பிரபலமான இடுகைகள்

வியாழன், 31 ஆகஸ்ட், 2017

இராஜேந்திர சோழங்குறிச்சி !

சோழங்குறிச்சி , அரியலூர் தொகுதியில் உள்ள ஒரு கிராமம். உடையார்பாளையம் பேரூரில் இருந்து சற்றே உள்ளடங்கிய கிராமம். மாமன்னன் இராஜேந்திர சோழன்,  கங்கைகொண்ட சோழபுரத்தை தன் தலைநகராக கொண்டு நிர்மாணித்த புதிய சாம்ராஜ்யத்தின் ஒரு கிராமம் தான் இது. அதனால் தான் 'சோழன்'குறிச்சி. கடந்த வாரத்தில் இருந்தே, அங்கிருந்து அழைப்பு.

திருஞானம், சென்னையில் மென்பொருள் துறையில் பணியாற்றுபவர். விடுமுறை கிடைத்தால் ஊருக்கு வந்துவிடுவார். மதி, வெளிநாடு சென்று பணியாற்றி வந்தவர். நல்லதம்பி, கல்லூரியில் துறைத் தலைவர். ஊருக்கு அழைத்துக் கொண்டிருந்த தோழர்கள் இவர்கள். நண்பர்கள் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கேரம்போர்ட் மற்றும் செஸ் போர்ட் வாங்கி வைத்திருந்தனர். அதனை வழங்குவதற்கே அழைத்திருந்தனர்.

சோழங்குறிச்சி ஒரு சிறப்பான ஊர். ஊர் வளர்ச்சிக்கு எல்லோரும் தோள் கொடுப்பார்கள். சோழங்குறிச்சியில்  அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு பயிலும் மாணவர்கள் சதுரங்கம் (செஸ்) விளையாட்டில் மாவட்ட அளவில் நான்காண்டுகளாக பரிசு வாங்கி வருகிறார்கள். இதை கண்டு ஜெயங்கொண்டம் நகரில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகிகளே பாராட்டியுள்ளார்கள்.

காரணம், தனியார் பள்ளியில் சதுரங்கம் விளையாட்டைப் பயிற்றுவிக்க, தனிப் பயிற்சியாளர் உள்ளார். சோழங்குறிச்சி அரசு பள்ளியில் பயிற்றுவிப்பவர்கள் விளையாட்டு ஆசிரியர் மட்டுமல்ல, ஆங்கிலம், கணித ஆசிரியர்களும். இங்கு இதற்கு தனியாக பயிற்சியாளர் கிடையாது. தங்கள் பாடம் நடத்திய நேரம் போக மற்ற ஓய்வு நேரங்களில் சதுரங்க விளையாட்டை பயிற்றுவிக்கிறார்கள்.

பள்ளியில் தலைமையாசிரியர் தலைமையில் நேற்று (30.08.2017) நடைபெற்ற எளிமையான விழாவில் கேரம்போர்டையும், செஸ் போர்டையும் மாணவர்களிடம்  வழங்கினோம். ஆசிரியர்களையும், வெற்றிப் பெற்ற மாணவர்களையும் வாழ்த்தி இரண்டு நிமிடம் பேசினேன். நேற்று நிகழ்ச்சி நடந்த அதே நேரம், அகல்யா என்ற இந்தப் பள்ளியின் மாணவி கரூரில் நடைபெற்ற மணடல அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்தக்கட்டமாக, இவர் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க இருக்கிறார்.

வரும் செப்டம்பர் மாதம் சோழங்குறிச்சியில், ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதற்காக ஒரு பெரும் திடலை சுத்தம் செய்து, விளையாட்டிற்கு தயார் செய்யும் பணி நடக்கிறது. இங்கு தான் அரசு உயர்நிலைப்பள்ளிக்கான புதிய கட்டிடங்கள் அமைய உள்ளன. அந்த இடத்தை பார்வையிட அழைத்து சென்றனர். வெளியில் இருந்து மண் கொண்டு வந்து கொட்டப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளது இந்தப் பகுதி. ஜல்லிக்கட்டுக்கும், பள்ளிக்கும் சேர்த்து பணி. இளைஞர்கள் பணியை பெருமிதமாக குறிப்பிட்டார் மூத்தவர் ஓய்வுப் பெற்ற ஆசிரியர் கலியபெருமாள்.

சோழர் காலத்து கிராமம் என்பதால் நிறைய ஏரிகள் உள்ளன. அவற்றை குடிமராமத்து பணி மூலம், ஆழப்படுத்தும் பெரும் பணி நடந்துள்ளது. எல்லா ஏரிகளையும் கழகத் தோழர்களே தூர் வாரியிருந்தனர். கடந்த மாதம் ஒரு ஏரியை பார்வையிட்டேன். அந்த ஏரியை மதி மற்றும் நண்பர்கள் ஆழப்படுத்தியிருந்தனர். இன்று ஒரு ஏரியை அழைத்து சென்று காண்பித்தனர்.

நான்கு அடி ஆழம் இருந்த சேறும், சகதியும் அகற்றப்பட்டிருக்கின்றன. பணியை சிறப்பாக செய்ய உதவியவர் சி.என்.அண்ணாதுரை என்ற உள்ளூரை சேர்ந்த பேராசிரியர் என்பதை குறிப்பிட்டார் ஷாஜஹான். அப்போது தான் திரு ஒரு வரலாற்று தகவலை சொன்னார். நாங்கள் பார்வையிட்டுக் கொண்டிருந்த ஏரியும் ராஜேந்திர சோழர் காலத்து ஏரி தான்.

அப்போது சுற்றிலும் காட்டுப்பகுதி. அங்கு ராஜேந்திர சோழன் வேட்டைக்கு வருவாராம். நாங்கள் நின்றிருந்த ஏரியின் எதிர்கரையில் ஒரு கோயில் இருக்கிறது. ராஜேந்திரசோழன் காலத்தில் அங்கு ஒரு கற்றளி இருந்ததாகவும், அதை ஒட்டிய  ஓய்வு மண்டபத்தில் தான் ராஜேந்திரன் வேட்டைக்கு பின் ஒய்வெடுப்பார் என செவி வழி வரலாறாக உள்ளது. அங்கு வந்தால் அவர் மனத் துயர்  நீங்குமாம். அதனால் அந்த கோயிலின் பெயர் 'மனத் துயர் நீக்கும் மகாலிங்கம்' ஆலயம்.

எது எப்படியோ, ஊரில் இருக்கும் ஏரிகளை தூர் வாரி, மக்கள் மனத் துயர் நீக்கியுள்ளனர் கழகத் தோழர்கள்.

இந்த ஏரியை தூர் வாரிய கழகத் தோழருக்கு சற்று பொருள் நட்டம். ஆனாலும் அயராமல் பணி முடித்துள்ளார். அவருக்கு ஊர் சார்பாக, ஊராட்சி செயலாளர் செல்வராஜ் தலைமையில் சால்வை அணிவித்து வாழ்த்தி, நன்றி தெரிவித்தோம்.

ராஜேந்திர சோழர் காலத்தில் வெட்டப்பட்ட ஏரியை தூர் வாரிய அந்தத் தோழரின் பெயர், 'ராஜேந்திரன்'.

# நற்பணிகள் மூலம் வரலாற்றில் இடம் பெறும் "சோழங்குறிச்சி" !

வியாழன், 17 ஆகஸ்ட், 2017

தேமதுர தமிழோசை உலகமெலாம்..

கலைஞன் பதிப்பகம், சென்னையில் தமிழ் நூல்களை பதிப்பித்துக் கொடுத்து தமிழ்பணியை சிறப்பாக செய்யும் அமைப்பு . 1956ல் மாசிலாமணி அய்யா அவர்கள் துவங்கியது தான் இந்த "கலைஞன் பதிப்பகம்".

ஒரு கட்டத்தில் தனது மகன் நந்தன் அவர்களிடம் பொறுப்பை கைமாற்றி விட்டார் அய்யா மாசிலாமணி. தமிழ் நூல்களை பதிப்பித்து தமிழ் பணியாற்றிய தந்தை வழியில், நந்தன் அவர்களும் தமிழ்பணி தொடர்கிறார்.

கலைஞன் பதிப்பகம் இதுவரை 5,000  நூல்களைப் பதிப்பித்திருக்கிறது. இது மிகப் பெரிய எண்ணிக்கையாகும். இதில் பெரும் பகுதி தமிழ் சார்ந்ததாக இருக்கும். 

கலைஞன் பதிப்பகமும், அண்ணாமலைப் பல்கலைகழக தமிழ் துறையும் இணைந்து அடுத்தக் கட்ட பணியை கடந்த ஆண்டு துவங்கினார்கள். நூல் எழுதும் ஆர்வம் உள்ளவர்களை உற்சாகப்படுத்தும் பணி.

கடந்த ஆண்டு கலைஞன் பதிப்பகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து 400 நூல்களை வெளிக் கொணர்ந்தார்கள். ஆய்வரங்கம் நடத்தி ஆய்வு நூல்களை வெளியிட்டதன் தொடர்ச்சியாக இந்தப் பணி.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பணி நீண்ட வரலாறுடையது. பழம் தமிழ் நூல்களை புதுப்பித்தார்கள். ஓலைச் சுவடிகளில் இருந்தவற்றை நூல் வடிவம் கொடுத்தார்கள். அதன் நீட்சியாக இப்போது இந்தப் பணி.

தமிழ்த்துறை தலைவர் பேராசியர் அரங்க.பாரி அவர்கள் தனி அக்கறையோடு இந்த புதுமையான திட்டத்தை வடிவமைத்தார். அடுத்து ஆயிரம் நூல்களை வெளிக் கொணரும் திட்டம் வைத்திருக்கிறார்.

தமிழ் அறிஞர்கள், ஆளுமைகள் குறித்து நூல் அமைந்திருக்க வேண்டும். நூறு பக்க அளவில் நூல் அமைந்திருக்கும். நூலை வெளியிடும் நிகழ்ச்சிக்கு முன் இருக்கும் அமர்வில் நூல் சுருக்கம் அதன் ஆசிரியரால் வாசிக்கப்படும்.

இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் கைக்கோர்த்துள்ளன. மலேசியாவில் உள்ள மலேயப் பல்கலைக்கழகம் கூடுதல் நெருக்கம். காரணம், மலேசியத் தமிழர்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக நூல் வெளியீட்டு விழாவில் மலேசிய நூல் ஆசிரியர்கள் பங்கேற்றனர். அதே போல இந்த ஆண்டு மலேசியாவில் வெளியிட திட்டமிட்டனர்.

மலேசியப் பல்கலைக்கழகம் நூறாண்டு கால வரலாறு உடையது. சிங்கப்பூரில் முதலில் துவக்கப்பட்ட மருத்துவகல்லூரி பின்னர் பல்கலைக்கழகமாக விரிவாக்கப்பட்டது.

சிங்கப்பூரும், மலேசியாவும் பிரிந்த பிறகு "மலேயப் பல்கலைக்கழக"மானது. மலேயப் பல்கலைக்கழகத்தில் 1955ல் இந்திய ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டது.

இந்த மையம் தான் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைந்து உலக தமிழறிஞர்கள் மாநாடும், நூல் வெளியீட்டு விழாவும் நடத்தியது.

இதில் மலேசியாவை சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட 100 நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழகத்தை சேர்ந்தவர்கள் எழுதிய 25 நூல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. இரண்டு நாட்கள் அமர்வுக்கு பிறகு, வெளியீட்டு விழா நடைபெற்றது.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் மலேயப் பல்கலைக்கழகம் அமைந்திருக்கிறது. மருத்துவம் முதல் அனைத்துத் துறைகளும் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றுள்ளன.

சிங்கப்பூர் அதிபராக விளங்கிய எஸ்.ஆர்.நாதன் மலேயப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் என பெருமையாகக் குறிப்பிடுகிறார்கள்.

இதே போல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் மலேசியாவிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. மலேசியாவின் சுதந்திரப் போராட்ட வீரரும், மலேசிய இந்திய காங்கிரஸின் தலைவராக விளங்கியவருமான வி.டி.சம்பந்தன், அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்.

மலேயப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆராய்ச்சி மையத்தின் தலைவர் முனைவர் மோகனதாஸ், பேராசிரியர்கள் முனைவர் கிருஷ்ணன் மணியன், முனைவர் குமரன் என மலேசியத் தமிழர்கள். தமிழ் ஆர்வலர்கள். இவர்கள் ஆராய்ச்சி மற்றும் தேர்வுப் பணிகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தோடு இணைப்பில் இருப்பவர்கள்.

இப்படி ஒன்றுக்கொன்று பிணைப்பாக உள்ள அமைப்புகள் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்புற  செய்திருந்தார்கள். இறுதி நாள் விழாவில் நானும் பங்கேற்றேன்.

# தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்வோம் !


ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

தமிழ்நாடு படும்பாடு !

சென்னை விமான நிலையம் சென்றடைந்தேன். வழக்கமான கூட்ட நெரிசல். முன்புறம் சீருடையில்லா காவல்துறையினர் இருந்தனர். அதில் ஒருவர் பார்த்த முகமாக இருந்தார். நான் அவரை கடக்கும் போது சிரித்தார். நான் சிரித்து நின்றேன். "என்ன சார், எப்ப முடியும்?". யோசித்தேன். " அரசாங்கம் தான் சார்". "இப்ப தான் ஆரம்பிச்சிருக்காங்க. பார்ப்போம் சார்" என்று சிரித்து நகர்ந்தேன்.

குடியேற்றத் துறையில் (இமிக்ரேஷன்) கொஞ்சம் கடுமையாகத் தான் நடந்து கொள்வார்கள். காரணம், வெளிநாடு செல்பவர்களில் சிலர் எல்லா தவறான வழியையும் கையாள்வார்கள். அவர்களிடம் கடுமை காட்டியாக வேண்டும்.  அதனால் எல்லோரிடமும் அந்த கடுமை தொடரும். ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும் போதும், இதே போல கிடைத்த அனுபவங்கள் பல உண்டு.

அதையே எதிர்பார்த்து கடவுச்சீட்டை நீட்டினேன். வாங்கி பார்த்தார். "விசா" என்று கை நீட்டினார். கொடுத்தேன், வாங்கி பரிசோதித்தார். "என்ன விஷயமா போறீங்க?". " ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போறேங்க". "நீங்க என்ன செய்றீங்க?". கொஞ்சம் தயங்கி சொன்னேன்," அரசியல்வாதி". நிமிர்ந்துப் பார்த்தார். "என்னவா இருக்கிறீங்க சார்?".  "முன்னாள் எம்.எல்.ஏ சார்". " எந்தத் தொகுதிங்க?". "குன்னம் சார்".

" எந்தக் கட்சிங்க சார்?". "தி.மு.கங்க". கையில் இருந்த கடவுச்சீட்டு, நுழைகை அனுமதிச் சீட்டு எல்லாவற்றையும் கீழே வைத்தார். " அப்புறம் எப்ப தான் சார் ஆட்சியக் கவிழ்ப்பீங்க ?". இது சமீபகாலமாக வழக்கமாக சந்திக்கிற கேள்வி தான். இருந்தாலும் இப்போது வித்தியாசமான இடத்தில் இருந்து என்பதால் கொஞ்சம் திகைப்பு. "இல்ல சார். கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டா காலமெல்லாம் பேச்சாகும்னு தளபதி நினைக்கிறார்".

" மக்கள் அப்படி எதிர்பார்க்கல சார். எப்ப இந்த ஆட்சி முடியும்னு தான் பார்க்குறாங்க. இப்ப அவங்களா கவிழ்த்துப்பாங்கன்னு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கு. நல்லது நடக்கட்டும் சார்". சொல்லி விட்டு கடவுச்சீட்டில் படக்கென்று முத்திரைக் குத்தினார். கடவுச்சீட்டை திருப்பிக் கொடுத்து போகலாம் என்று தலையசைத்தார். "கண் ஸ்கேன் சார்", என்றேன். முடிந்தது என்று தலையசைத்தார். நன்றி சொல்லி நகர்ந்தேன்.

விமானம் சரியான நேரத்திற்கு கிளம்பியது. தூக்கத்தோடு பயணம். அயல்தேசம். அறை சென்று, சிறிது ஓய்விற்கு பிறகு, தயாரானேன். உணவிற்கு பிறகு நிகழ்ச்சிக்கு கிளம்பினேன். சீருந்து பிடித்தேன். அது ஒரு பல்கலைக்கழக வளாகம். சிறப்பான கட்டமைப்பு வசதிகள் கொண்டிருக்கிறது. முதல் நாளில் இருந்து நிகழ்ச்சிகள் போய் கொண்டிருந்தன.

தமிழ் துறை சார்ந்த விழா. பல தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள் கூடியிருந்தனர். சிலருக்கு அறிமுகப்படுத்தப் பட்டேன். ஆர்வமான உரையாடல் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. ஒரு தமிழறிஞர் என்னைப் பார்த்து கையமர்த்தினார். "அதெல்லாம் இருக்கட்டும். என்ன தான் அய்யா நடக்குது. இந்தக் கொடுமை எல்லாம் எவ்வளவு நாள் தொடரும். சீக்கிரம் முடிக்க வழியில்லையா?".

சிரித்தேன். " சிரிக்காதீங்க. பதில் சொல்லுங்க". பழைய பதிலையே (கவிழ்ப்பு வேணாமே) சொன்னேன். அவர் சமாதானம் ஆகவில்லை. " சார், அரசியல்ல இதெல்லாம் செய்யல்லன்னா தான் தப்பு. பாமர மக்களுக்கு அவங்க தினப்படி வாழ்க்கைக்கு பிரச்சினை இருக்கக் கூடாது. அவ்வளவு தான். நியாயம், தர்மம் பேசறவங்க ஓட்டுப் போட வரமாட்டாங்க". ஒரு பிரசங்கமே நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிகள் ஆரம்பித்து நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் வந்திருந்தனர், பங்கேற்பாளர்கள். தேநீர் இடைவெளி. பதிப்பக உரிமையாளர் கேட்டார்,"முரசொலி பவள விழா சிறப்பா இருந்ததா?". "முதல் நாள் சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் நாள் மாலை நிகழ்வு மாத்திரம் மழை குறுக்கீடு".

அப்போது ஒரு அயல்நாட்டு அன்பர் ஆரம்பித்தார்," என்னாச்சு உங்க தமிழ்நாட்டுக்கு?".

# அய்யா, ஆள விடுங்க. நான் தமிழ்நாடே இல்லிங்க...

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

பவளவிழா முரசொலிக்கு

18 வயதில், எதிர்கால திட்டமிடலில் கல்வியில் கவனம் பாயும். அல்லாதோருக்கு பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் மிகும். சிலருக்கு விளையாட்டில்  கவனம் திரும்பும்.

அந்த சிறுவனுக்கு தமிழ் மீதும், அரசியல் மீதும், எழுத்தின் மீதும் ஆர்வம் திரும்பியது. அவற்றிற்கு வடிவம் கொடுக்கும் வகையில் பத்திரிகை துவங்க திட்டமிடுகிறார்.

அன்றைய அவருடைய பொருளாதார சூழலுக்கு தகுந்தவாறு, கையெழுத்துப் பத்திரிக்கையை துவக்குகிறார். 18 வயதில் பத்திரிக்கை நிறுவனர் "கலைஞர்".

பத்திரிக்கைக்கு பெயர் சூட்ட வேண்டும்.  துவங்கும் போதே, போர் அறிவிப்பு ஒலியை நினைவில் நிறுத்தி பெயர் சூட்டுகிறார். அப்போது இந்திக்கு எதிரான போர் முரசு தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருந்த நேரம்.

அதை ஒட்டிய பெயராக "முரசொலி" என சூட்டுகிறார். அன்றிலிருந்து சமூக அவலங்களுக்கு எதிராக அந்த முரசு தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது, இன்றும்.

மெல்ல வளர்ந்து வரும் சூழலில் முரசொலியை துண்டறிக்கையாக அச்சிட்டு வெளியிடுகிறார், அதன் நிறுவனரான தலைவர் கலைஞர். பின்னர் மாத இதழாக மலர்ந்தது முரசொலி.

அடுத்து வார இதழானது முரசொலி. அடுத்தக் கட்ட வளர்ச்சியாக நாளிதழாக உருவெடுத்தது. அதன் ஒவ்வொரு படி வளர்ச்சியையும் திட்டமிட்டு செயல்படுத்தினார் நிறுவனர் கலைஞர்.

தலைவர் கலைஞரும் அரசியல், கலை உலகம் என பயணித்துக் கொண்டிருந்தார். அவரும் படிப்படியாக வளர்ச்சி அடைந்துக் கொண்டிருந்தார். "பராசக்தி" மூலம் திரை உலகில் முத்திரை பதித்தார்.

படத்திற்கு கலைஞர் எழுதிய அனல் பறக்கும் வசனங்கள் திரைப்படத்தின் வெற்றியை உறுதி செய்தன. அந்த திரைக்கதை வசனங்கள் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியானது. அதன் விற்பனை உச்சம் தொட்டது.

வசனப் புத்தகத்தில் கிடைத்த லாபத்தை கொண்டு, சென்னையில் முரசொலிக்கு அச்சகம் திறந்தார். நாளிதழாக கழகத்தின் கொள்கைகளை கழகத் தோழர்களிடம் கொண்டு சேர்த்தது முரசொலி.

அன்றைய காலகட்டத்தில் திராவிட இயக்கத் தலைவர்கள், எழுத்தாளர்கள் பல இதழ்களை நடத்தி வந்தனர். அதில் இன்றும் வெற்றிகரமாக நடக்கும் ஒரே பத்திரிக்கை 'முரசொலி' மட்டும் தான்.

ஏன், தலைவர் கலைஞரே பல பத்திரிக்கைகளை துவக்கி நடத்தியவர், பல பத்திரிக்கைகளை துவக்க காரணமாக இருந்தவர். ஆனால் அவற்றிலும் 'முரசொலி' தான் தொடர்ந்து ஒலிக்கிறது.

ஒரு பத்திரிக்கை தொடங்கி நடத்துவது சாதாரண செயல் கிடையாது. பொருளாதார பிரச்சினை ஒரு பக்கம். நாளிதழுக்கு தினம் செய்திகளை தொகுத்து வெளியிடுவது சிரமம்.

வெகுஜனப் பத்திரிக்கை என்றால், அரசியல், பொழுதுபோக்கு, கலை, இலக்கியம், ஜோதிடம் என கலந்துக் கட்டி சமாளித்து விடலாம். ஒரு இயக்க செய்திகளை மாத்திரம் வெளியிட்டு, கொள்கைகளை கொண்டு சேர்க்கும் பணியை செய்யும் நாளிதழை நடத்துவது மிகச் சிரமம்.

அதையும் 75 வருடம் நடத்துவது மிகப் பெரும் சாதனை. அந்த சாதனையை செய்தவர் தலைவர் கலைஞர். அதிலும் துவங்கிய நாளில் இருந்து, 75வது வருடம் வரை நிறுவியவரே நிர்வகிப்பது பெரும் சாதனை ஆகும்.

கையெழுத்து பத்திரிக்கையாக துவங்கிய போது எப்படி கண்ணும் கருத்துமாக முரசொலியை கவனித்தாரோ, முதலமைச்சராக இருந்த போதும் கவனித்தார், உடல் நலம் குன்றும் வரையிலும் தொடர்ந்து கவனித்தார்.

உடன்பிறப்பு கடிதம், கேள்வி பதில் என கலைஞரது நேரடி பங்களிப்பு இருக்கும். அதல்லாமல் கேலிச்சித்திரங்கள், எதிர்கட்சி நாளிதழ் மற்றும் தலைவர்களின் தாக்குதலுக்கான பதில் செய்தி என அவரது மறைமுக பங்களிப்பு இருக்கும்.

சாதாரண ஒரு தி.மு.க தொண்டர் கூட மாற்று அரசியல் கட்சித் தலைவரின் சவாலுக்கு பதில் சொல்லும் திறன் உள்ளவர்கள் என்று வியக்கப்படுவதுண்டு. அதற்கு முழு முதற் காரணம், முரசொலி தான். முரசொலி படித்தாலே தயாராகி விடலாம்.

காலை முரசொலி அலுவலகத்திற்கு சென்று கடிதம் எழுதி விட்டு, அன்றைய நாளிதழை வடிவமைத்து விட்டு வருபவர், மாலை முதல் இதழ் அச்சான உடன் அதைப் பார்த்தால் தான் மற்ற பணிகளுக்கு செல்வார். அவரது அந்த கடமை உணர்வு தான் முரசொலியின் வெற்றி.

முரசொலியின் வெற்றி  கலைஞரின் வெற்றி. அந்த அளவிற்கு கலைஞர் வேறு, முரசொலி வேறு என்று பிரிக்க முடியாது. கலைஞரின் வார்த்தையில் சொல்வதானால், "முரசொலி கலைஞரின் மூத்தப் பிள்ளை".

அந்த மூத்தப் பிள்ளை தான், கலைஞரின் உடன்பிறப்புகளுக்கு பாடம் நடத்திய ஆசிரியர், பள்ளிக் கூடம், பல்கலைக்கழகம். முரசொலியை மாணவனாக வணங்குகிறேன்.

# தொடர்ந்து முரசு ஒலிக்கும், காலமெல்லாம் !

_எஸ்.எஸ்.சிவசங்கர்.

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

122 எம்.எல்.ஏக்களுக்கான ஆட்சி !

மேசை மீது தினத்தந்தியை விரித்து வைத்து விட்டு, டீயை ஒரு வாய் குடித்தேன். சொய்ங், சொய்ங், சொய்ங் என தொடர்ந்து சத்தம். "என்ன முருகா சத்தம்?" என்றுக் கேட்டேன்.

வாசற்படியில் நின்ற முருகன் சொன்னார், "வரிசையா காரா போவுதுண்ணா. தேசியக் கொடி கட்டிய காரு, அதிமுக கொடி கட்டிய காருன்னு வரிசையா போவுதுண்ணா". "மந்திரிங்க காரா?". " ஆமாண்ணா, சில மந்திரிங்களும் போறாங்க".

இத்தனை மந்திரிகள் வந்தா ஏதாவது பெரிய நிகழ்ச்சியா இருக்கணும்னு நினைச்சா, கொஞ்ச நேரத்தில் செய்தி வந்தது. அத்தனை மந்திரிகளும் அரியலூர் கலைக்கல்லூரிக்கு தான் வந்தார்கள்.

வந்து, ஒரு உயரமான கழியை நட்டு வைத்து பூசை செய்திருக்கிறார்கள். மறுநாள் பத்திரிக்கைகளில் புகைப்படமும் வந்தது. ஏழு மந்திரிகள் கழுத்து நிறைய மாலையோடும், தலையில் பரிவட்டத்தோடும் நின்றார்கள்.

மறைந்த முதல்வர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய நூற்றாண்டு விழா. அதை அரியலூரில் வரும் 28ம் தேதி நடத்துகிறார்கள், அரசு சார்பாக. அந்த விழாவுக்கான பந்தல் கால் நடும் விழாவிற்கு தான் ஏழு மந்திரிகள் வந்துள்ளனர். விழாவிற்கு முதல்வரோடு பத்து மந்திரிகள் வருவார்களாம். அதற்கு முன்னோட்டம் தான் இந்த பந்தக்கால் நிகழ்ச்சியாம்.

ஒரு மந்திரிக்கே எவ்வளவு வேலைகள் இருக்கும். ஏழு மந்திரிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால் ஒரு பந்தக்கால் நட இவர்கள் வந்தால் என்றால், அப்படி வேலை இல்லாமல் இருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.

முதல்வருக்கே வேலை இல்லை என்னும் போது, பாவம் மந்திரிகளுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது? எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்துவது, அதற்கு ஏற்பாடு செய்வது என  மொத்தத்தில் தமிழக அரசாங்கம் இப்படித் தான் நடக்கிறது.

இதைத் தெரிந்ததால் தான் முதல்வரை மந்திரிகள் மதிப்பதில்லை, மந்திரிகளை எம்.எல்.ஏக்கள் மதிப்பதில்லை, எம்.எல்.ஏக்களை கட்சிக்கார்கள் மதிப்பதில்லை. எல்லோரும் சேர்ந்து மக்களை மதிப்பதில்லை.

மிகக் கொடூரமான மக்கள் பிரதிநிதிகள் சேர்ந்து, ஒரு அரசாங்கம் அவலமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இது தான் தமிழகத்தின் தலைவிதியாக இருக்கிறது.

கடலூர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருக்கிறார். அவர் பெயர் எம்.சி.சம்பத். அந்த மாவட்டத்தை சேர்ந்த நான்கு அதிமுக எம்.எல்.ஏக்களும் அவரை மதிப்பதில்லை. அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை அவர்கள் புறக்கணிப்பார்கள்.

நேற்று உச்சகட்டமாக சீனியர் மந்திரி செங்கோட்டையன் கலந்துகொண்ட நிகழ்ச்சியையும் புறக்கணித்திருக்கிறார்கள், சம்பத் கலந்து கொண்டதால். ஆனால் மந்திரிகள் அது குறித்து கவலைப்படவில்லை, வெட்கப்படவும் இல்லை.

காலையில் சென்னையில் பேட்டி கொடுக்கிறார் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க.தமிழ்ச்செல்வன். "டி.டி.வி.தினகரன் தான் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர்" என்று உறுதிப்பட தெரிவிக்கிறார்.

நண்பகல் மதுரையில் இருந்து அமைச்சர் உதயக்குமார் பேட்டி. "டி.டி.வி.தினகரன் தன்னிச்சையாக பதவிப் பட்டியல் அறிவித்தது தவறு. அவருக்கு அதிகாரமே கிடையாது", அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் உதயக்குமார்.

இரவு, தொலைக்காட்சியில் ஒரு காட்சி. தேனீ மாவட்டம் தேக்கடி பக்கம் ஒரு ஆய்வு. மந்திரி உதயக்குமார் முன் நடக்க, தங்க.தமிழ்ச்செல்வன் பின் நடக்கிறார். ஒருவரை ஒருவர் பார்த்து 70 எம்.எம்'ல் சிரித்துக் கொள்கிறார்கள். காலை ஆரம்பித்து, மாலைக்குள் இவ்வளவு டிராமாக்கள்.

மந்திரி ராஜேந்திர பாலாஜி, முன்னாள் மந்திரி வைகைச்செல்வனை " அழுகிய தக்காளி" என்கிறார். இவர் அவரை 'போஸ்டர் ஓட்டியவர்' என்கிறார். இன்னும் ஒரே அணியில் தான் இருக்கிறார்கள்.

எம்.எல்.ஏ வெற்றிவேலும், மந்திரி ஜெயக்குமாரும் ஒருவர் முகத்தில் ஒருவர் காரி உமிழ்ந்துக் கொள்ளாத குறை தான். அவ்வளவு விமர்சனங்கள். ஆட்சியில் யார்  ஓங்குவது என்பதற்கு தான் இவ்வளவு பாடும் படுகிறார்கள். மக்கள் பிரச்சினைக்காக அல்ல.

இத்தனையும் எடப்பாடியா, டி.டி.வி.டியா என்று ஒரே அணிக்குள் நடக்கும் கூத்துகள். இதல்லாமல், ஓ.பி.எஸ் கும்பல் ஒன்று. கண்ணாடி முன்னால் உட்கார்ந்து தனக்கு தானே பேசிக் கொள்ளும் கூட்டம். எல்லாவற்றையும் காரசாரமாக பேசிவிட்டு, சட்டமன்றத்திற்குள் சென்றால் மௌனவிரதம் இருக்கும் வாய்பேசா மனிதர் போல் இருப்பார்கள்.

எவ்வளவு வெட்டுக்குத்து, காறி உமிழ்தல் நடந்தாலும் ஆட்சி கவிழக்கூடாது, பதவி போய்விடக் கூடாது என்பது மாத்திரமே ஒரே கொள்கை அவர்களுக்கு. யாரும் யாரையும் மதிப்பதில்லை, யார் பேச்சையும் யாரும் கேட்பதில்லை. ஆனால் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

முதல்வரும், அமைச்சரும், எம்.எல்.ஏவும் மதிப்பது ஆட்சியையும், பதவியையும் மாத்திரமே.

மொத்தத்தில், "இது 122 எம்.எல்.ஏக்களுக்காக, 122 எம்.எல்.ஏக்களால் நடத்தப்படும், 122 எம்.எல்.ஏக்களின் ஆட்சி".

(அப்போ ஆறுகுட்டி கதைன்னு கேக்குறீங்களா? போகப்போகத் தெரியும்)

இந்த 122ம் சேர்ந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறார்கள்.

# நீங்க நல்லா இருக்கணும், நாளும் முன்னேற !