பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 20 ஜூலை, 2014

சட்டசபை உள்ளே, வெளியே...

“எங்கள் உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். அவர் தன் தொகுதிக்காக சட்டமன்றத்தில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். சஸ்பெண்ட் நடவடிக்கையை உடனடியாக திரும்ப்ப் பெற்றுக் கொள்ள வேண்டும்”

அண்ணன் துரைமுருகன் அவர்கள் சட்டமன்றத்தில் திங்கட்கிழமை, 14-ந் தேதி கோரிக்கை வைத்தார்கள். ஆனால் சபாநாயகர் செவிசாய்க்கவில்லை. இப்படி ஒரு கோரிக்கை வைத்ததே தெரியாத மாதிரி இருந்து விட்டாராம்.

மீண்டும் செவ்வாய்கிழமை, 15-ந் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார். ஆனாலும் சபாநாயகர் மனம் இரங்கவில்லை அல்லது அவருக்கு சமிங்ஞை வரவில்லை.

இதே கடந்த தலைவர் கலைஞர் ஆட்சிக்காலத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் நடவடிக்கையை நீடிக்க விடமாட்டார். கம்யூனிஸ்ட்கள் அது குறித்து கோரிக்கை எழுப்புவார்கள். உடனே நடவடிக்கை நீக்கப்படும்.

ஒரு முறை அதிமுக வெளிநடப்பு செய்து அறைக்கு போய் விட்டார்கள். தலைவர் அன்றைய துணை முதல்வரான தளபதி அவர்களை உடனே அவர்களது அலுவலக அறைக்கே அனுப்பி அழைத்து வர செய்தார்கள். தளபதி அவர்களும் சென்று பேசி வந்தார்கள்.

அதிமுக-விடமிருந்தோ, ஜெ-விடமிருந்தோ இது போன்ற நடவடிக்கையை எதிர்பார்க்க முடியாது, எதிர்பார்க்கவுமில்லை. இதைவிட மோசமாக தான் எதிர்பார்க்க முடியும்.

நாட்டையே உலுக்கியிருக்கிற மவுலிவாக்கம் 61-பேரை காவு கொண்ட கொடூர சம்பவத்தை விவாதிக்க வேண்டும் என்று கோரியதால், ஓடுகாலிகள் என்ற தரம் கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார் அமைச்சர் வைத்திலிங்கம்.

மறுநாள் அந்த வார்த்தையை நீக்க வேண்டுமென திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பியதை அனுமதிக்காத சபாநாயகர் திமுக உறுப்பினர்களை அவையை விட்டு வெளியேற்றினார்.

இன்று கல்வி மானியக் கோரிக்கையில் பேசிய மயிலாப்பூர் சட்டமன்ற அதிமுக உறுப்பினர், தேவையில்லாமல் எதிர்கட்சிகளை விமர்சித்து தரக்குறைவாக பேசுகிறார்.

அதை கண்டிக்காத சபாநாயகர், இன்றைக்கும் அமைச்சர் வைத்திலிங்கம் “தகுதி இருக்கிறதா?” என்று பேச அனுமதிக்கிறார். நீக்கக் கோரிய திமுக உறுப்பினர்களை சர்வாதிகாரமாக வெளியேற்றி இருக்கிறார். இது இரண்டாம் முறை. மூன்றாவது முறையும் வெளியேற்றி, கூட்டத் தொடர் முழுவதற்கும் நீக்கலாம் என்பது தான் அதிமுக திட்டம்.

காரணம், காவல் மானியக் கோரிக்கையின் போது, ஜெயலலிதா அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை, நிர்வாக சீர்கேட்டை திமுக கடுமையாக விமர்சிக்கும் என்பதால் தான்.

சட்டமன்றத்தில் எங்கள் குரலை ஒலிக்கவிடாமல் தடுக்கலாம். ஆனால் மக்கள் மன்றத்தில் உங்களால் தடுக்க முடியாது. சபையில் எதிர்கட்சியே இல்லாமல் மகிழ்ச்சியாக இருங்கள்.

# இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக