கோட்டையன் தொழுத கரங்களும், இறைஞ்சும் கண்களாய் இருக்கிறார். சி.வி.சண்முகம் வணங்கும் போது, அவர் தலை குனிந்திருந்த பாங்கும், அவர் கைகள் வணங்கி இருந்த இடமும் மெய் சிலிர்க்க வைக்கிறது. எடப்பாடி பழனிசாமி, 'அபிராமி, அபிராமி' என்று இருந்த பக்தி கோலம் கிறங்கடிக்கிறது. இது எல்லாம் அம்மா காலத்தில் காணாதது.

# மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல...

புதன், 26 பிப்ரவரி, 2014

இந்தியாவையே அதிரடிக்கும் தேர்தல் அறிக்கை...

நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை - பிற்சேர்க்கை...

                            

1. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் நிதி நிலைமை மிகவும் சீர் கெட்டிருப்பதால், அதனை சீராக்க தமிழகத்தின் நிதி நிலைமையை சீர் செய்த, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இந்தியாவின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு, "அதிரடி"யாக நேர் செய்யப்படும்.

2. தமிழகத்தின் மின் வெட்டை 2 மணி நேரத்திலிருந்து, 4-14 மணி நேரமாக போராடி உயர்த்திய, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நத்தம்.விஸ்வநாதன் இந்திய மின்சாரத் துறை அமைச்சராக பதவியமர்த்தமப்பட்டு மின்சாரம் "சரி" செய்யப்படும்.

3. ராஜஸ்தான், குஜராத், உ.பி, ம.பி போன்ற வடமாநிலங்களில், குடிநீர் பஞ்சம் நிலவுவதாக வருத்தத்திற்குரிய செய்திகள் வருகின்றன. எனவே மலிவு விலையில் குடிநீர் விற்க போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, இந்திய போக்குவரத்துக்கு மாற்றப்படுவார்.

4. அமைய இருக்கிற மக்களவையை செயல்பட விடாமல் தடுக்க, மோடியும், ராகுலும் தனித் தனியாக திட்டமிடுவதாக தகவல் வந்துள்ளது. அவர்களுக்கு "உரிய முறையில்" பதிலளிக்க தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்திய சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுவார்.

5. இந்திய அளவில் இடைத் தேர்தல்கள் வருவது தவிர்க்க இயலாது. அதனை கையாளுவதற்கென்று ஒரு துறை எனது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டு, தமிழக அமைச்சர் பா.வளர்மதி படையமர்த்தப்படுவார்.

6. இந்தியா முழுவதும் இருக்கும் மாடுகள் "அம்மா" என்று தான் கதறுகின்றனவா என்று கண்டறியவும், ஒரு மாநிலத்தில் மேயும் மாடுகளை பிடித்து அடுத்த மாநிலத்தில் இலவசமாக கொடுக்கவும், கால்நடைத் துறை ஏற்படுத்தப்பட்டு, தமிழக மந்திரி சின்னையா நியமிக்கப்படுவார்.

7. பாராளுமன்றத்தில் புதிய வரலாறுகளை சொந்தமாகக் கூறவும், கடந்த கால ஆட்சி மீது குறை சொல்லியே எல்லாப் பிரச்சினைகளையும் சமாளிப்பதற்காகவும் உள்துறை அமைச்சராக, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி நியமிக்கப்படுவார்.

8. இந்தியாவில் உள்ள எல்லா மாநகராட்சிகளையும் இணைத்து, அந்த கூட்டமைப்பின் மேயராக சைதை துரைசாமி நியமிக்கப்பட்டு, எல்லா இடங்களிலும் அம்மா உணவகம், அம்மா திரையரங்கம், அம்மா மருந்தகம் திறக்கப்பட்டு, அந்த மாநகரங்களும் "சென்னை"யை போலவே 'சிறப்பாக' பராமரிக்கப்படும்.

9. விதி 110-ன் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிடும் போது, அதனை வரவேற்று பேசுவதற்காகவே, ஏற்கனவே அனுபவம் வாய்ந்த செ.கு.தமிழரசன், சரத்குமார், தனியரசு ஆகியோரோடு தா.பாண்டியன், பண்ருட்டி, வேல்முருகன் ஆகியோர் நியமன எம்.பிக்களாக நியமிக்கப்படுவார்கள்.

10. தமிழக சட்டசபை போல, இந்திய பாராளுமன்றம் சுமுகமாக நடக்க வழிவகை செய்யப்படும். பேசினால் மைக் கட் செய்யவும், போராடினால் தூக்கி வெளியே போடவும், பேட்டி கொடுத்தால் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரவும் தமிழக சபாநாயகர் தனபால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் சேர்த்து சபாநாயகராக செயல்படுவார்.

# கும்தலக்கா கும்மாவா அம்மான்னா சும்மாவா.....

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

அம்மா என்றால் அன்பு



முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் Dr. தேவராஜன் அ.தி.மு.கவிலிருந்து நீக்கம் - ஜெயா டி.வி பிளாஷ்.

டாக்டர் தேவராஜன் பள்ளியில் படிக்கும் போது அவரது வகுப்புத் தோழர் கோவிந்தசாமி. பிறகு நெருங்கிய நண்பர்களாகிறார்கள். தேவராஜ் பள்ளிப் படிப்பு முடித்து மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். கோவிந்தசாமி தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியில் சேர்கிறார்.

டாக்டராகும் தேவராஜ் பெரம்பலூர் நகரில் பிராக்டீஸ் செய்கிறார். திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தி.மு.கவில் இணைகிறார். ஒன்றிய செயலாளராக ஆகிப் பணியாற்றுகிறார்.

கோவிந்தசாமி மின்வாரிய தொ.மு.சவில் இணைந்துப் பணியாற்றுகிறார். பெரம்பலூர் நகரத் தி.மு.கவில் 8 -வது வார்டு செயலாளராகவும் செயல்படுகிறார். பள்ளி நண்பர்கள் தேவராஜனும் கோவிந்தசாமியும் இப்போது கழகத் தோழர்களாகிறார்கள்.

இடையில் ம.தி.மு.க துவங்கிய நேரத்தில் பெரும் தலைகள் பலர் அங்கு சென்றார்கள். அப்போது டாக்டர்.தேவராஜன் தொடர்ந்து கழகத்திலேயே பணியாற்றுகிறார். 1996 பொதுத் தேர்தல் வருகிறது. கழகத்தின் சார்பில் பெரம்பலூர் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.

சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு பெற்று 1996 - 2001 ஆம் ஆண்டு பணியாற்றுகிறார். 2001 அ.தி.மு.க ஆளுங்கட்சியாகிறது. பெரம்பலூர் நகராட்சிக்கு இடைத் தேர்தல் வருகிறது. அப்போது கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கழகத்தில் இருந்து நீக்கப்படுகிறார். அ.தி.மு.கவில் இணைகிறார், பணியாற்றுகிறார்.

இப்போது கோவிந்தசாமி தனது மகன் மூர்த்திக்கு திருமண ஏற்பாடு செய்கிறார். கழகக் கொள்கைப்பரப்பு செயலாளர் அண்ணன் ஆ.ராசா அவர்கள் தலைமையில் திருமணம் 01.09.2013 அன்று. 10.30 மணிக்கு மேடை ஏறுகிறோம். திருமண மேடைக்கு டாக்டர்.தேவராஜன் வருகிறார். மேடையில் அழைத்து அமர வைக்கிறார்கள்.

திருமணத்தை அண்ணன் ஆ.ராசா நடத்தி வைக்கிறார். கழகத் தோழர்கள் வாழ்த்தி பேசுகிறார்கள். திருமணத்தை தொகுத்து வழங்கிய நான் டாக்டர்.தேவராஜன் அவர்களை வாழ்த்த அழைத்தேன். அவரும் வாழ்த்தி பேசினார். நிறைவாக அண்ணன் ஆ.ராசா அவர்கள் வாழ்த்தி பேச ஆரம்பித்தார்கள்.

அப்போதே மேடையில் இருந்தவர்களது செல்ஃபோனுக்கு அழைப்பு அலற ஆரம்பித்தது. "என்ன டாக்டர் தேவராஜன் திமுக திருமணத்தில் கலந்து கொண்டாரா ?". உளவுத் துறை காவலர்கள் பாய்ந்து வந்தனர். 11.30க்கு திருமண நிகழ்வு முடிந்து அண்ணன் ஆ.ராசா அவர்களோடு அடுத்த திருமணத்திற்கு கிளம்பினோம்.

அ.தி.மு.கவினர் தலைமையகத்திற்கு ஃபேக்ஸ் கொடுக்க ஆரம்பித்து விட்டதாக தகவல் வர ஆரம்பித்தது. காவல்துறையிடம் அறிக்கை கேட்டிருப்பதாக தகவல். இரவு மணி 8.30. ஜெயா தொலைக்காட்சியில் ஃபிளாஷ் மின்ன ஆரம்பித்தது. நீக்கம். இன்னா ஸ்பீடு....

Dr. தேவராஜன் நேற்று இந்தத் திருமணத்தில் கலந்துக் கொண்டது தான் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணம், அது தான் அவர் செய்த குற்றம். நாற்பது ஆண்டு கால நண்பரிடம் அவர் காட்டிய அன்புக்கு கிடைத்த கட்சி தலைமையின் பரிசு !

# அம்மா என்றால் அன்பு !