பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 18 ஜூலை, 2014

அஞ்சு ரூவா ஒரு பிரச்சினையா ?

மூணு மணிக்கு அலாரம் அடிச்சுது, ஆனா தூக்கம் கலையல. ஆனா என்ன செய்யறது, 4.30க்கு டிரெயின் வந்துடுமாம். ராத்திரியே மகன் உத்தரவு போட்டிருந்தார்.

“அப்பா, சரியா வந்துடுங்க. வழக்கம் போல லேட் பண்ணிடாதீங்க. அப்புறம் நான் மட்டும் ஸ்டேஷன்ல தனியா நிக்கனும்.” பள்ளி சுற்றுலா முடிந்து வர்றார். 

                    

காரை கிளப்பினேன். அதிகாலையும் நல்லாத் தான் இருக்கு. டிராபிக்கே இல்லை. நேரமிருந்ததால், இளையராஜாவை இழைய விட்டு மெல்ல ஊர்ந்தேன். வழியில் நின்ற டிராபிக் போலீஸ் தூக்கக் கலக்கத்தில் கை நீட்டினார். லைசென்ஸ் காட்டி நகர்ந்தேன்.

பீச் ரோட். சாலையோரம் பிளாட்பார்மில், மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள், உலகக் கவலைகள் துறந்து. ஆங்காங்கே பிளாட்பார்மில் ஆட்டோக்களும்.

போர் வீரர் நினைவுச் சின்னம். துறைமுகம் செல்லும் ராட்சத கண்டெய்னர்கள் சாலையை ஆக்ரமித்திருந்தன. ஊடே நுழைய முயன்றேன். முடியவில்லை. நேரம் ஆக ஆரம்பித்தது. லேசாக டென்ஷன்.

முன்னேறும் வாய்ப்பு இருப்பதாக தோன்றவில்லை. வேறு வழி இல்லை என்று ரிவர்ஸ் எடுத்தேன். யு-டர்ன். நேப்பியர் பாலத்தில் திரும்பி அண்ணா சாலையை பிடித்தேன்.

அதிகாலை பஸ்கள் அணிவகுக்க ஆரம்பித்திருந்தன. வால் பிடித்து ஒரு வழியாக சென்ட்ரலை அடைந்தேன். பார்க்கிங்கில் காரை விட்டேன். கட்டணம் கொடுத்தேன். பாக்கி ஐந்து ரூபாய் சில்லறை இல்லாமல் தடுமாறினார்.

நேரம் பார்த்தேன். “சரி பரவாயில்லை, டோக்கன் கொடுங்க”. நகர்ந்தேன். காரை நிறுத்திவிட்டு சென்ட்ரல் உள், பக்கவாட்டு வழியில் நுழைந்தேன். தூக்கம் கலைப்போம் என காபி வாங்க போனேன். அதே ஐந்து ரூபாய் பிரச்சினை. இங்கும் சில்லறை இல்லை.
“விடுங்க” என்று, காபியை வாங்கிக் கொண்டு ரயில் வருகை அறிவிப்புப் பலகை நோக்கி நகர்ந்தேன். காபி குடித்துக் கொண்டே சுற்றி நோட்டம் விட்டேன். வெளியேறும் வழியில் ரயில்வே காவல் துறையினர் மிடுக்காக நின்றுக் கொண்டிருந்தனர்.

இந்த அதிகாலையிலும் ப்ரெஷாக இருந்தனர். பயணிகளை உன்னிப்பாக பார்த்தவாறு இருந்தனர். ரயில் வரும் அறிவிப்பு ஒலித்தது. பாதி காபியில் குப்பைத் தொட்டியில் போட்டேன்.

அப்போது தான் ஞாபகம் வந்தது. பிளாட்பார்ம் டிக்கெட் வாங்கவில்லை. மாட்டினா அசிங்கமாயிற்றே. முன்பக்கம் விரைந்தேன். டிக்கெட் கவுண்டர். பணம் கொடுத்தேன். டிக்கெட் கொடுத்தார். அதே ஐந்து ரூபாய் பிரச்சினை.

இனியும் முடியாது. எத்தனை ஐந்து ரூபாய்? என்ன செய்வது? ரயில், ஸ்டேஷனுள் நுழையும் சத்தம். யோசித்தேன், “இன்னொரு டிக்கெட் கொடுங்க”. ஐந்து ரூபாய் பிராப்ளம் சால்வ்ட். ரெண்டு டிக்கெட்டையும் வாங்கிக் கொண்டு ரயிலை நோக்கி ஓடினேன். யாருகிட்ட ?

# ஆக்ச்சுவலி, இந்தியப் பொருளாதாரம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக