பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

" விண்ணளக்கும் சிறகுகள்" கவிதை நூல்

விண்ணை அளக்கட்டும் இந்த " சிறகு "....

காலை ஒரு கழகத்தோழரின் புதியத் திருமணக்கூடத்தை திறந்து வைத்துவிட்டு, நீலகிரி செல்லும் அவசரத்தில் வண்டி ஏறினேன். ஒரு இளைஞரை ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலர் அண்ணன் தனசேகர் அறிமுகப்படுத்தினார்.
" கவிதை நூல் வெளியிட அண்ணன் திருச்சி சிவா தேதி கொடுத்துள்ளார், நீங்களும் வரவேண்டும்" என்றார். நூல் இருக்கிறதா என கேட்டு வாங்கிக் கொண்டேன். பயணத்தை வீணாக்காமல் படித்தேன். 

அருமை. கிராமத்து மணம் மாறா வார்த்தைகள். அமுதமாகவும் இனிக்கிறது. ஆசிடாகவும் எரிக்கிறது. சாட்டையாய் சொடுக்குகிறது. சந்தனமாய் குளிர்விக்கிறது. உங்கள் பார்வைக்கு சில....

" ஞாயிறு வாசிகள் "
மற்றைய தினங்களின்
வாழ்க்கையையும் சேர்த்து
ஞாயிற்றுக்கிழமையில்
வாழ நினைத்து
தோற்பவர்கள்....

" சுனாமி "
இவ்வளவு நாள்
இந்த உடம்பிற்கு
உப்பிட்டது
இப்படி நீ
உட்கொள்ளத்தானா ?....

" பெண் "
வெட்கத்தை எங்கு
ஒளித்து வைக்கிறீர்கள்
நீயும்
மருதாணிச்செடியும்....

" அரசியல் "
வாக்குறுதிகள் நிரம்பி வழியும்
ஒலி பெருக்கிக் குழாயடியில்
பிளாஸ்டிக்குடங்களாய்
பொதுசனம்
கவிழ்ந்து கிடக்கும்....

" பறை முழக்கம் "
தப்புக்கொட்டுடா - தம்பி
தப்புக்கொட்டுடா
ஆண்டமாரு காது அதிர
தப்புக்கொட்டுடா....
( நூல்: விண்ணளக்கும் சிறகுகள், ஆசிரியர் : பெ.மணிகண்டன், தேவாமங்கலம், அரியலூர் மாவட்டம் , 97889 80385 )


கவிஞர் மணிகண்டனின் " விண்ணளக்கும் சிறகுகள்" கவிதை நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.
மாலை 6.30லிருந்து இரவு 10.30 வரை சிறப்பாக நடைபெற்றது. அண்ணன
் திருச்சி சிவா வெளியிட , நான் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பெற்றேன். கவிஞர் நந்தலாலா ஆய்வுரை வழங்கினார். தமிழ் ஆர்வலர்களும், கழகத்தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புலவர்,கவிஞர், பேராசிரியர்கள் தமிழ் மழையில் நனைந்தோம். அண்ணன் சிவா அவர்களின் இலக்கியப் பேருரையில் அனைவரும் லயித்துப் போனோம்.

கவிதை நூலைப் போல விழாவும் வெற்றி, சிறப்பு.



# இந்தக் கவிப்படகு காலவெள்ளத்தை மீறி கரை சேர வேண்டும். சேரும். வாழ்த்துக்கள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக