பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 6 டிசம்பர், 2013

மலை ஏற்றிய நண்பன்...

ஒரு மணி நேரமாகும், சாப்பாடு தயாராக என்றார்கள். அது மலையடிவாரத்தில் இருக்கும் காட்டுக் கொட்டகை. சிக்னல் இல்லை, வேறு பொழுது போக்கவும் வழி இல்லை. பக்கத்தில் இருந்த சிறு குன்று அன்போடு அழைத்தது. 


ட்ரெக்கிங்கில் சிறு ஆர்வம் உண்டு. தார்சாலை முடிந்து வயல்காட்டு வழியே நடந்தோம். வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் எங்களை வித்தியாசமாக பார்த்தனர், ஓட்டு கேட்கிற குருப் வெள்ளை வேட்டி சட்டையில், ஓட்டில்லாத இடத்திற்கு எங்கே போகிறதென. 

வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் வழி கேட்டோம். காட்டினான். மலையடிவாரம். சிறு வயதில் ஊரில் பார்த்த சில செடிகளை இங்கே கண்டோம். கிளுவை முள்ளை நீண்ட நாட்கள் கழித்து கண்டோம். கத்தாழை ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்தது. 

வழியில் கண்ட ஆவாரம் மலர்கள், “ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா ? என்றன.



மூன்றுபுறமும் மலை சூழ்ந்திருக்க அந்த இடத்தில் மழை நீரை தேக்க கசிவு நீர் குட்டை அமைத்திருந்தனர். ஆங்காங்கு கொன்றை பூத்து மஞ்சள் வனமாகக் காட்சியளித்தது. ஆலம்பழம் செக்கசேவேல் என கண்ணை கவர்ந்தது.


உயரம் குறைவாக இருப்பதால் கரடு என அழைக்கிறார்கள். ஏறுவதற்கு தடம் தேடிக் கொண்டிருந்தோம். வழிகாட்டிய சிறுவன் வந்து நின்றான். மேலே போயிருக்கியா என்று கேட்டோம். போயிருக்கிறேன் என்றான்.

அவன் காட்டிய தடத்தில் ஏற ஆரம்பித்தோம். பையன் பெயர் மகேந்திர பிரசாத். ஆறாம் வகுப்பு படிப்பவன். பள்ளி கிளம்ப தாமதமானதால் மாடு மேய்க்க வந்தவன் எங்களுக்கு வழிகாட்டியானான். மேலே விவசாயம் செய்யப்படாததால், இயற்கை கெடாமல் இருக்கிறது.

தட்டான்கள் நிறைய பறக்கின்றன. பட்டாம்பூச்சி அவ்வளவு இல்லை. சில இடங்களில் செங்குத்தான ஏற்றம் இருந்தாலும், அவ்வளவு சிரமம் இல்லை. மேல் பகுதியை அடைந்தோம். ஒரு சிறு கோவில். ஒரு உயரமானத் தூண். அதன் மேல் எண்ணெய் ஊற்றி ஏற்ற விளக்கு. சிலை கிடையாது.


"மாயவர்" கோயில். திருவிழா நாட்களில் மக்கள் திரளாக வந்து வணங்குவார்களாம். இன்னும் இரண்டு மலை தாண்டி, ஒரு உயரமானப் பகுதி தென்பட்டது. அதன் மீது இன்னும் பிரசித்தி பெற்ற கோயில் இருக்கிறதாம். எல்லாம் வெகு மக்களின் சிறு தெய்வங்கள் தான்.

ஒரு மணி நேரம் நெருங்கியதால், கீழே இறங்கினோம். மகேந்திரன் திடீரென தூயத் தமிழில் கேட்டான், "அய்யா, எதற்காக மேலே ஏறினீர்கள் ?" என்று. "மலை ஏறுவது என்றால் மகிழ்ச்சி. அதனால் தான்" என்றேன். "அதைவிட மகிழ்ச்சி, நீ ப்ரெண்டானது" என்றேன்.

மகேந்திரன் முகத்தில் மகிழ்ச்சி மத்தாப்பூ. கிராமத்து வெள்ளந்தி சிரிப்பு. கண்களும் சிரித்தன.

# வலது மூக்கில் இருந்த மூக்குத்தியும் சிரித்தது போல இருந்தது !

                               Displaying IMG_20131201_111846.jpg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக