பிரபலமான இடுகைகள்

மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாநாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

ஒரு குறும்படம் எடுத்திருக்கலாம்....

ஒரு குறும்படம் எடுத்திருக்கலாம், மிஸ்ஸாயிடுச்சி. 

மாநாட்டுக்கு இரண்டு நாள் முன்பே சென்னையில் இருந்து கிளம்பி, காரிலேயே வந்த ஆர்வம். மாநாட்டுக்கு முதல்நாள் காலை ஒரு முறை, மாலை ஒளி வெள்ளத்தில் பார்க்க ஒரு முறை என இரு முறை பந்தலை பார்வையிட்டு ஆலோசனை வழங்கிய நேர்த்தி. விரலால் மைகை வருடி, டெஸ்ட் செய்த லாகவம்.

இரண்டு மாதமாக உடன்பிறப்புகளுக்கு, முரசொலியில் ஏழு கடிதங்கள் மாத்திரமே எழுதி, அதில் இது வரை நடைபெற்ற மாநாடுகளின் வரலாற்றை எல்லாம் தொகுத்து, இயக்க உணர்வை ஊட்டி, வரலாற்று அறிவை வழங்கி, பெருந்திரளாய் திரட்டி, திருச்சியை திக்குமுக்காட வைத்த பாங்கு.

இதை எல்லாம் தாண்டி, இரண்டு நாள் மாநாட்டு நிகழ்வை கையாண்ட விதம் தான் டாப்.

காலையில் மாநாட்டு நிகழ்வுக்கு வந்தால், மதிய உணவு இடைவேளைக்கு செல்வார். மதியம் உணவு முடிந்து வந்தால், இரவு தான் அறைக்கு செல்வார். இரண்டு நாட்களும் இப்படி தான், இயற்கை உபாதைக்காக ஒரே ஒரு முறை தான் மேடைக்கு பின் பக்கம் உள்ள அறைக்கு சென்றாக நினைவு.

மேடை மீது கார் வந்து நின்று, அவரது சக்கர நாற்காலி தரையில் இறங்குவதற்குள்ளாக வணங்குவோருக்கு பதில் வணக்கம். இறங்கி மேடையை அடைவதற்குள், மேடையை ஒரு ஸ்கேன் பார்வை. ஏதாவது திருத்த வேண்டும் எனில் உடன் ஆலோசனை.

மேடைக்கு வந்தவுடன் அந்த சக்கர நாற்காலி மேடையின் நுனிக்கு செல்லும். குழுமியிருக்கும் உடன்பிறப்புகளை கண்டு மலர்ந்த முகத்தோடு, அய்ந்து விரலையும் விரித்து ஒரு கையசைப்பு. அவ்வளவு தான் மாநாட்டு திடலே ஆர்ப்பரிக்கும்.


                     

பந்தலின் கடைகோடியில் இருக்கும் தொண்டனுக்கும் தன்னை பார்த்து தலைவர் கையசைப்பதாகவே உற்சாகம். வந்தவர்களை வரவேற்றதாக அவருக்கும் நிறைவு. இது தான் அவரையும் உடன்பிறப்புகளையும் கட்டிப்போடும் பாச பந்தம்.

மேடையில் வந்து அமர்பவர் அசையாமல், அசராமல் ஒவ்வொருவர் பேச்சையும் கவனித்தார். அது வளரும் சொற்பொழிவாளரோ, கழகத்தின் முன்னோடித் தலைவரோ எல்லோர் பேச்சையும் உன்னிப்பாக கவனித்தார். அவ்வப்போது சிறு புன்னகை.


                      

அருகே வந்து வணங்குபவர்களுக்கு திருப்பி கையசைப்பு, வணக்கம். சால்வை வழங்குபவர்களுக்கு பார்வையாலேயே ஒரு நன்றி. சிறப்பாக பேசுபவர்களை பார்வையாலேயே ஒரு வருடல். கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு முறையான, உரிய மரியாதை.

லேசாக போரடிக்கும் போது முன்னால் இருக்கும் மேசையில் பென்சிலால் சிறு தட்டல்கள். எப்போதாவது சிறு பருப்பு துகளை வாயில் போட்டு மெல்லல்.  உதவியாளர் சண்முகநாதனிடம் சிறு தகவல் பரிமாற்றம்.


                        
                               

அவ்வப்போது தளபதி அவர்களுடன் ஆலோசனை...


                 

ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் நினைவு பரிசு வழங்கிய போது, ஒரு அங்கீகாரச் சிரிப்பு. இந்த படத்தை பார்த்தால் தெரியும்.

                                

தனது நிறைவு பேச்சின் போது முகத்தில் வெளிப்படுத்திய உணர்வுகள். “என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே” எனும் போது ஏற்படுத்தும் உற்சாகம். அண்ணன் நேருவுக்கு பாராட்டு, ராம்ஜெயம் குறித்து நெகிழ்வு, ஆளும் அரசுக்கு சாட்டை வீச்சு, கொள்கை முழக்கம் என அனைத்தும் பொதிந்த பேச்சு.

பட்டியலிட்டால் எழுத்திலடங்கா....

இதை எல்லாம் தான் ஒரு குறும்படமாக எடுத்திருக்கலாம். ஒரு ஆய்வே செய்யலாம்.

# அவர் தான் கலைஞர் !

ஞாயிறு, 9 பிப்ரவரி, 2014

1990-ல், திருச்சியில், ஆறாவது திமுக மாநில மாநாடு

ஆறாவது திமுக மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. கோவையில் அய்ந்தாவது மாநில மாநாடு 1975-ல் நடைபெற்று நீண்ட வருடங்களுக்கு பிறகு 1990-ல் ஆறாவது மாநாடு. நீண்ட இடைவெளி என்பதால், கழகத் தோழர்களும் உற்சாக உச்சியில்.

1977-ல் ஆட்சிக்கட்டிலில் இருந்து இறங்கியிருந்த கழகம், 1989-ல் மீண்டும் ஆட்சியை பிடித்திருந்தது. அந்த உற்சாகமும் கூடுதலாக. நான் கல்லூரியில் இருந்து நேராக மாநாட்டிற்கு சென்றிருந்தேன். பிரம்மாண்ட ஏற்பாடுகளுடன் தயாராகியிருந்தது திருச்சி.

கீற்றுக் கொட்டகையாக அமைக்கப்பட்டிருந்த பந்தல். முன் முகப்பு அரண்மனை போலவும், உள் முகப்பு பனையோலையால் ஆன அலங்கார வளைவு. உள்ளே திமுக இளைஞரணி நடத்திய “திராவிட இயக்க வரலாற்றுக் கண்காட்சி” இடம்பெற்றது.

கண்காட்சியில் திராவிட இயக்க தலைவர்களின் படங்கள், வரலாற்று நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. கல்லூரி மாணவனான எனக்கு அது புது அனுபவம். ஆண்டிமடம் ஒன்றியத்தில் இருந்து வந்திருந்த கழகத் தோழர்களுடன் எங்கள் குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர்.

ஊர்வலம் நடைபெற்ற சாலையில் அலங்கார வளைவுகள் ஒவ்வொரு ஒன்றியத்தின் சார்பாக அமைக்கப்பட்டிருந்தது. அப்போது கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் இணைந்திருந்த, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம். முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் அவர்கள் மாவட்ட செயலாளர். அண்ணன் கே.என்.நேரு அவர்கள் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர்.

கழகத் தோழர்கள் குடும்பம், குடும்பமாக கலந்து கொண்டிருந்தனர். மணல் தரையில் பெட்ஷீட் விரித்து போட்டு அமர்ந்து மாநாடு பார்த்த நினைவுகள் மறக்காது. நொறுக்குகள் கொரிக்கும் போது, பக்கத்தில் உள்ளோருக்கும் கொடுக்கும் அன்னியோன்யம். மாநாட்டிலேயே புது நட்புகள் மாநில அளவில் துளிர்க்கும்.

இரண்டு நாள் மாநாடும், சிறந்த சொற்பொழிவாளர்களால் கருத்து மழை தான். ஒவ்வொரு சொற்பொழிவாளரும் கொடுக்கப்பட்ட தலைப்பில் பேசுவது, ஒரு புத்தகத்தை படிப்பதற்கு இணையானது. கழகத் தோழர்களால், பேச்சாளர்கள் பேச்சுக்கு உடனடியாக மதிப்பெண் போடப்படும். சிறப்புகள், தவறுகள் விவாதிக்கப்படும். அதுவே ஒரு தனி அனுபவம் தான்.

எனது தந்தை சிவசுப்ரமணியன் அவர்கள் அன்று திருச்சி மாவட்ட துணை செயலாளர் மற்றும் ஆண்டிமடம் சட்டமன்ற உறுப்பினர். மறைந்த அண்ணன் க.சொ.கணேசன் அவர்கள் ஜெயங்கொண்டம் ச.ம.உறுப்பினர். அண்ணன் அரியலூர் ஆறுமுகம் அவர்கள் அரியலூர் ச.ம.உ. இவர்கள் பதினைந்து நாட்கள் திருச்சியில் தங்கி மாநாட்டு பணியாற்றினர்.

அய்யா புரவலர் அன்பிலார், மந்திரக் கோல் மைனர் நாஞ்சிலார், முரசொலி மாறன் ஆகியோர் உயிரோடிருந்து, மேடையை அலங்கரித்தனர். தலைவர் கலைஞர் அவர்கள் மிகச் சிறப்பான நிறைவுரை ஆற்றினார்.

( மாநாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நான், மறைந்த மாவட்ட பிரதிநிதி அண்ணன் பூவாணிப்பட்டு கலியபெருமாள், என் தம்பி சிவக்குமார் )