பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

ஈழ அரசியல் - கலைஞரின் தகுதி

கடந்த 1991 மே 21 காலை, தூக்கம் கலையும் முன்பே ஓரே சத்தம், இரைச்சல். வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார வாகனங்கள் தாக்கப்படும் ஓசை. எனது தந்தை எஸ்.சிவசுப்ரமணியன் ஆண்டிமடம் தொகுதி கழக வேட்பாளர். அதனால் தான் தாக்குதல். 

ராஜீவ் மரண செய்தி. திமுக-வினர் கொலை செய்து விட்டனர் என வாழப்பாடி ராமமூர்த்தி கூக்குரலிட, தமிழகம் முழுதும் கழகத்தினர் மீது தாக்குதல். ஆத்தூர் வேட்பாளருடைய கடை எரிக்கப்
படுகிறது. பலருடைய வீடுகள் எரிக்கப்பட்ட செய்தி. கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. பெரும் பொருளாதார இழப்பு.

1976-ல் இழந்த ஆட்சிப் பொறுப்பை, 13 ஆண்டு காலம் எதிர்கட்சியாக பல சோதனைகள், இன்னல்கள், வழக்குகள் என சந்தித்து கழகத்தை சேதாரம் இல்லாமல் காப்பாற்றி 1989-ல் மீண்டும் ஆட்சி கட்டிலில் ஏற்றினார் தலைவர் கலைஞர்.

அப்படி பாடுபட்டு வந்த ஆட்சியை, ஒன்றரை ஆண்டில் நாம் இழக்க காரணம் விடுதலைப் புலிகள். 1990-ல் மத்திய அரசில் ஒரு அமைச்சர், சுபோத்கான் சகாய் என பெயர். சந்திரசேகர் அமைச்சரவையில். அந்த அமைச்சர் தமிழகத்திற்கு வந்தால், பத்திரிக்கையாளர்கள் குவிவார்கள். காரணம் அமைச்சரின் பரபரப்பான பேட்டி, " தமிழகத்தில் விடுதலைப்புலிகள் நடமாட்டம், ஊடுருவல், வன்முறைக்கு திட்டம் "என .

ஒரு கட்டத்தில், இந்திய அரசின் தகவல்களை விடுதலைப்புலிகளுக்கு திமுக அரசு சொல்லிவிட்டது எனக் கூறி ஆட்சியை கலைத்தார்கள். இதற்கு முன்பாக ஈழத்தமிழர்களுக்காக, திமுக ஆற்றிய பணிகளை கூட கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். யாரால் ஆட்சி இழக்கப்பட்டது என்பதை மாத்திரம் கணக்கில் கொள்ளுங்கள். அடுத்து, இதையொட்டி ராஜீவ் மரணம். யாரால் செய்யப்பட்டது, யார் மீது பழி விழுந்தது என்பது நாடறிந்தது.

இதில் கொலைப் பழி ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் பதினைந்து நாட்களுக்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் கொலைக்கு தமிழக மக்கள் தீர்ப்பே எழுதிவிட்டனர். தீர்ப்பு- வரலாறு காணாத தோல்வி. தலைவர் கலைஞரை தவிர அத்தனை தொகுதிகளிலும் தோல்வி. கழக ஆட்சி கலைக்கப்பட்டது , சனநாயகப் படுகொலை என கோபமாக இருந்த மக்களின் ஆவேசம், ராஜீவ் மரணத்தால் கழகத்தின் மீதே திசைதிரும்பிவிட்டது,

இருந்த ஆட்சியையும் இழந்தோம், வரவேண்டிய ஆட்சியையும் இழந்தோம். இரண்டுக்கும் காரணம், ஈழத்தமிழர் பிரச்சினை தான். ஈழத்தமிழர்களுக்காக இரக்கம் காட்டியதால் ஒரு முறை, ஈழத்தமிழர்கள் செயலால் ஒரு முறை.

அந்த கலைஞரை பார்த்து தான் நெடுமாறன் கேலி செய்கிறார். ஈழத்தமிழர்களால் இழந்த கலைஞரை பார்த்து, ஈழத்தமிழர்கள் பணத்தில் வாழ்க்கை நடத்துகிற நெடுமாறன் கேட்கிறார் , "டெசோ மாநாடு நடத்த என்ன தகுதி ? ".

# கலைஞரை தாண்டி எவனுக்கு தகுதி இருக்கிறது ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக