பிரபலமான இடுகைகள்

திங்கள், 14 ஜூலை, 2014

இது ஒரு பொன்மாலைப் பொழுது...

சொல்லும் வார்த்தையை சுவைபட சொல்வதில் தலைவர் கலைஞருக்கு நிகர் அவர் தான். ஆனால் அவரே ரசிக்கும் அளவிற்கு வார்த்தையை கையாள ஒருவர் உண்டு. அவரால் கவிப்பேரரசு என்றழைக்கப்படும் “வைரமுத்து”.

                                           

1980. தமிழ் திரை இசையை இசைஞானி இளையராஜா புரட்டிப் போட்டிருந்த நேரம். பாரதிராஜாவும் இளையராஜாவும் ரசிகர்களின் காதுகளை மண்ணின் இசை மூலம் இழைத்துக் கொண்டிருந்த நேரம்.

தமிழ் மேடைகளிலும், கவியரங்குகளிலும் முத்திரைப் பதித்துக் கொண்டிருந்தார் அந்த வைகை மண்ணின் மைந்தன். பாரதிராஜாவை சந்திக்கிறார். தன் கவிதையைக் கொடுக்கிறார். அது, “இது ஒரு பொன்மாலைப் பொழுது”

அதற்கு பிறகு அவருக்கு மட்டுமல்ல, தமிழ் திரைப்படப் பாடலுக்கே “பொன் வாழ்வுப் பொழுதானது”.

எத்தனையோ முறை கேட்டப் பாடல் தான். ஆனால் இப்போது கேட்டாலும் இனிக்கும் தமிழ்.

“பொன்மாலை பொழுது...
இது ஒரு பொன்மாலை பொழுது...
வானமகள் நாணுகிறாள்...
வேறு உடை பூணுகிறாள்...”

வானமகள் மட்டுமல்ல, தமிழ்தாயே வேறு உடை பூண்டாள்.

‘’ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்...
ராத்திரி வாசலில் கோலமிடும்...
வானம் இரவுக்கு பாலமிடும்...
பாடும் பறவைகள் தாளமிடும்...”

இந்த வரிகளை படித்துவிட்டு, இன்றைய இரவை இந்தப் பாடலுடன் கழியுங்கள். இருட்டில் கண் மூடுங்கள், ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும். லேசாக காது திறங்கள், பாடும் பறவைகள் தாளமிடும்.

வெறும் மண்ணுக்கு அரசன் என்றால் பணிப்பெண்கள் சாமரம் வீசினால் போதும். இவரோ கவிச்சக்கரவர்த்தி அதனால், “பூமரங்கள், சாமரங்கள்... வீசாதோ...”

“வானம் எனக்கொரு போதி மரம்...
நாளும் எனக்கது சேதி தரும்...
ஒரு நாள் உலகம் நீதி பெறும்...
திருநாள் நிகழும் தேதி வரும்...”

எவ்வளவு எளிமையான வார்த்தைகள். ஆனால் வலிமையான செய்தி. புத்தனுக்கு ஒரு சிறு ஆலமரம் போதுமானதாக இருந்தது. கவிஞருக்கோ பரந்த வானம் தான் போதிமரம்.

“கேள்விகளால், வேள்விகளை... நான் செய்தேன்...” கவிஞரின் கேள்விகளும், வேள்விகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, தொடரவேண்டும், தொடரும்.

கவிஞருக்கு பிறந்தநாளில் வாழ்த்துக்களும், வணக்கமும்.

# உன் வார்த்தைகள் எமக்கு உணர்வு தரும், உச்சரிக்கும் உதடுகள் வாசம் பெறும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக