பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 20 டிசம்பர், 2013

இசை இடைவெளியை நிரப்புவாரா இமான் ?

தோசைக் கல் சூடாகி விட்டதா என பார்க்க தண்ணீர் தெளித்தால், சொய் என்று ஓசை வரும். அதே போல "சொய் சொய்" பாடல் வந்தப் போதே தமிழ் திரையுலகம் சூடாகி விட்டது. நீண்ட நாள் காத்திருந்த "கையளவு நெஞ்சங்களில் கடலளவு இடம்" பிடித்தார் இமான்.

                                

மெல்ல இமான் பக்கம் பார்வைகள் திரும்பின. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர்கள் நிறைந்திருந்தாலும், ரசிகர்கள் நெஞ்சம் நிறையவில்லை. இளையராஜாவுக்கு பிறகு கிராமத்து இசையை ரசிக்கக் கொடுப்பதில் ஒரு தேக்கம் தான்.

இமான் நடிகர் விஜயின் "தமிழன்" படத்தில் தன் இசைப் பணியை துவக்கியிருக்கிறார். அதற்கு பிறகு வருடம் இரண்டு, மூன்று படங்கள் என தன் இருப்பை நிலை நிறுத்தி வந்தவர் "மைனா"வில் தன் வித்தியாச இசை மூலம் இறக்கை கட்டினார். "மனங்கொத்தி பறவை"யில் மறுபடியும் பறந்தார்.

"கும்கி"யில் தான் மக்கள் மனதை, கரும்பு வயலில் புகுந்த யானையாக துவம்சம் செய்தார். "ஒன்னும் புரியல", "அய்யய்யோ ஆனந்தமே", "சொல்லிட்டாளே", " நீ எப்போ புள்ள" என எல்லாப் பாடல்களுமே ஹிட். மலையை களமாகக் கொண்ட படத்தில் பிண்ணனி இசையில் நமமை அங்கேயே வாழ வைத்தார்.

அடுத்தப் படம் "சாட்டை". பள்ளிக்கூடத்தில் நடைபெறும் கதை. இசைக்கு எங்கே ஸ்கோப் என்று நினைக்க முடியாத அளவிற்கு பாடல்களும் அருமை, பிண்ணனி இசையும் அருமை. அதிலும் கேரக்டர்களுக்கு ஏற்றவாறு வித்தியாச இசை.

தொடர்ந்து "தேசிங்குராஜா". மீண்டும் எல்லாப் பாடல்களும் ரசிக்கத் தக்க அளவில். "பாம், பாம்" வித்தியாசமாக. "நெலா வட்டம் நெத்தியிலே" சரியான குத்துப்பாடல். "அம்மாடி, அம்மாடி" சிறந்த மெலோடி. நல்ல வெரைட்டி.

மொத்த தமிழ் நாட்டையும் "வருத்தப்படாத வாலிபர் சங்க"த்தின் உறுப்பினர்களாக ஆக்கியதில் இமானின் பங்கு பெரிது. எல்லோரையுமே இளைஞர்களாக்கி, "இந்தப் பொண்ணுங்களே, ஊதாகலரு ரிப்பன்" என்று பாட வைத்தார், தாளம் போட்டுக் கொண்டு. "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" என்று முணுமுணுக்காத வாய் உண்டா ?

                  

அடுத்து "பாண்டியநாடு" படையெடுப்பு. "டையரே, டையரே" பாடலில் கிராமத்து இசையில் குத்தி எடுத்து விடுகிறார். "ஃபை ஃபை கலாய்ச்சிஃபை" பாடலில் இளமைத் துள்ளல். "ஏலே மருது" மெலோடி. "ஒத்தக்கட ஒத்தக்கட மச்சான்" நம்மை ஆட வைக்கும்.

ஒத்தக்கட -ல் ஒரு இசைக் கருவியை தனியாக இசைப்பார்," ஃப ஃபா", என்ற ஓசை இடையில் வரும். அது நம்மை சுண்டும். கவனிக்காதவர்கள், இனி கவனிக்கவும். ஒவ்வொரு பாடலிலுமே, இதே போன்று ஒரு தனி நச். இந்த வித்தியாச முயற்சிகள் தான் ஒரு இசையமைப்பாளரின் தனி முத்திரை.

முயற்சி எடுத்து இதே போன்று இமான் தொடர்ந்தால், இந்த வெற்றிகள் தொடரும்.

# ஒத்தக்கட ஒத்தக்கட மச்சான், இவன் ரெண்டு கண்ணையும் இசை மேல வச்சான்...

                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக