பிரபலமான இடுகைகள்

அரியலூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரியலூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 23 மார்ச், 2017

வேப்ப மரத்தடி கேக் கட்டிங்

"அண்ணா சுண்டக்குடியில இருந்து பத்திரிக்கை வைக்க வரணும்னு சொல்றாங்க", அரியலூர் ஒன்றியம் ஜோதி அலைபேசினார். "வர சொல்லுங்கண்ண", என்றேன். வந்து திருமண அழைப்பிதழை அளித்தார்கள். தேதி பார்த்தேன். மார்ச் 23. "ஒன்றியம் தேதி சொன்னாரா? நான் அன்னைக்கு ஊரில் இருக்க மாட்டேனே", என்றேன். " நாங்க தான் இந்த தேதி போட்டோம். ஒன்றியத்துக்கு தெரியாது. அன்னைக்கு நீங்க தான் வந்து தாலி எடுத்துக் கொடுக்கணும்", என்று அன்பாக வலியுறுத்தினார் மணமகன் சுப்ரமணியன்.

நான் அவர்களை சமாளித்து அனுப்பி விட்டு ஒன்றியத்துக்கு போன் அடித்தேன். "என்னண்ணே இப்படி மாட்டி விட்டுட்டிங்க. நான் அன்னைக்கு ஊருல இருக்க மாட்டேன்னு உங்களுக்கு தெரியுமே?", என்றுக் கேட்டேன். " இல்லண்ணே. எனக்கும் பத்திரிக்கை அடிச்சது தெரியாது" என்றார். அடுத்த நாள் நைசாக "தீவிரமான பையன். அவங்க தெருவில் இது தான் முதல் கட்சி திருமணம். அவசியமா போகணும்", என்றார் ஒன்றியம்.

மார்ச் 23, வழக்கமாக தலைமறைவாகும் நாள். அந்த வழக்கப்படி, இன்றும் வெளியூர் பணி முடித்து நேரே திருமணத்திற்கு வருவேன் என்று சொல்லி இருந்தேன். ஆனால் காலையில் சிமெண்ட் தொமுசவினர் வந்துவிட்டனர். அவர்களிடம் வாழ்த்து பெற்று, நகரம் முருகேசனுடன் சுண்டக்குடி கிளம்பினேன். கைக்காட்டியில் ஒன்றியம் ஜோதி இணைந்தார். கழகத் தோழர்கள் சுண்டக்குடியில் வரவேற்று காரில் இருந்து இறங்க சொன்னார்கள். ரோடு ஓரத்தில் இருக்கும் வேப்பமரத்துக்கு கீழ் அழைத்து சென்றார்கள்.

அங்கு ஒரு மர ஸ்டூல் இருந்தது. அதன் மீது ஒரு கேக் காத்திருந்தது. கையில் பிளாஸ்டிக் கத்தியை கொடுத்தார்கள். நான் மறுக்க, அன்பாக திணித்தார்கள். கேக்கை வெட்டி ஆளுக்கொரு துண்டு கொடுக்க, மூத்தவர் ஒருவர் கேக்கை ஊட்டி விட்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தை துவக்கி வைத்தார். ரோட்டோர வேப்ப மரத்தடியில் "ஹேப்பி பர்த்டே" இதுவாகத் தான் இருக்கணும்.

வழியில் இந்த எதிர்பாராத நிகழ்வுகளோடு மண்டபத்தை அடையும் போது மணி 10.05. மணமேடையில் மணமக்களை காணோம். முகூர்த்த நேரம் 09.00 - 10.00. திருமணம் முடிந்து சாப்பிட போய் விட்டார்களோ என சந்தேகத்தோடு கேட்டேன். " இல்லை. உங்க எல்லோருக்காகவும் தான் காத்திருக்காங்க", என்று எங்களை அமர செய்தனர்.

மணமக்கள் சுப்ரமணியன், ரேகா வந்தனர். புரோகிதர் அங்கேயும், இங்கேயும் பொருட்களை மாற்றி வைத்துக் கொண்டிருந்தார். ஓமகுண்டத்தில் புகையை கிளப்ப எண்ணெய்யை ஊற்றினார். மணமகனின் அண்ணன் அவரை ஒதுங்கச் சொல்லி விட்டு எங்களை மேடைக்கு அழைத்தார். கைக்கு மாங்கல்ய தட்டு வந்தது. என் வழக்கப்படி மங்கல நாணை மணமக்கள் பெற்றோரை அழைத்து அவர்களிடம் கொடுத்து, மணமகனிடம் கொடுக்க சொன்னேன்.

மானமகன் மங்கல நாணை அணிவிக்க, உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்த இனிதே திருமணம் நடந்தேறியது. எங்களை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று வலியுறுத்த, மணி பார்த்தேன். 10.30. அன்பை மறுக்க முடியாமல் அமர்ந்து ஒரு கை சாம்பார் சாதம், ஒரு கை மோர் சாதம் சாப்பிட்டேன். இதற்கிடையே இடையறாது அலைபேசி வாழ்த்துக்கள். ஒரு நண்பர் கேட்டார், " பர்த்டே ஸ்பெஷல் என்ன ?". "கல்யாண வீட்டில் மோர் சாதம் சாப்பிடறேன்", என்றேன். " என்னது?", என்று நொந்துவிட்டார்.

சாப்பிடும் போது பக்கத்தில் நிழலாடியது. பார்த்தால் மணமக்கள். "சாப்பிடப் போறீங்களா? உட்காருங்க", என்றேன். " இல்ல. நீங்க சாப்பிடுங்க அண்ணே", என்றார். உபசரிக்க வந்திருக்கிறார்கள். போக சொன்னால், மறுத்தார்கள். போட்டோ எடுக்க சொல்லி, அனுப்பி வைத்தோம். சாப்பிட்டு வந்து விடைபெற்றோம். மறுபடியும் மணமக்கள் மேடையை விட்டு கீழே இறங்கி வந்து வழியனுப்ப வந்தார்கள். நெகிழ்ந்து போனோம். "ஒற்றுமையா வாழ்ந்து பேரக் காப்பாத்துங்க. இன்னைக்கு உங்களுக்காகத் தான் வந்தேன்", என்றேன். " தெரியும்ணா. பிறந்தநாள்ல வந்துருக்கீங்க. நன்றி அண்ணா" என்றார் மணமகன் சுப்ரமணியன். பிறந்தநாள் பரிசு அந்த 'நன்றி'.

கிளம்பினோம். அடுத்த நிறுத்தம் வாலாஜாநகரம். வாலாஜாநகரம் கழகத் தோழர் ரமேஷ் தாயார் இறந்துவிட்டார். என் பதிவுகளை படிக்கும் நண்பர்களுக்கு ரமேஷை தெரிய வாய்ப்பு உண்டு. நான்கு வருடங்களுக்கு முன் ரமேஷின் பதினோரு வயது மகன் மணீஷ் இறந்த துயர சம்பவம். பேரன் இறந்ததில் இருந்து மனம் பாதிக்கப்பட்டு இருந்த ரமேஷின் தாயார் இறந்து விட்டார். அவர் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, ரமேஷுக்கு ஆறுதல் கூறிவிட்டு கிளம்பினேன்.

இந்த நிகழ்வுகளால் , நான் ஊரில் இருக்கும் விஷயம் தெரிந்து விட இன்னும் சில நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து  தெரிவித்தனர். ஆர்.கே.நகர் தேர்தல் பணிக்கு கிளம்பினேன்.

திருமண வாழ்த்து, துக்க ஆறுதல், தோழர்கள் வாழ்த்துக்களோடு, "வேப்பமரத்தடி கேக் கட்டிங்" சேர  இந்த ஆண்டு பிறந்தநாள் சற்று வித்தியாசம்.

# ஒவ்வொரு நாளும் புது அனுபவமே !

வெள்ளி, 17 ஜூலை, 2015

புத்தகத் திருவிழா

ஒரு நாள் பேராசிரியர் க.இராமசாமி அலைபேசியில் அழைத்தார்கள். "அரியலூரில் புத்தகத் திருவிழா நடத்த திட்டமிடுகிறோம். உங்களை எப்போ சந்திக்கலாம்?". "அய்யா, நானே வந்து பார்க்கிறேன். நீங்க அலைய வேண்டாம்"என்றேன்.

நீண்ட நாட்களாக எல்லோரும் 'இப்படி ஒன்று நடக்காதா?" என்று எதிர்பார்த்திருந்த விஷயம். பெரம்பலூரில் கடந்த சில ஆண்டுகளாக புத்தகத் திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. காரணம் மாவட்ட ஆட்சியர் தாரேஷ் அகமது.

செந்துறையில் கழக நிகழ்ச்சியில் இருக்கும் போது, திடீரென விழாக் குழுவினர் வந்தார்கள். பேராசிரியர் க.இராமசாமி, பெரியவர் சீனி.பாலகிருஷ்ணன், புலவர் இளங்கோ என புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்கின்ற குழுவினர்.

அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி திடலில் அரங்கம் அமைக்க இருப்பது, பபாசி அமைப்புடன் பேசியிருப்பது, நிதி பிரச்சினை என விவரித்தார்கள்.

"பெரம்பலூர் போல நிகழ்ச்சிக்கு உதவ பெரிய கல்வி நிறுவனங்கள் இல்லை. இங்கிருக்கும் பெரிய தொழிலகங்கள் தாமாக முன் வரமாட்டார்கள். யாராவது அதிகாரத்தில் உள்ள ஒருவர் மூலமாக தொடர்பு கொள்ளுங்கள்" என்றேன்.

"ரிட்டயர் ஆன ஆளுங்களுக்கு வேற வேலை இல்லையா? இதெல்லாம் நடக்கற வேலையா?" என்று கிண்டல் அடித்தவர்கள் உண்டு. உதவி செய்யாமல் குதர்கம் பேசியவர்களும் உண்டு. ஆனால், அவர்கள் தங்கள் பணி தொடர்ந்தார்கள்.

பேராசிரியர் இராமசாமி, மைசூர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பணியாற்றியவர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர். செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் செயல் அலுவலராக, தலைவர் கலைஞர் முதல்வராக இருக்கும் போது நியமிக்கப்பட்டு, சிறப்புற பணியாற்றியவர்.

பெரியவர் சீனி.பாலகிருஷ்ணன் அரியலூர் மாவட்டம் அமைய போராட்டக் குழு தலைவராக இருந்து பணியாற்றியவர். பொது வேலைகளில் முன் நிற்பவர். புலவர் இளங்கோ தொடர்ந்து கல்வி பணியாற்றுபவர்.

இவர்கள் எல்லாம் இரண்டு மாத காலம் தங்கள் சொந்தப் பணியை போல் இதே பணியாக இருந்தனர். உழைப்பிற்கான பலன் இருக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

நாளை 17.07.2015 முதல் 26.07.2015 வரை அரியலூரில் புத்தகத் திருவிழா. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் துவக்கி வைக்கிறார்கள்.

நான் கடலூர் தளபதி நிகழ்ச்சி பணிகளில் இருந்ததால், தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டார்கள். ஆனால் மக்கள் பிரதிநிதியாக விட்டு விட முடியுமா?. இரண்டு நாட்களுக்கு முன், சென்று நிதி அளித்தேன். திருவிழா குறித்த சுவரொட்டியை எமது “பெரியார் அறிவு மய்யம்” சார்பாக ஏற்பாடு செய்துள்ளேன். நம் பங்கு.

ஒவ்வொருவரும் அவரவர் பங்காக திருவிழாவில் பங்கேற்று புத்தகம் வாங்கினால் போதும். பொது நலமும் சிறக்கும், சுய நலமும் சிறக்கும்.

# புத்தகம் வாசித்தால் புது “அகம்” மலரும். வாசிப்போம் !

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

பொதுக் கூட்டத்தில் எனது உரை

அரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது.


 Displaying MURASOLI - 09.08.2014.jpg


சனி, 26 அக்டோபர், 2013

இரண்டு அரசு ஐ.டி.ஐக்கும் அனுமதி, ஒரு கார் பயணம் தான்.

தலைவர் கலைஞர் காரில் பயணித்துக் கொண்டிருக்கிறார், தலைமைச் செயலகம் நோக்கி. அப்போது தலைவர் கலைஞர் முதல்வர். உடன் சில அமைச்சர்கள். அண்ணன் ஆ.ராசா அவர்களும் உடன்.

"ப.சிதம்பரமும், பெரிய.கருப்பனும் சிவகங்கைக்கு ஒரு ஐ.டி.ஐ கேட்டிருக்காங்க. அலுவலகத்தில நினைவு படுத்துங்க" என தன் செயலாளரிடம் சொல்கிறார் தலைவர். உடனே அண்ணன் ராசா, "அய்யா எங்களுடையதும் பின் தங்கிய மாவட்டம், எங்களுக்கும் ஐ.டி.ஐ வேண்டும்" என்கிறார்.

"ஏற்கனவே அரியலூர்ல ஒரு அரசு ஐ.டி.ஐ இருக்கேய்யா" என்கிறார் தலைவர் கலைஞர். "அய்யா, ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டம் வருவதற்குள் அந்த பகுதி மாணவர்களை தொழிற்கல்விக்கு தயார் செய்தா தான் சரியா இருக்கும். அதே போல பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்குள் அங்கே இருக்கும் மாணவர்களை தயார் செய்ய வேண்டும்"

"சரி. நீ சொல்ற காரணம் சரியா தான் இருக்குய்யா. ரெண்டும் கொடுத்திடலாம்." இது தலைவர் கலைஞர். தலைமை செயலகம் அடைவதற்குள் இரண்டு ஐ.டி.ஐக்கும் அனுமதி. ஒரு கார் பயணம் தான். இரண்டு ஐ.டி.ஐ-களும் அமைவதற்கு அரசு இடம் இல்லை. தன் தாய்-தந்தையர் பெயரில் அமைந்திருக்கும் அறக்கட்டளை மூலம் தலா அய்ந்து ஏக்கர் இடம் வாங்கிக் கொடுத்தார்.

அடுத்த ஒரு சந்தர்ப்பம். தொடர்ச்சியாக பல மாவட்டங்களில் அரசு பொறியியல் கல்லூரிகள் அறிவிக்கப்பட்ட நேரம். அண்ணன் ராசா அரியலூருக்கு ஒரு பொறியியல் கல்லூரி கேட்டார். மற்ற அமைச்சர்கள் "ஏற்கனவே இரண்டு ஐ.டி.ஐ, ஒரு கலைக்கல்லூரி(பெரம்பலூர்), இது வேறயா ?" எனக் கிண்டலடித்தனர்.

"நீங்க சும்மா தர வேண்டாம். 20 ஏக்கர் இடமும், 5 கோடி ரூபாய் பணமும் நிதியாகப் பெற்று தருகிறேன்" என சொல்ல, பொறியியல் கல்லூரி அறிவிக்கப்பட்டது. 20 ஏக்கர் இடமும், நிதியும் வழங்கினார். அரியலூரில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்கப்பட்டு விட்டது.

அண்ணன் ராசா அவர்கள் ஒரு முறை துறையூர் அருகே மிகப் பெரிய விபத்தை சந்தித்தார். திருச்சியில் முதல் உதவி முடித்து, தனி ஹெலிக்காப்டரில் சென்னை அழைத்து வரப்பட்டு, அப்போலோ மருத்துவமனையில் இரண்டு மாதங்கள் சிகிச்சைப் பெற்று நலமடைந்தார்.

இது குறித்து ஒரு முறை தலைவர் கலைஞர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது, "என்னை நீங்கள் எல்லாம் கவனித்துக் கொண்டதால் பிழைத்து வந்தேன். ஆனால் எங்கள் பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் இருக்கிற ஏழை மக்கள் பாதிக்கப்பட்டால், தஞ்சையோ, திருச்சியோ சென்று தான் சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது."

"ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை இரண்டு மாவட்டத்திற்கும் சேர்த்து கொடுத்தால், அரியலூர்-பெரம்பலூர் இடையே அமைத்துக் கொள்வோம். நவீன மருத்துவ வசதிகள் கிடைக்கும். எங்கள் மாவட்டத்து கிராமப்புற ஏழை மக்கள் பயன் பெறுவார்கள்" என சொல்ல மருத்துவக் கல்லூரி sanctioned. 

இப்படி இடம், பொருள் அறிந்து அண்ணன் ஆ.ராசா அவர்கள் முயற்சி எடுத்ததனால் தான் எங்கள் மாவட்டத்தின் வளர்ச்சியே. இன்று அண்ணனின் பிறந்தநாள்.

# வாழ்க அண்ணன், எங்கள் மாவட்டங்களை இன்னும் முன்னேற்ற !




திங்கள், 21 அக்டோபர், 2013

பெரம்பலூர், அரியலூர் மாவட்ட சுற்றுப்பயணம் - தளபதி கடிதம்

நாம ஒரு நிலைத்தகவல் யோசித்து வைத்திருக்கும் போது, அத வேறு ஒருவர் பதிவு செய்தா எப்படி இருக்கும். அப்படி தளபதி அவர்கள் கலந்து கொண்ட அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட இளைஞர் பயிற்சி பாசறை மற்றும் அரியலூரில் நடைபெற்ற தேர்தல் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் குறித்து கட்டுரை தயார் செய்ய யோசித்திருந்தேன்.

நேற்று காலை சென்னை பதிப்பு முரசொலியில் அப்படியே கடிதமாக வந்திருந்தது. ஆம், தளபதி அவர்கள் உங்களில் ஒருவன் என்று தொடர்ந்து எழுதி வரும் கடித வரிசையில் " நமது பயணமும் தொடர வேண்டும்" என்ற தலைப்பில் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட சுற்றுப்பயணம் குறித்து எழுதியிருக்கிறார்கள்.

அதைத் தாண்டி மிகுதியாக சொல்ல ஒன்றுமில்லை என்னும் அளவிற்கு நுணுக்கமாக நிகழ்ச்சி குறித்து விவரித்திருக்கிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய செய்தி, அவரது உழைப்பு.



ஞாயிறு, 20 அக்டோபர், 2013

சுழலும் சூரியன் - நேரடி அனுபவம்

5-ம் தேதி மாலையே தளபதி அவர்கள் சென்னையிலிருந்து கிளம்பி பெரம்பலூர் வந்து தங்கி விடுவதாக திட்டமிடப் பட்டிருந்தது. பெரியார் திடலில் ஒரு நிகழ்வில் பங்கேற்க வேண்டிய நிலையில், அதை முடித்து இரவு 10.30 மலைக்கோட்டை விரைவு ரயிலில் எழும்புரிலிருந்து கிளம்பினார்கள்.

விடியற்காலை 3 மணிக்கு வரவேண்டிய ரயில் வழக்கம் போல் தாமதமாக வந்தது. 

                          DSC08280.JPG

அரியலூர் ரயில் நிலையத்தில் கழகத் தோழர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு 4 மணிக்கு அரியலூரிலிருந்து புறப்பட்டு, பெரம்பலூர் அண்ணன் ராசா அவர்கள் அலுவலகத்தை அடைந்தார்கள். அப்போது 4.45 ஆகியிருக்கும்.

காலை பணிகள் முடித்து, உணவருந்தி, காலை 08.30 மணிக்கு காரில் ஏறிவிட்டார். வழி நெடுக வரவேற்பை ஏற்றுக் கொண்டு மலையாளப்பட்டியை அடையும் போது 09.45.

                         

 அங்கு கழகக் கொடியேற்றி விட்டு மேடைக்கு வந்த போது மணி 10.00. நண்பகல் 12.30 வரை நாற்காலியை விட்டு எழுந்திரிக்காமல் நிகழ்வை கவனித்தார் தளபதி. ( அதற்குள் நான் 4 தடவை எழுந்து மேடையிலேயே உலாத்திவிட்டேன்).

இரண்டு கி.மீ தள்ளியிருந்த தங்கும் இடத்திற்கு சென்று உணவருந்தி விட்டு அங்கு கழக கொடியை ஏற்றி வைத்து விட்டு சரியாக இரண்டு மணிக்கு மேடைக்கு வந்து விட்டார். மாலை 4.30 வரை நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு கலந்து கொண்ட 750 இளைஞரணி தோழர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார், 50 தொண்டரணி தோழர்களுக்கும் வழங்கினார். 
                                  

மணி 5.45, மலையாளப்பட்டியிலிருந்து கிளம்பினார்.வழிநெடுக சாலையின் இருபுறமும் திரண்டு நின்ற மக்கள் வரவேற்பை கையசைத்து ஏற்றுக் கொண்டு பெரம்பலூர் அண்ணன் ராசா அவர்கள் அலுவலகம் வந்த போது மணி 7.00. 

                               

குளித்து உடைமாற்றி கிளம்பும் போது மணி 07.30. வழியில் வரவேற்புகளை ஏற்று அரியலூர் மேடை ஏறிய போது 08.15. 

                                                                 
                                                               
                                                                             
                              

தளபதி அவர்கள் பேச ஆரம்பித்தப்போது மணி 08.45. ஒரு மணி நேரம் பேசினார்கள். அரியலூரிலிருந்து கிளம்பும் போது மணி 09.55. கார் பயணம். வழியில் உணவருந்தி சென்னை சென்றடைய எப்படியும் நள்ளிரவு 02.30 ஆகியிருக்கும். 

15 நாள் அலைச்சலில் அசந்து நான் தாமதமாக எழுந்து, கூட்டம் குறித்த செய்திக்காக நாளிதழ்களை டீ'யோடு புரட்டியப் போது மணி காலை 9.00. மொபைல் அழைத்தது. 

"என்ன சிவசங்கர், களைப்பு நீங்கி எழுந்தாச்சா ? கூட்டம் சிறப்பு" அழைத்தவர் தளபதி தான், வேறு யார் !

# கூட்டிக் கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும்.... உழைப்புன்னா தளபதி தான்.

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

சிமெண்ட் ஆலைகளும் மாறி வரும் தொழில் நுடபமும்....

இன்று ஒரு வேலையாக அரியலூர் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் சிமெண்ட் ஆலைக்கு சென்றிருந்தேன். மிக சமீபத்தில், நவீன தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலைக்கு ஆய்வுக் குழுவில் சென்றிருந்த நினைவு வந்தது.

                            

தன்னிச்சையாக இரண்டு ஆலைகள் குறித்த ஒப்பீட்டுக் காட்சி மனதில் ஓடியது. plant மற்றும் machineries குறித்த ஒப்பீட்டை ஒதுக்கி அலுவலகம் குறித்து மாத்திரம் இங்கே சொல்ல விழைகிறேன்.

அரசு ஆலையில் தலைமை நிர்வாகி அறை தனியாக. மற்றப் பிரிவுகளுக்கு தனித்தனி அறை. இண்டர்காமில் பேசிக் கொள்ளலாம், அல்லது ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்கு வந்து பேச வேண்டும். எல்லா அறைகளிலும் அறை முழுதும் பீரோ மற்றும் மேசை. மேசை நிறைய ஃபைல்கள், கத்தை கத்தையாக பேப்பர்கள். அரிதாக கணினி.

                            

தனியார் ஆலையின் அலுவலகத்தினுள் நுழைந்தால் ஐ.டி அலுவலகத்திற்கு வந்த உணர்வு. மிக பிரம்மாண்டமான ஹாலில் இடுப்பளவு மறைக்கப்பட்ட கியுபிக்கிள்ஸ், அதில் ஒவ்வொருவரும் லேப்டாப்புடன். எங்கும் பேப்பர் கண்ணில் படவில்லை.

இரண்டு. மூன்று அறைகள் நிர்வாகிகளுக்கு, அவை பாதியளவு கண்ணாடியாலான சுவர் கொண்டவை. அதில் ஒரு அறை தலைமை நிர்வாகி அறை. அங்கிருந்து அலுவலகம் முழுதையும் கண்காணிக்கலாம்.

ஹாலின் கடைசியில் கண்ணாடியால் தடுக்கப்பட்ட பெரியளவு அறையில் ஹாலிவுட் படத்தில் வருவது போல பெரிய, பெரிய மானிட்டர்கள். அதனை மூன்று பேர் கண்காணித்துக் கொண்டிருந்தனர். ஆலையின் மொத்த நடவடிக்கையும் இங்கிருந்து கண்காணிக்கப்படுகிறது, கட்டுப்படுத்தப்படுகிறது.

சுரங்கத்தில் இருந்து வருகிற சுண்ணாம்புக்கல் தரம் அறிவதிலிருந்து, கலவை விகிதாச்சாரம் சரி செய்வதிலிருந்து ஒவ்வொரு நடவடிக்கையும் அலுவலகத்தில் இருந்தே நடக்கிறது. அரசு ஆலையில் இது அத்தனையும் பிளாண்டில் நடைபெறும்.

அடுத்து முழு சுவரும் கண்ணாடியாலான ஒரு கண்ணாடி கான்ப்ரன்ஸ் அறை. அதில் கிட்டத்தட்ட 20 பேர் கொண்ட கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. அது தினம் நடக்கும் கூட்டமாம், முதல் நாள் நடவடிக்கைகளை ஆய்ந்து மறுநாள் நடவடிக்கைகளை திட்டமிடும் கூட்டம். இது போன்ற கூட்டம் அரசு ஆலையில் மாதம் ஒரு முறை நடைபெறும் என நினைக்கிறேன்.


                               

நவீனப்படுத்தப்பட்டதால் அரசு ஆலையை விட 50% குறைவான மனித சக்தியை கொண்டு தனியார் ஆலைகள் இயக்கப்படுகின்றன. அந்த வேலைகளும் காண்டிராக்டாக விடப்படுகிறது. இது ஒரு புறம் வேலைவாய்ப்பு இழப்பு, இன்னொரு புறம் நிறுவனத்திற்கு லாபம்.

இத்தனை நவீன வசதிகளோடும், எளிய நடைமுறைகளோடும் தனியார் ஆலைகள் லாபகரமாக இயங்குகின்றன. அரசு ஆலைகள் சிவப்பு நாடாக்களில் கட்டப்பட்டு தள்ளாடுகின்றன. (ஆனால் எங்கள் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை ஆறு ஆண்டுகளுக்கு மேலாக லாபத்திலேயே இயங்குகிறது, ஆனால் அரசின் ஆலங்குளம் ஆலை நட்டம்)

# அரசு துறைகளிலும் நவீனமயம் தேவை, மெல்ல மெல்லவாவது....