பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 6 டிசம்பர், 2013

நீண்ட நெடும் பயணம் இன்னும் முடியவில்லை...

“சமூக நீதிக்காக மண்டேலா 67 ஆண்டுகள் போராடினார். நாங்கள் உங்களை 67 நிமிடங்களோடு தொடங்க சொல்கிறோம்” இது அய்க்கிய நாடுகள் சபை  'உலக நெல்சன் மண்டேலா தினத்தை' அறிவித்த அன்று விடுத்த செய்தி.

அந்த அறிவிப்பை ஒட்டி மண்டேலாவே வைத்த வேண்டுகோள், ”ஏழ்மையை எதிர்க்கவும், அமைதியை பரப்பவும், கசப்பை நீக்கி நட்பை பெருக்கவும், உலக மக்களை ஒன்று திரட்ட இந்த நாள் பயன்படுமானால், அதுவே என்னை பெருமைப் படுத்துவதாகவும்”

இப்படி ஒவ்வொரு நிமிடத்தையும் அமைதிக்காக கழித்தவர். ஒரு பெரு நோக்கோடு வாழ்வின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்தவர். தன் வாழ்நாளை ஆதிக்க வெறிக்கு தின்னக் கொடுத்து அடிமை தேசத்தின் வாழ்வை மீட்டவர்.

அதுவே காலனி நாடு. அதிலேயே ஒடுக்கப்பட்ட இனம். அவர்களுக்கான போராட்டம். அதன் முடிவு எப்போதென்று தெரியாது. முடிவு என்று ஒன்று வருமா என்பதும் தெரியாது. ஆனாலும் தொடர்ந்து போராடினார்.

வாழ்ந்த 95 ஆண்டுகளில் போராட்டங்களில் கழிந்த காலம் 67 ஆண்டுகள். இதில் சிறையில் கழிந்த காலம் 27 ஆண்டுகள். அதிபராய் இருந்த காலம் அய்ந்து ஆண்டுகள். கூட்டிக் கழித்தால் போராட்டமே வாழ்க்கை.

சுருண்ட முடியும், இடுக்கிய கண்களும், கருத்த தோலுமாய் மண்டேலா இளைஞனாய் களம் கண்ட போது, அந்த சமூகமே நினைத்திருக்காது, இவன் தான் தன் இன விடுதலையின் அடையாளம் என. ஆனால் பொறுமையோடும், அசாத்திய துணிச்சலோடும் வடிவெடுத்தான் சுதந்திரத்தின் மறு உருவாய்.


நெல்சன் மண்டேலா உலகத்திற்கு சொன்ன செய்திகள் பல இருக்கலாம். ஆனால், அதில் எல்லோரும் தன் வாழ்க்கைக்குமான செய்தியாக கொள்ள வேண்டியது இது தான்.

“ஒரு பெரு மலையை ஏறிய பிறகே இன்னும் பல மலைகளை ஏற வேண்டியது தெரிகிறது. அந்த இடத்தில் சிறிது ஓய்வு எடுத்தேன், நான் கடந்து வந்த தூரத்தை காண்பதற்கும், என்னை சூழ்ந்திருக்கிற மகத்தான எதிர்காலத்திற்கான பார்வைக்கும்.

ஆனால் நான் ஒரு கணமே ஓய்வெடுக்க முடியும், காரணம் சுதந்திரத்தோடு பொறுப்புகள் காத்திருக்கின்றன். மேலும் எனக்கு ஓய்வை தொடர தைரியமில்லை, காரணம் எனது நீண்ட நெடும் பயணம் இன்னும் முடியவில்லை”

# அந்த நீண்ட நெடும் பயணத்தை நாமும் தொடர்வோம் !


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக