புது வருட பிரகடன நிலைத்தகவலை முகநூலில் பார்த்துவிட்டு அண்ணன் எம்.எம்.அப்துல்லா அழைத்தார். "படகுப் பயணம் போகனும்னு போடிருக்கீங்கள்ல. போலாமா?", என்றுக் கேட்டார். "எங்கண்ணே?". "கேரள எல்லை. உங்க ஸ்டேட்டஸ் பார்த்துட்டு ஜோ மில்டன் கூப்பிடச் சொன்னார். சிங்கப்பூரிலிருந்து கிறிஸ்துமஸ்க்கு வந்திருக்கார்".
காரில் சென்றடைந்தோம். நாறோயில் தாண்டி கடற்கரை நோக்கி பயணித்தோம். ஜோவின் ஊரான பள்ளம்துறையை அடைந்தோம். வழி எல்லாம் பெரியதும், சிறியதுமாக சர்ச்சுகள். கேரள சாயல் அடிக்கிறது. கடலை ஒட்டி வீடுகள். சில சமயங்களில் கடல் அலைகள் வீட்டை வந்து தொட்டு விளையாடுமாம். குழந்தைகளுக்கு தாலாட்டெல்லாம் தனியாகப் பாட வேண்டாம். அலையே தாலாட்டுகிறது.
கடலூரில் பணியாற்றும் ஜோவின் மாமா இல்லத்தில் எங்கள் தங்கல். பெங்களூர் தனசேகர், கோவை உதயமாறன் இணைந்தார்கள். காலை உணவுக்கு ஜோ இல்லம் சென்றோம். ஆப்பம்,ஸ்டூ. மலையாள சுவை. "காலையிலேயே மட்டனா?"என்றார் டாக்டர் செந்தில். " இது பீஃப்", என்றார். இரண்டு பேர் ஷாக் ஆனார்கள். "வீட்ல பீஃப்பா?", என்ற மெல்லியக் குரல். நான் கேரள பயணத்தில் பரோட்டா-பீஃப் ரசிகர் என்பதால் மகிழ்வாய் சுவைத்தேன்.
அப்போது ஜோ தன் அனுபவத்தை சொன்னார். "பிளஸ் டூ வரை கன்யாமரி தாண்டியது கிடையாது. காலேஜ்க்கு திருச்சி போனேன். ஞாயிற்றுக் கிழமை ஆனதும் பீஃப் நினைவு. எங்கே கிடைக்கும் என்று கேட்டால் வேற்றுக் கிரகவாசி போல பார்த்தார்கள். பீஃபே பார்க்காத ஆள்லாம் இருக்காங்கன்னு கேள்விப்பட்டு எனக்கு வெளிநாடு வந்தமாதிரி ஆயிடுச்சி. அப்புறம் சிங்காரத்தோப்பு கிட்ட ஒரு கேரள மெஸ் கண்டுபிடிச்சேன். திருச்சியில அது தான் வாழவச்சது".
" மீனவர் கிராமத்தில் மாட்டிறைச்சி இவ்வளவு விருப்ப உணவா?". "ஆமாம். சின்ன வயசுல ஞாயிற்றுக் கிழமை காலையில் சர்ச்க்கு போகும் போது பார்த்தா மாடு நிற்கும். வெளியில வரும் போது, இறைச்சியா இருக்கும். அரை மணி நேரம் தான். விற்று தீர்ந்துடும்". மலரும் நினைவுகள் சொன்னார் அண்ணன் ஜோ.
பயணம் கிளம்பினோம். கடற்கரையை ஒட்டியே கார் சென்றது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் கடல். தெரு முனையில் ஒரு தூண். தூண் மேல் ஒரு சிறு மாடம். அதனுள் மாதா சிலை. அடுத்த கிராமத்தில் வித்தியாச அமைப்பு. தெரு முக்கில் இருக்கும் பிள்ளையார் கோவில் அளவுக்கு. " இது என்ன?" என்று கேட்டேன். "இது குருசடி அல்லது கெபி எனப்படும், இங்கேயும் வழிபடுவார்கள்". "அப்போ சர்ச்?". " சர்ச்சும் செல்வார்கள். அங்கே தான் பூசை வழிபாடு நடைபெறும்". குருசடியை இங்கு தான் முதலில் பார்க்கிறேன். உடன் வந்த டாக்டர் மன்றாடி புருசோத்தமராஜன்," கெபி, சர்ச், கதீட்ரல்க்கான வித்தியாசங்களை" விளக்கினார். கதீட்ரல் மறை மாவட்ட அளவில் இருக்கும் தலைமையகம்.
வழியில் புத்தன் துறை, கேசவன் புத்தன்துறை, பெரியகாடு, ராஜாக்கமங்கலம் என மீனவ கிராமங்கள். கன்யாமரி மாவட்டத்தில் இருந்து கேரள எல்லை நீரோடி வரை கிட்டத்தட்ட 45 மீனவ கிராமங்கள். ஒவ்வொரு கிராமத்திலும் குருசடி தவிர்த்து பிரம்மாண்ட சர்ச் இருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவமைப்பில். பள்ளத்தில் இருக்கும் சர்ச் ரஷ்ய கிரெம்ப்ளின் மாளிகையை நினைவூட்டுகிறது.
இந்தப் பிரம்மாண்ட சர்ச்சுகள் புயல் போன்ற பேரிடர் காலங்களில் அபயம் அளிக்கும் இடம். கிட்டத்தட்ட 250 ஆண்டுகாலப் பழமையானவை. இந்தக் கடலோர கிராமங்களில் முழுவதும் கிறித்தவ கத்தோலிக்கர்கள் தான். 480 ஆண்டுகளுக்கு முன் கிறித்தவத்தை தழுவியவர்கள். மூச்சு விடாமல் மண் பெருமையை சொல்லி வந்தார் ஜோ. சிங்கப்பூர் சென்று பதினெட்டு வருடங்கள். ஆனாலும் மண் பாசம் விடவில்லை.
கேரள-தமிழ்நாடு எல்லையில் உள்ள பூவார் சென்றடைந்தோம், இளையராஜாவோடு. படகுப் பயணம். சிறு அளவில் அலையாத்திக் காடுகள். இரண்டு மணி நேரம் சுற்றி வந்தது படகு. கடல் வரை சென்று திரும்பினோம். அண்ணன் ஜோ அன்பில் புத்தாண்டு பிரகடனம் ஒன்று நிறைவேறியது. பயணம் முடிவதற்குள், சூழலில் லயித்த துணை இயக்குநர் டான் அசோக் இரண்டு சீன்களை எழுதி இருந்தார்.
இரவு உணவுக்கு மீண்டும் ஜோ இல்லம். ஜோ அண்ணன் பிரிட்டோ, பொன்னாரை மீன் குழம்பு, விளை மீன் பொழிச்சது, அயிலை மீன் கட்லெட் ஆகியவற்றோடு காத்திருந்தார். உபசரித்தே திணறடித்தார் அண்ணன் பிரிட்டோ. "போதும்ணே". "இல்ல. உங்க ஊர்ல இதெல்லாம் கிடைக்காது", அன்பில் மூழ்கடித்தார். பெங்களூரில் பணிபுரியும் டாக்டர் ஆல்டோ," ஆக்சுவலாயிட்டு எங்க ஊர்ல மட்டும் தான் கிடைக்கும் இதெல்லாம்"என்றார். உண்டு முடித்து, மூச்சு விட முடியாமல் நெளிந்தேன். கடற்புறத்து மக்களின் அன்பும் கடல் போல் பெரிதாய்.
"குருசடி அந்தோணியப்பரே இவர்களைக் காத்தருள்வீராக"
(மார்ச் மாத அந்திமழை இதழில் விருந்தினர் பக்கத்தில் எனது பத்தி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக