பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 20 டிசம்பர், 2013

அதிகார போதை ஒரு நாளும் தன்னை தீண்டாமல் ...

அது 2007 உள்ளாட்சி மன்ற தேர்தல் நேரம். பேராசிரியர் அன்பழகன் அவர்கள் அன்றைய நிதித்துறை அமைச்சர். அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதற்கு சுற்றுப்பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. 

அரியலூர் வந்து ஓய்வு எடுத்து விட்டு பிரச்சாரம் செய்வது போல் திட்டம். அந்த நேரத்தில் அரியலூரில் அமைச்சர்கள் தங்கும் அளவிற்கு, லாட்ஜ்கள் கிடையாது. அரசினர் விருந்தினர் இல்லங்களில், அரசியல்வாதிகள் தேர்தல் நேரங்களில் தங்க தடை.

அதனால் அரியலூருக்கு அருகே உள்ள தனியார் சிமெண்ட் ஆலையின் கெஸ்ட் ஹவுஸில் தங்க அனுமதி கேட்டோம். ஒப்புக் கொண்டனர். வருகைக்கு முதல் நாள் அறையை பார்த்து ரெடி செய்ய போனோம். திடீரென அறைகள் காலி இல்லை என கைவிரித்தனர்.

அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு பேசிப் பார்த்தோம். "வட இந்தியாவிலிருந்து ஆலைப் பராமரிப்பிற்கு வந்த பொறியாளர்கள் தங்கியுள்ளனர். ஒரு அறையும் காலி இல்லை" என்று சொல்லி விட்டனர். என்ன செய்வது என்று புரியாத நிலை.

பேராசிரியருக்கு தகவல் கொடுத்தோம். ஒன்றும் பிரச்சினை இல்லை, பிரச்சார நிகழ்ச்சிக்கு நேரே வருகிறேன் என்று தெரிவித்து விட்டார். அதே போல் நிகழ்ச்சிக்கு நேராக வந்தார். நாங்கள் வருத்தம் தெரிவித்தோம்.

"இதுல என்னய்யா இருக்கு. அவன் ரூம் இல்லன்னு சொன்னா நீங்க என்ன பண்ண முடியும் ? அவங்ககிட்டயும் ரூம் இல்லன்னா, என்ன பண்ணுவாங்க. நான் வர்ற வழியில கார நிறுத்தி முகத்த கழுவிகிட்டு வந்துட்டன். விடுங்கய்யா" என்றார்.

அவர் முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர். கலெக்டரை அழைத்து ஒரு வார்த்தை சொன்னால் போதும், குவாரியில் இருந்து ஒரு பிடி சுண்ணாம்புக் கல் போகாமல் தடுக்க முடியும், ஃபேக்டரியே ஓடாது. ஆனால் அவருக்கு அந்த சிந்தனையே கிடையாது.

அதிகாரம் என்பது போதை போன்றது. ஆனால் அது ஒரு நாளும் தன்னை தீண்டாமல் பார்த்துக் கொண்டவர். அதிகாரம் தவிர்த்து, என்றும் எளிமையாக இருந்து பழகிக் கொண்டவர். அவரது நீண்ட பொதுவாழ்வில் அவரது மாறாத அடையாளம் எளிமை.


                  

 92-வது பிறந்தநாள் காணும் இனமானப் பேராசிரியரை போற்றி வணங்குவோம்.

# அரசியலில் மிளிர நினைப்பவர்களுக்கு அவரது எளிமை ஒரு முன்மாதிரி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக