பிரபலமான இடுகைகள்

சனி, 25 ஆகஸ்ட், 2012

பொதுப்பணி - தனியார் பங்களிப்பு

அரசே மக்களுக்கான எல்லாப் பணிகளையும் செய்வது என்பது சிரமம்.

 தனியார் நிறுவனங்கள் தாங்கள் சம்பாதிக்கும் லாபத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை மக்களுக்கு செலவிட அரசு வருமானவரி விலக்கு அளித்துள்ளது.

இந்த நிறுவனங்களை அணுகி சரியானப் பணிகளுக்கு செலவ
ிட வைப்பது நல்ல நிர்வாகிகளின் கடமை.

அண்ணன் ராசா அவர்கள், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில், 2008 ஆம் ஆண்டு, அரியலூர் நகரில் ஒரு பணியை மேற்கொண்டார். அரியலூர் நகரம் சிமெண்ட் ஆலைகளால் சூழப்பட்டது. அங்கு வரும் லாரிகளால் , நகரில் இருந்த சாலைகள் சேதமடைந்து வந்தன. புறவழிச்சாலை அமையாத நேரம் அது.

அண்ணன் ராசா அவர்கள், தனியார் சிமெண்ட் நிறுவன அதிகாரிகளை அழைத்துப் பேசி, அவர்கள் மூலம் 30 லட்சம் செலவில், ஒரு சாலையை சீரமைத்துக் கொடுத்தார். நகரின் போக்குவரத்து சீரடைந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெள்ளசேதம் ஏற்பட்ட நேரத்தில், எனது வேண்டுகோளை ஏற்று, ராம்கோ சிமெண்ட் நிறுவனம், சேந்தமங்கலம் கிராமத்திற்கு கிட்டதட்ட 5 லட்சம் மதிப்பிற்கு ஒரு பாலம் கட்டித்தர ஒப்புதல் அளித்துள்ளனர்.

அண்ணன் ராசா அவர்களுக்கு அரியலூர் நகரின் தோற்றத்தை மேம்படுத்த வேண்டும் என்பது எண்ணம். அதனால் தான் புறவழிச்சாலையை பெற்றுக் கொடுத்து, அதில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தையும் அமைத்துக் கொடுத்தார். பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஏரியை சுற்றி, ஒரு பூங்கா அமைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வந்தார்.

அவர் நீலகிரி தொகுதிக்கு சென்ற சூழலில், ஆட்சி மாறிய நிலையில், பணி தடைப் பட்டது.

அரியலூர் மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்ற அனுஜார்ஜ் அவர்கள், அரியலூர் நகரின் தோற்றத்தை மேம்படுத்தும் பணியை கையிலெடுத்தார். ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆரம்பித்தார், எதிர்ப்புகள் குறித்துக் கவலைக் கொள்ளாமல்.

ஏரியை சுற்றி பூங்கா அமைக்கும் பணிகளையும் துவங்கியுள்ளார், தனியார் நிறுவன பங்களிப்பை பெற்று. சிறப்பான பணி நடைபெறுகிறது. இதில் குறிப்பிட வேண்டிய செய்தி, அரியலூர் நகராட்சித் தேர்தலில் கழகம் வெற்றி பெற்றுள்ளது. கழகத்தின் நகரச் செயலாளர் முருகேசன் தான் தற்போது நகர்மன்றத் தலைவர்.

ஆளுங்கட்சியின் எதிர்ப்பை புறந்தள்ளி, அவரை அவ்வப்போது அழைத்து பேசி , பணியை முடுக்கி விட்டு வருகிறார். இது அல்லாமல், பேருந்து நிலைய விரிவாக்கம், மார்க்கெட் மேம்பாடு போன்ற பணிகளுக்கு அரசின் நிதியை பெற்றுத் தந்துள்ளார். நகர் மன்றத் தலைவர் முருகேசனும் எந்தக் குறுக்கீடும் இல்லாமல், பணிகள் நடைபெற செயல் பட்டு வருகிறார்.

இந்த திட்டங்களை யார் துவக்கினார்கள் என்று குறுகிய எண்ணம் இல்லாமல், எதிர்கட்சி நிர்வாகம் என்ற பாகுபாடு இல்லாமல் செயல்பட்டு வருகிறார், எதிர்கட்சி என்ற காரணத்தால், எங்களது கோரிக்கைகள் சில ஏற்கப்படாமல் போயிருக்கலாம், ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவர் அனுஜார்ஜ் அவர்களது செயல் திறன், உறுதி பராட்டத்தக்கது.


# சிறந்த நிர்வாகிகளால் தான் எந்தத் திட்டமும் சிறப்படைய முடியும்.... பாராட்டுவோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக