வீட்டில் எங்கும் அவர் படம் கண்ணில் தட்டுப்படும். அவரது தோற்றம் ஒரு தாத்தாவாக மனதில் உருக் கொடுத்தது. பின்னர் விவரம் தெரிய ஆரம்பித்த பிறகு அவர் தான் இந்த இனத்தின் தந்தை என்றும், எம் தலைமுறைக்கு தாத்தா தான் என்றும் புரிந்தது.
அவர் போராடியதற்கான பலனை அனுபவிப்பதால், அவரது போராட்டத்தின் வீச்சை உணராமல் போகலாம் பலர். ஆனால் அவர் தேவையை உணர வைப்பதற்கு சிலர் இருப்பது நிம்மதி.
அவர் ஏதோ வெறும் கடவுள் மறுப்பாளர் என்று சித்தரித்து, அவரை ஒரு வட்டத்திற்குள் அடைக்க ஒரு கூட்டமே முனைந்து இன்றைக்கும் செயல்படுவது தான் அவரது காலம் கடந்து நிற்கும் வெற்றி.
இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் பெண்ணுக்கு சொத்தில் சம உரிமை சட்டம், 1925ல் அவர் எழுப்பிய முழக்கத்தின் பலன். பெண் உரிமைக்கு போராடிய போராளித் தலைவன்.
கள் எதிர்ப்பு போராட்டத்தில் தலைமையேற்க, தன் சொந்த தோப்பில் இருந்த தென்னை மரங்களை வெட்டி சாய்த்த தீரன்.
செல்வாக்கான, செல்வமிடுக்கான குடும்பத்தில் பிறந்து விட்டு, அவற்றை எல்லாம் துறந்து விட்டு, சிறு வயதில் வகித்த அரசியல் பதவிகளை தூக்கி எறிந்து விட்டு, பொது வாழ்வில் ஈடுபட்டு, அவமானங்களை தாங்கிக் கொண்டு கடைசி வரை உழைத்த தலைவன்.
இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக அனுபவிக்கிற சிலவற்றை ஓராண்டுக்கு முன்பாக சொல்லி இருந்தால் நம்பியிருக்க மாட்டோம். ஆனால் எழுபது, எண்பது ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் சொன்ன சிலவற்றை நினைத்தால் பிரமிப்பு தான்.
"தொலைவில் இருப்போரிடம் பேசுவதற்கான கருவி பையில் வைத்துக் கொள்ளக் கூடிய அளவிற்கு வந்துவிடும். ஆணும், பெண்ணும் கூடாமலே குழந்தை பெற்று கொள்ளும் அளவு விஞ்ஞானம் வளரும்". இது அன்றே பெரியார் சொன்னது.
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தோர் சமூகத்தில் சமய நிலைக்கு வர வேண்டும் என உழைத்து, சமூகநீதி கொள்கை வலுப்பெற அடித்தளம் அமைத்தவர்.
அவர் நினைத்திருந்தால் குடும்ப சொத்தை அனுபவித்துக் கொண்டு, ஈரோட்டில் அத்தனை பதவிகளிலும் கோலோச்சி சொகுசாக வாழ்ந்திருக்கலாம். அடுத்தவர் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகாமல் வாழ்ந்திருக்கலாம். ஆனால் நாம் தான் வாழ்ந்திருக்க முடியாது, வீழ்ந்திருப்போம்.
# அவர் என் தாத்தா தான், நம் இனத்தின் தாத்தா தான் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக