பிரபலமான இடுகைகள்

வியாழன், 12 டிசம்பர், 2013

தியேட்டரே தீ பிடித்தது போல் ஆகிறது....

அந்தக் காட்சியை பார்த்ததிலிருந்து, அந்த டிரஸ் எடுக்க வேண்டும் என்ற உந்தல். அவர் அந்த சேரில் உட்கார்ந்து மெல்ல தலையை உயர்த்தி, புகையை வெளிவிடும் காட்சி. சந்தன நிற சட்டை, டார்க் மஸ்டர்ட் கலர் பேண்ட்.

                               Download Annamalai Songs

பத்துக் கடை ஏறி, இறங்கி தேடி, துணி எடுத்துத் தைத்து, அதற்கேற்ற ஷூ எடுத்து போட்டு, அந்தக் காரிடரில் அவர் நடக்கும் நடையை நடந்துப் பார்த்து, அப்படியே இமிடேட் செய்து. அது அந்தத் தலைமுறை. அந்தப் படம்...

பெங்களூரு. ஶ்ரீராம்புரா. சுஜாதாவா, தேவியா எந்தத் தியேட்டர் என்று நினைவில்லை. முதல் நாள், முதல் காட்சி. ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். டைட்டில் போட்டவுடனேயே விசில் பறக்கிறது.

பெயர்கள் ஒடி முடிகின்றன. அந்த பிரபல எவர்கிரீன் நண்பர் தோன்றுகிறார். அவரது உதவியாளர் அன்றைய நிகழ்ச்சிகளை சொல்கிறார். அன்று மாட்டுப் பொங்கல் என்று தெரிகிறது. தனது அத்தனை நிகழ்ச்சிகளயும் ரத்து செய்கிறார்.

அவரது தந்தை அழைத்து மந்திரியை பார்க்க சொல்கிறார். மறுக்கிறார் மகன், நண்பனை பார்க்கப் போகிறேன் என்கிறார். "மந்திரிய போய் பார்ரான்னா, மாட்டுக்காரனப் போய் பார்க்க போறேங்கிற...." எகிறுகிறார் தந்தை. "என்ன உயிருக்கு உயிரா நேசிக்கிற ....... தான் முக்கியம்". கட்.

கேமரா திரும்புகிறது. ஒரு உற்சாகக் கும்பல் மாட்டை துரத்திக் கொண்டு ஓடுகிறது. தேவாவின் இசையில் சூடு பிடிக்கிறது. அவரின் பின்புறம் தெரிகிறது. தியேட்டர் கொதி நிலைக்கு வருகிறது. கையை தலைக்கு பின்புறமாகக் கட்டி ஏகாந்தமாக நிற்கிறார்.

இசைக்கேற்ப அவரது கால்கள் தாளமிடுகின்றன, ரசிகர்கள் காலும். வானத்தில் பறந்து வருகிற மேளம் சரியாக அவர் கையில் லேண்ட் ஆகிறது. ஸ்லோமோஷனில் அவர் தலை நிமிர்கிறது. மெல்ல சிரிக்கிறார். தியேட்டர் உற்சாகமாகிறது.


                        

கண்ணை சிமிட்டுகிறார். தியேட்டரில் மின்னல் அடிக்கிறது. "வந்தேண்டா பால்காரன், அடடா பசு மாட்டப் பத்தி பாடப் போறேன்" தியேட்டர் ஆரவாரத்தில் வெடிக்கிறது. தியேட்டரே தீ பிடித்தது போல் ஆகிறது.

இனி ஒரு படம் அவருக்கும் அப்படி அமையாது. இனி ஒரு நடிகருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காது. இனி ரசிகர்களும் அப்படி இருப்பார்களா என்பதும் சந்தேகம் தான்.

# ஒரு சூப்பர் ஸ்டார் தான், ஒரே சூப்பர் ஸ்டார் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக