பிரபலமான இடுகைகள்

பயணக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயணக் கட்டுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 மார்ச், 2017

கன்யாமரி பயணம்

புது வருட பிரகடன நிலைத்தகவலை முகநூலில் பார்த்துவிட்டு அண்ணன் எம்.எம்.அப்துல்லா அழைத்தார். "படகுப் பயணம்  போகனும்னு போடிருக்கீங்கள்ல. போலாமா?", என்றுக் கேட்டார். "எங்கண்ணே?". "கேரள எல்லை. உங்க ஸ்டேட்டஸ் பார்த்துட்டு ஜோ மில்டன் கூப்பிடச் சொன்னார். சிங்கப்பூரிலிருந்து கிறிஸ்துமஸ்க்கு வந்திருக்கார்".

காரில்  சென்றடைந்தோம். நாறோயில் தாண்டி கடற்கரை நோக்கி பயணித்தோம். ஜோவின் ஊரான பள்ளம்துறையை அடைந்தோம். வழி எல்லாம் பெரியதும், சிறியதுமாக சர்ச்சுகள். கேரள சாயல் அடிக்கிறது. கடலை ஒட்டி வீடுகள். சில சமயங்களில் கடல் அலைகள் வீட்டை வந்து தொட்டு விளையாடுமாம்.  குழந்தைகளுக்கு தாலாட்டெல்லாம் தனியாகப் பாட வேண்டாம். அலையே தாலாட்டுகிறது.

கடலூரில் பணியாற்றும் ஜோவின் மாமா இல்லத்தில் எங்கள் தங்கல். பெங்களூர் தனசேகர், கோவை உதயமாறன் இணைந்தார்கள். காலை உணவுக்கு ஜோ இல்லம் சென்றோம். ஆப்பம்,ஸ்டூ. மலையாள சுவை. "காலையிலேயே மட்டனா?"என்றார் டாக்டர் செந்தில். " இது பீஃப்", என்றார். இரண்டு பேர் ஷாக் ஆனார்கள். "வீட்ல பீஃப்பா?", என்ற மெல்லியக் குரல். நான் கேரள பயணத்தில்  பரோட்டா-பீஃப் ரசிகர் என்பதால் மகிழ்வாய் சுவைத்தேன்.

அப்போது ஜோ தன் அனுபவத்தை சொன்னார். "பிளஸ் டூ வரை கன்யாமரி தாண்டியது கிடையாது. காலேஜ்க்கு திருச்சி போனேன். ஞாயிற்றுக் கிழமை ஆனதும் பீஃப் நினைவு. எங்கே கிடைக்கும் என்று கேட்டால் வேற்றுக் கிரகவாசி போல பார்த்தார்கள். பீஃபே பார்க்காத ஆள்லாம் இருக்காங்கன்னு கேள்விப்பட்டு எனக்கு வெளிநாடு வந்தமாதிரி ஆயிடுச்சி. அப்புறம் சிங்காரத்தோப்பு கிட்ட ஒரு கேரள மெஸ் கண்டுபிடிச்சேன். திருச்சியில அது தான் வாழவச்சது".

" மீனவர் கிராமத்தில் மாட்டிறைச்சி இவ்வளவு விருப்ப உணவா?". "ஆமாம். சின்ன வயசுல ஞாயிற்றுக் கிழமை காலையில் சர்ச்க்கு போகும் போது பார்த்தா மாடு நிற்கும். வெளியில வரும் போது, இறைச்சியா இருக்கும். அரை மணி நேரம் தான். விற்று தீர்ந்துடும்". மலரும் நினைவுகள் சொன்னார் அண்ணன் ஜோ.

பயணம் கிளம்பினோம். கடற்கரையை ஒட்டியே கார் சென்றது. கண்ணுக்கு எட்டும் தூரத்தில் கடல்.   தெரு முனையில் ஒரு தூண். தூண் மேல் ஒரு சிறு மாடம். அதனுள் மாதா சிலை. அடுத்த கிராமத்தில் வித்தியாச அமைப்பு. தெரு முக்கில் இருக்கும் பிள்ளையார் கோவில் அளவுக்கு. " இது என்ன?" என்று கேட்டேன். "இது குருசடி அல்லது கெபி எனப்படும், இங்கேயும் வழிபடுவார்கள்". "அப்போ சர்ச்?". " சர்ச்சும் செல்வார்கள். அங்கே தான் பூசை வழிபாடு நடைபெறும்". குருசடியை இங்கு தான் முதலில் பார்க்கிறேன். உடன் வந்த டாக்டர் மன்றாடி புருசோத்தமராஜன்," கெபி, சர்ச், கதீட்ரல்க்கான வித்தியாசங்களை" விளக்கினார். கதீட்ரல் மறை மாவட்ட அளவில் இருக்கும் தலைமையகம்.

வழியில் புத்தன் துறை, கேசவன் புத்தன்துறை, பெரியகாடு, ராஜாக்கமங்கலம் என மீனவ கிராமங்கள். கன்யாமரி மாவட்டத்தில் இருந்து கேரள எல்லை நீரோடி வரை கிட்டத்தட்ட 45 மீனவ கிராமங்கள். ஒவ்வொரு கிராமத்திலும் குருசடி தவிர்த்து பிரம்மாண்ட சர்ச் இருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வடிவமைப்பில்.  பள்ளத்தில் இருக்கும் சர்ச் ரஷ்ய கிரெம்ப்ளின் மாளிகையை நினைவூட்டுகிறது.

இந்தப் பிரம்மாண்ட சர்ச்சுகள் புயல் போன்ற பேரிடர் காலங்களில் அபயம் அளிக்கும் இடம். கிட்டத்தட்ட 250 ஆண்டுகாலப் பழமையானவை. இந்தக் கடலோர கிராமங்களில் முழுவதும் கிறித்தவ கத்தோலிக்கர்கள் தான். 480 ஆண்டுகளுக்கு முன் கிறித்தவத்தை தழுவியவர்கள்.  மூச்சு விடாமல் மண் பெருமையை சொல்லி வந்தார் ஜோ. சிங்கப்பூர் சென்று பதினெட்டு வருடங்கள். ஆனாலும் மண் பாசம் விடவில்லை.

கேரள-தமிழ்நாடு எல்லையில் உள்ள பூவார் சென்றடைந்தோம், இளையராஜாவோடு. படகுப் பயணம். சிறு அளவில் அலையாத்திக் காடுகள். இரண்டு மணி நேரம் சுற்றி வந்தது படகு. கடல் வரை சென்று திரும்பினோம்.  அண்ணன் ஜோ அன்பில் புத்தாண்டு பிரகடனம் ஒன்று நிறைவேறியது. பயணம் முடிவதற்குள், சூழலில் லயித்த துணை இயக்குநர் டான் அசோக் இரண்டு சீன்களை எழுதி இருந்தார்.

இரவு உணவுக்கு மீண்டும் ஜோ இல்லம். ஜோ அண்ணன் பிரிட்டோ, பொன்னாரை மீன் குழம்பு, விளை மீன் பொழிச்சது, அயிலை மீன் கட்லெட் ஆகியவற்றோடு காத்திருந்தார். உபசரித்தே திணறடித்தார் அண்ணன் பிரிட்டோ. "போதும்ணே". "இல்ல. உங்க ஊர்ல இதெல்லாம் கிடைக்காது", அன்பில் மூழ்கடித்தார். பெங்களூரில் பணிபுரியும் டாக்டர் ஆல்டோ," ஆக்சுவலாயிட்டு எங்க ஊர்ல மட்டும் தான் கிடைக்கும் இதெல்லாம்"என்றார். உண்டு முடித்து, மூச்சு விட முடியாமல் நெளிந்தேன். கடற்புறத்து மக்களின் அன்பும் கடல் போல் பெரிதாய்.

"குருசடி அந்தோணியப்பரே இவர்களைக் காத்தருள்வீராக"

(மார்ச் மாத அந்திமழை இதழில் விருந்தினர் பக்கத்தில் எனது பத்தி)





புதன், 1 பிப்ரவரி, 2017

ஏலகிரி மேகம்

"மாம்ஸ் நீ வந்துடு". " இல்ல. நான் வர்றது சிரமம்னு நினைக்கிறேன்". "நீ வர்றன்னு ஸ்ரீதர் சொல்லி தான் நாங்க கன்ஃபார்ம் பண்ணோம். வந்துடு", சங்கரும் செந்திலும் அழுத்தினார்கள். சும்மாவே ஊர சுத்திக்கிட்டிருக்கோம், இதுல ஏலகிரி மலைப்பயணம்னு வேற சொன்னா, சகாராப் பாலைவன ஹீட் வரும். "நீங்க மட்டும் எல்லா இடமும் போய்ட்டு வந்துடுங்க. நாங்க இங்கேயே இருக்கோம்".

வேற வழியில்ல, ஓப்பன் செய்தேன். மூன்றாவது முறை சொல்லும் போதும் "எங்கப் போறீங்க?", அப்படின்னு கேள்வி வரும் போது தான் இன்னும் மனசுல ரெஜிஸ்டர் ஆகலன்னு தெரிஞ்சுது. ஆனா அங்க கதை வேற. "அண்ணே பேர ரெஜிஸ்டர் பண்ணியாச்சி, நீ வர்ற", இது ஸ்ரீதர். கல்லூரி நண்பர்கள் சந்திப்பு. அதுக்குள்ளயா? அது சென்னை, ஒரு வருஷம் ஆச்சி. இப்போ ஏலகிரி.

கிளம்பும் முன் மகன் கேட்டார்," அப்பா, சொல்லவே இல்ல". "அம்மாகிட்ட சொல்லிட்டேன்பா. எத்தனை பர்மிஷன்பா வாங்கறது?". ஒரு வழியா கிளம்பியாச்சி. வழியில் தான் வேலூரில், "சோழநாடு சோறுடைத்து, வேலூர் மாவட்டம் பிரியாணியுடைத்து" கண்டுபிடித்தது. சங்கர் ஆற்காடு என்பதால் தன் பவரை காட்ட வேலூர் கிச்சனில் சாப்பாடு ரெடி செய்தார்.

ஏற்பாடு செய்ய சங்கர் அண்ணன் சேகரும், மச்சான் ரமேஷும் இருந்தார்கள். ரமேஷ் கழக தொழிற்சங்க செயலாளர். மத்திய சங்க செயலாளர், மாவட்ட செயலாளரை வரவேற்க புரோட்டாக்கால் படி பத்து தொழிற்சங்க தோழர்களோடும் சால்வையோடும்  காத்திருக்க, நானோ கல்லூரி நண்பர்களை மகிழ்விக்க முந்தைய சந்திப்பின் போது கொடுத்த "AUETAA 1990"  பொறித்த டி-ஷர்ட்டோடும் ஜீன்ஸோடும் போய் இறங்கினேன்.

வேட்டி, சட்டையில் எதிர்பார்த்தவர்களுக்கு ஒரு ஜெர்க். " ஹிஹி. கல்லூரி நண்பர்களோடு வந்ததால இந்த டிரெஸ்" என சமாளித்தேன். ஒரு கல்லூரி மாணவனுக்கு தான் எவ்ளோ சோதனை. அப்புறம் தான் அந்த வேலூர் பிரியாணி, நெய் வறுத்த கோழி, இளநீர் பாயசம். பீடாவுடன் வண்டி ஏறினால், கத்தாரிலிருந்து மதன் மொபைலில் பிடித்தார்,"அண்ணே தம்பி ஹரிபாபுவ ஆம்பூர்ல வெயிட் பண்ண சொல்லிருக்கேன்".

"இல்ல மதன். ஃபிரெண்ட்ஸ் மூனு வண்டியில் போறோம். இன்னும் ஜாயின் பண்றாங்க. வரும் போது பாக்கிறேன்". வேலூர் கிச்சன் ஸ்டேடஸின் எபெக்ட். இன்பாக்ஸுகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே மலையடிவாரம் அடைந்தோம். இது தான் ஏலகிரிக்கு முதல்முறை. ஒரு முறை தலைவர் கலைஞர் சென்றதை கேள்விப்பட்டதிலிருந்து போகனும்னு நினைச்சது, இப்ப தான் வாய்த்தது.

மற்ற மலைவாசஸ்தலங்களை ஒப்பிடும் போது, குறைவான உயரம் தான். ஆனால்,  இயற்கை இன்னும் அவ்வளவு கெடவில்லை. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுக்கும்  கம்பர், இளங்கோ என தமிழ் ஆளுமைகள் பெயரையும், பாரி, அதியமான் என தமிழ் வள்ளல்கள் பெயரையும் சூட்டியிருக்கின்றனர். தமிழ் மணக்கிறது. ஊர் பெயர்களும் நிலாவூர், அத்தனாவூர், கோட்டூர் என தமிழ் வாழ்கிறது.

ஆனால் வேலூர் மாவட்ட தமிழ் தான் தெலுங்கும் கலந்து மணக்கும். " இன்னாபா செய்றது. ஒஸ்தேனு" டபக்கென்று தெலுங்கு வந்து விழும். அந்த மாவட்டத்தை சேர்ந்த தமிழ் தாய்மொழியாகக் கொண்ட அரசியல்வாதிகள் அனைவரும் தெலுங்கு அறிவார்கள். அண்ணன் துரைமுருகன் உள்பட அனைவரும் சுந்தரத் தெலுங்கில் மாட்லாடுவார்கள். மனவாடு தேசம் ஆந்திரா பக்கனே காதா?

மலை மீதேறினோம். ஸ்டெர்லிங் குரூப்பின் ரிசார்ட். ஊர் பேர் அத்தனாவூர் என்றிருந்தது. "ஹலோ, ஏலகிரின்னு சொல்லிட்டு என்னப்பா இங்கக் கூப்பிட்டுகிட்டு வந்துட்டீங்க?". என் மைண்ட் வாய்ஸை இன்னொரு நண்பர் ஒலித்தார். "இது ஏலகிரி இல்ல. இந்த மலைப் பேர் தான் ஏலகிரி மலை. ஏலகிரி அப்படிங்கற ஊர் ஜோலார்பேட்டை பக்கத்தில் இருக்கு" வரலாற்று தகவலை சொன்னார் சிவஞானம்.

"குமரா கூலிங்கிளாஸை கழட்டு. ஊரே கூலா தான் இருக்கு". மீட் ஆரம்பித்து விட்டது.

# ஏலகிரி மேகம் பன்னீர் தூவ ஆரம்பித்தது !

செவ்வாய், 1 டிசம்பர், 2015

கத்தார் நினைவலைகள் 1

கத்தார் வர்றன்னு சொன்ன உடனே ஆரூர் பாலா என்னை புக் பண்ணினார். ஆமாம் புக்கிங். "அண்ணே, கத்தார் வந்தவுடன் என் கார்ல தான் ஏறனும், வரனும். இது தம்பியோட அன்புக் கட்டளை". நானும் அந்த எண்ணத்தோடு தான் இருந்தேன்.

கத்தாரில் இறங்கிய போது விடியற்காலை 03.15. கார் பார்க்கிங் வந்து குமார் நிசானில் ஏறியதை ஏற்கனவே சொல்லி இருந்தேன். இடையில் பாலா தன் காரைக் கண்ணால் காட்டினார். சிரித்துக் கொண்டே கடந்தேன். சிரித்ததற்கு காரணம் அவரது புக்கிங் தான்.

அடுத்த நாளும் கங்கைகொண்ட சோழபுரம்  குமார் கார் தான். இடையில் கல்லூரி நண்பன் ராஜவிஜயன் கார். இப்படியே கார்கள் கடந்தன. மறுநாள் காலை பாலா காரில் செல்வதாக திட்டம். காலையில் காத்திருந்தோம்.

குமார் வந்தார். "அண்ணா, பாலா வர கொஞ்சம் லேட்டாகும். நாம போகலாம்", என்றார். லெபனிஸ் உணவகம் சென்றோம். சாப்பிடும் போது, பாலா வந்து பார்த்து சென்றார். அப்புறம் தான் மியூசியம் சென்றோம்.

இப்படியே பாலா காரில் ஏற முடியாமல் நேரம் கடந்தது. ஆனால் பாலா காத்திருந்தார், நானும். ஆனால் இரண்டாம் நாளும் பாலா காரில் ஏற வாய்க்கவில்லை.

மூன்றாம் நாள் காலை அறையில் வந்து கூப்பிட்டதே பாலா தான். உடன் மதன்குமார். காலை உணவிற்கு அழைத்து செல்ல சிறுவாச்சூர் ரமேஷ் வந்து விட்டார். அவர் சாய்ஸ், சரவணபவன் உணவகம்.

அப்போது தான் பாலா காரில் ஏறும் வாய்ப்பு. இதுவும் நிசான் கார். கார் முக்கியமல்ல. காரின் வெளி அமைப்பு, உள் அமைப்பு முக்கியமல்ல.  உள்ளே டேஷ்போர்டில் இருக்கும் பல்வேறு உபகரணங்கள் பிரத்யோகமல்ல.

அங்கே செருகப்பட்டிருந்த "பென் டிரைவ்" தான் மேட்டர். ஆமாம், அந்தப் பென் டிரைவ்காக தான், அவர் கார் பயணத்திற்கு அழைத்தார். ஆனால் அவர் காரில் ஏறி பேசி முடிக்கும் முன் ஹோட்டலை அடைந்து விட்டோம்.

பென் டிரைவ் ஓப்பன் செய்யப்பட வாய்ப்பில்லாமல் போனது. சரவணபவனில் பொங்கல், இட்லி, வடை என அவர்கள் அன்பிற்கு சாப்பிட்டு முடித்தோம். அங்கிருந்து அரசரின் மியூசியம் செல்லும் பயணம்.

அது லாங் டிரைவ். இதற்கு பாலா கார் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம், நானும் பாலாவும். ஆனால் கார் ஏறும் போது, அவரே மதன் காரில் ஏற சொன்னார். "உங்கக் கார்",என்றேன். "இல்லண்ணா. மதன் கார்ல போய்டுவோம். லாங் டிரைவ்க்கு இவரது லேண்ட் குரூஸர் தான் பெஸ்ட்", என்றார் பாலா.

கண்ணில் ஒரு 'கார்' காலம் !

(தொடரும்)

 

சனி, 7 நவம்பர், 2015

கத்தாரில் அண்ணாமலையன்கள்

கத்தாரில் எங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பை, எனது  நண்பர் ராஜ விஜயன் ஏற்படுத்திக் கொடுத்தார்.  சீனியர் சாய்மணி அவர்கள் தனது இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அருமையான நிகழ்வாக அமைந்தது.

சீனியர், ஜூனியர் என பலரை சந்தித்தேன். சீனியர் என்றால் எங்களை விட இருபது ஆண்டுகளுக்கு முன்பு படித்தோரும் இருந்தனர். ஒரிரு ஆண்டுகள் சீனியரும் இருந்தனர்.

ஜூனியர்களில் ஓரிரு ஆண்டுகள் பின்னால் படித்தவர்களும் இருந்தனர். பதினைந்து ஆண்டுகள் பின்னால் படித்த ஒருவரும் இருந்தார். அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்பவர்கள். எனக்கு அது ஒரு வித்தியாசமான சந்திப்பு.

திருமேனி, சாய்மணி, அப்துல் கபூர், ரவீந்திரன், பரத், முரளிமுருகன், கிருஷ்ணகுமார், கார்த்திக் ராமையா, சுந்தர்ராமன், சுதர்ஷன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதில் திருமேனி மற்றும் சாய்மணி ஆகிய இருவரும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கத்தார் சென்று பணியில் சேர்ந்து, இன்று உயர்ந்த நிலையில் இருப்போர். நீண்ட பணி அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

அவர்களுக்கு சில வருடங்களுக்கு முன், அவர்களது நிறுவனத்தில் பணிபுரியத் தேவையான புதிய நபர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதே சமயத்தில் அவர்களோடு படித்த வகுப்பு நண்பர் இவர்களை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பிரிவின் அலுவலர்.

பல்கலைக்கழகம் சென்றிருக்கிறார்கள். நண்பரை சந்தித்திருக்கிறார்கள். "வேலைவாய்ப்பு வழங்குகிறோம். சில நிபந்தனைகள்", என்றிருக்கிறார்கள். அதனை பட்டியலிட்டிருக்கிறார்கள்.

"அதிக மதிப்பெண் பெற்றவர்களாக இருக்கக் கூடாது. அரியர் வைத்து பாஸ் செய்தவர்களாக இருந்தாலும் பரவாயில்லை. ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். முக்கியமாக, முதல் தலைமுறையாக வேலைக்கு வருபவர்களாக இருக்க வேண்டும்"

கேட்ட அவர்களது நண்பர் திகைத்திருக்கிறார். "ஏன் இப்படி?" எனக் கேட்டிருக்கிறார். "நிறைய மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு பல வாய்ப்புகள் காத்திருக்கும். இவர்கள் தான் வேலைக்கு சிரமப்படக் கூடியவர்கள். முதல் தலைமுறை, ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு உதவியதாகவும் இருக்கும்".

"நம் பல்கலைக்கழக மாணவர்கள் எந்த மதிப்பெண் எடுத்தவராக இருந்தாலும்,  எந்த சூழ்நிலையையும் கையாள்பவராக தேறி விடுவார்கள். பணியில் சேர்ந்து விட்டால் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள். நாங்களும் படித்த பல்கலைக்கழகத்திற்கு நன்றிக்கடன் தீர்த்ததாகி விடும்".

சொன்னபடி தேர்ந்தெடுத்து கத்தாரில் பணியும் வழங்கி இருக்கிறார்கள். இப்போது அவர்களும் சிறப்பாக பணிபுரிந்து நல்ல நிலையில் இருப்பதை மகிழ்வோடு சொன்னார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் அவர்களால் முடிந்த அளவு உதவினாலே சிறப்பு தான்.

தங்கள் பல்கலைக்கழக மாணவர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினராக தங்களை சந்தித்ததில் மகிழ்ந்து நினைவுப் பரிசு அளித்தனர்.

ரவீந்திரன் ஒரு சிறந்த ஓவியர். தோகாவின் அடையாளமாகத் திகழும் ஷூக் எனப்படும் பழமையான மார்க்கெட் பகுதியை, அழகான ஓவியமாக வரைந்து பரிசாக வழங்கினார்.

# கத்தாரில் இருப்பினும், அடையாளம் மாறாத அண்ணாமலையன்கள் !

வெள்ளி, 6 நவம்பர், 2015

கத்தார் பாடம்

பார்வையை இழுத்தது அந்தப் பரந்த, விரிந்த பூங்கா. பெரும் புல்வெளி. கார் கடக்கும் போது உற்று நோக்கினேன். கத்தார் இஸ்லாமிய அருங்காட்சியகத்தில் இருந்து வெளியில் வரும் போது பார்த்தேன்.

நான் பார்ப்பதை கவனித்து விட்டு, "இதில் இன்னொரு விசேஷம் இருக்கிறது"என்றார் பாலா. என்ன என்றேன். "பூங்காவின் கீழே வாகன நிறுத்தம் இருக்கிறது",என்றார். "பூங்காவுக்கு வர்றவங்க நிறுத்த தானே?" என்று கேட்டேன்.

"பூங்காவுக்கு வர்றவங்க மட்டுமில்ல, பின்புறம் இருக்கும் நகரப் பகுதிக்கு வர்றவங்க நிறுத்தவும். 3000 கார் நிறுத்தலாம்" என்றார். இருக்கும் இடத்தை சரியாக உபயோகிக்கும் திட்டம்.

எனக்கு சென்னை நினைவு வந்தது. தியாகராய நகருக்கு இது போல ஒரு ஏற்பாடு செய்தால், பாண்டி பஜார், உஸ்மான் ரோடு ஆகியவை நிம்மதியாய் மூச்சு விடும். சென்னை மட்டுமல்ல, பெரு நகரங்களில் கையாள வேண்டிய உத்தி.

அந்த முக்கிய சாலையின் இன்னொரு பக்கம் செல்லும் போது ஒரு மண் முகட்டைக் காட்டினார் மதன். "அண்ணா இதப் பாருங்க". கட்டிடப் பணிக்கு குவிக்கப்பட்டுள்ளதோ என நினைத்தேன்.

"இந்த சாலைக்கு கீழே மெட்ரோ ரயில் வேலை நடக்குது. அங்கே அள்ளப்படுகிற மண் அத்தனையையும் கன்வேயர் பெல்ட் மூலம் இங்கே கொண்டு வந்து சேர்க்கிறார்கள். பிறகு வெளியேற்றுகிறார்கள்.

லாரிகள் மூலம் வெளிக் கொண்டு வந்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். அது தவிர்க்கப்பட்டிருக்கிறது. அடுத்து மாசும் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது", என்றார்.

செலவு பிடிக்கும் காரியம் என்றாலும் அதன் பலன் கூடுதல். இயற்கை வாயு இருப்பதால் கத்தார் அரசு இப்படி செலவு செய்கிறது என்று கொண்டால் கூட, நம் நாட்டிற்கு ஏற்ற செலவு பிடிக்காத குறைந்தத் தொழில்நுட்பங்களை முயற்சிக்கலாம்.

நாட்டின் கட்டமைப்புத் துறையில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளை வளர்ந்த நாட்டின் பணிகளை பார்வையிட அனுப்ப வேண்டும். பழமை மனப்பான்மையில் இருந்து வெளிக் கொணர வேண்டும்.

அரசு பெரும் பொருட் செலவு செய்யும் அய்.அய்.டி போன்ற ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களை, அரசு துறைகளோடு இணைந்து செயல்பட வைத்து பயன்படுத்த வேண்டும்.

# முன்னேற்றத்திற்கு முயல்வோம் !

வியாழன், 5 நவம்பர், 2015

கத்தாரிடம் கற்போம்

மியூசியம் போகலாம், என அழைத்த உடன் நம்மூர் மியூசியம் நினைப்பில் போனேன். முன்புறத் தோற்றமே மிரட்டியது. கத்தாரில் இருக்கிறோம் என்பதை நினைவுப் படுத்தியது. பரந்தப் புல்வெளி. பெரிய, சிறப்பான வாகன நிறுத்த வசதி. அங்கிருந்து மேல் தளத்திற்கு, கண்ணாடிக் கூண்டு மின் தூக்கி.

அது Museum of Islamic Arts.

முன்புறம் செயற்கை நீர் ஊற்று, சாரலில் நனைக்கிறது.  தானியங்கி கண்ணாடிக் கதவு விலகியது. திரைப்படத்தில் வரும் அரபு ஷேக் உடையில் ஒருவர் நின்றார். கைக்காட்டினார். இரும்பு கண்டுபிடிப்பான், நுண் கூர்மைக் கருவி என பாதுகாப்பு சோதனைகள்.

முடிந்து நிமிர்ந்தால், அய்ந்து நட்சத்திர விடுதி தோற்றம். இரண்டு அடுக்கு மாடி அளவிற்கு உயர்ந்த கூரை. பிரம்மாண்டத் தோற்றம். மிகப் பெரிய கண்ணாடி சன்னல்களுக்கு பின்புறம் பரந்தக் கடல், வானுயர்ந்த கட்டிடங்கள். முன்புறம் வசதியான இருக்கைகள் போடப்பட்டு, சின்ன உணவு விடுதி. அருங்காட்சியகம் என்ற எண்ணமே ஏற்படவில்லை.

இரண்டு தளங்களில் தொன்மையான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. முழுதும் குளிரூட்டப்பட்ட கட்டிடம் அது. உள்ளே இருக்கும் பொருட்களும் சேதம் இல்லாமல் இருக்கும். காண்போரும் சோர்வு இல்லாமல் காணக் கூடிய வாய்ப்பு.

மிக நேர்த்தியாக எல்லாப் பொருட்களையும் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு வாள் காட்சியில் இருந்தால், அதற்கு தனி வெளிச்ச வசதி, அது குறித்த வரலாறு என சிறப்பான ஏற்பாடு.

வரலாற்று ரீதியான வாள், கேடயம் போன்ற போர் கருவிகள், அரண்மனையில் பயன்படுத்தியப் பொருட்கள், அரசர் உடைகள், கம்பளங்கள், கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் பொருட்கள் என பழைய காலத்திற்கே கொண்டு செல்கின்றது.

கத்தார் கழகத் தோழர்களுடன், நாங்கள் பத்து பேர் சென்றிருந்தோம். ஒரு பள்ளியின் வரலாற்றுப் பிரிவு மாணவர்கள் குழு போல் ஒவ்வொரு பொருளாக பார்த்து மகிழ்ந்தோம். அது குறித்து விவாதித்தோம்.

ஒரு விஷயம் பெரும்பாலானோர் கவனத்தைக் கவர்ந்தது. ஒரு குதிரையும், அதன் மேலமர்ந்த வீரனும் தான். போர் வீரன் தரிக்கும் பாதுகாப்பு கவசம் இது வரை நாம் அறிந்தது. இங்கு வீரன் தரித்த கவசத்தை விட, குதிரைக்கு அணிவிக்கப்பட்டிருந்த கவசம் கவனம் கவர்ந்தது.

இடையில் ஒதுங்கிடம் சென்றோம். கை, முகம் கழுவி விட்டுப் பார்த்தால், அங்கு ஒரு கைக்கடிகாரம் இருந்தது. உடன் வந்த குமார் அவசரமாக வெளியேறினார். அருங்காட்சியகப் பாதுகாவலரை அழைத்து வந்து, அதனைக் காட்டி, அவரிடம் ஒப்படைத்தப் பிறகே நகர்ந்தார். கத்தார் கட்டுப்பாடு புரிந்தது.

காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் பத்து நூற்றாண்டு காலத்திற்கானவை. அவை பல நாட்டில் இருந்து வந்தவை. அதிலும் இந்தியாவில் இருந்து வந்தப் பொருட்கள் பல. ஆனால் கத்தார் வரலாறு என்று பார்த்தால் ஒரு இருநூறு ஆண்டுகளுக்கான தான்.

இது தான் மனதில் ஒரு சங்கடத்தை ஏற்படுத்தியது. இருநூறு ஆண்டு வரலாறு இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்றால், நம் தமிழகத்தின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கான சாட்சிகள் கண் முன் நிற்பவற்றைப் பாதுகாக்க, காட்சிப்படுத்த எவ்வளவு தவறி இருக்கிறோம்.

#கத்தாரிடம் கற்போம் !