பிரபலமான இடுகைகள்

புதன், 30 ஜூலை, 2014

தாங்கள் ராஜேந்திரனின் போர்படை என்ற உணர்வோடு ...

அரசு நடத்தியிருக்க வேண்டிய விழா. ஊர் மக்கள், ஆர்வலர்கள் கூடி நடத்தினார்கள். ஆனாலும் அரசு நடத்தியிருந்தாலும், இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது என்பதே உண்மை.

தஞ்சையிலிருந்து தீபச்சுடர் ஏந்திய ஓட்டம், மாளிகை மேட்டிலிருந்து தமிழறிஞர்கள் ஊர்வலம், வரலாற்று ஆய்வாளர்கள் கருத்தரங்கம், ஆயிரம் தீபமேற்றும் நிகழ்ச்சி, நாட்டியாஞ்சலி என இரண்டு நாட்கள் களைகட்டிய விழாவிற்கு "மாமன்னன் இராஜேந்திரனின் எழுச்சிமிகு வரலாற்றை" குறித்து அறிஞர்கள் ஆற்றிய உரை மணிமகுடம்.

           

சென்னை பல்கலைகழகத்தின் முன்னை துணைவேந்தர் பொற்கோ மண்ணின் மைந்தராக இராஜேந்திரனின் பெருமைகளை விவரிக்கையில் உணர்ச்சி வசப்பட்டார். 


             

அடுத்து பேசிய எழுத்தாளர் பாலகுமாரன், “ பரவை என்கிற தாசிக்குல பெண்ணின் வேண்டுகோளை ஏற்று செங்கல்லால் கட்டப்பட்ட திருவாரூர் கோவிலை கற்றளியாக்கினான் இராஜேந்திரன்” என்று துவங்கி

“கம்மாளர்கள் பிராமணர்கள் போல் பூணூல் அணிந்து கொள்ள அனுமதி கேட்டப் போது, 'நீங்கள் வடித்துக் கொடுக்கும் வாளால் தான் நான் வெற்றி பெறுகிறேன். நீங்கள் காலில் செருப்பு அணியவும், திருநீர் அணியவும், சிவிகையில் செல்லவும், பூணூல் அணியவும் அனுமதி கொடுக்கிறேன்' என கொடுத்தான்.”எனற வரலாற்றை சொல்லி


           

“தேன்நிலவுக்கு ஊட்டிக்கு போகாதீங்கைய்யா. கங்கை கொண்ட சோழபுரம் வாங்க! என்ன அற்புதமான நகரமையா, வாங்கய்யா இங்க, வரலாறு தெரிஞ்சுக்கங்க, ஓவியங்கள் இருக்கு பார்த்து தெரிஞ்சுக்கங்க. தமிழ் படிக்கச்சொல்லி கொடுத்தால் மட்டும் போதாது, தமிழ் எழுத்ச்சொல்லி கொடுத்தால் மட்டும் போதாது, தமிழரின் சரித்திரம் தெரியாது நீங்கள் குழ்ந்தைகளை வள்ர்த்தீர்கள் என்றால் நீங்க்ள் தமிழர் அல்ல! நீங்கள் ராஜராஜன், ராஜேந்திரனின் வரலாற்றையும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தரவேண்டுமென்ற விண்ணப்பத்தையும் இந்த மகாசபை முன் வைக்கின்றேன்” என்று வேண்டுகோள் வைத்து முடித்தார்.

          

அடுத்து தமிழக அரசின் வேளாண்துறை செயலர் இராஜேந்திரன் ஐ.ஏ.எஸ் பேசினார். “இங்கு கூடியிருக்கிற மக்கள் தாங்கள் ராஜேந்திரனின் போர்படை என்ற உணர்வோடு தாங்களாகவே கூடியிருக்கிறார்கள்” என்று செண்டிமென்ட் டச் கொடுத்தார்.

“தஞ்சை 150 ஆண்டுகள் தான் தலைநகராக இருந்தது. ஆனால் கங்கைகொண்ட சோழபுரம் 240 ஆண்டுகள் தலைநகராக இருந்தது. ஏரி, கோவில்கள் அமைத்தல், மதங்களை சமமாக பேணியமை, நில அளவி, பஞ்சாயத்து ஆட்சி, நுண்கலை வளர்ப்பு என பணியாற்றியதால் தான் சோழர்கள் புகழோடு திகழ்ந்தார்கள்”

“ராஜேந்திரனின் இயற்பெயர் மதுராந்தகன். அதன் அர்த்தம், மதுரைக்கு ஆந்தகன் அதாவது எமன். பாண்டியர்களை வீழ்த்தியவன். ஆனால் அதே மதுரையிலிருந்து ராஜேந்திரன் என்ற பெயரோடே வந்து அவனை பாராட்டுகிறேன் என்றால் அது தான் ராஜேந்திரன்.” என்று புகழ்ந்தார்.

அடுத்து பேசிய அரசு செயலர் தனவேல் ஐ.ஏ.எஸ் “அரசர்களின் தலைநகர்கள் நகரங்களாகி விட்டன. கங்கைகொண்ட சோழபுரம் மட்டும் தான் கிராமமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டேன். ஆனால் கிராமமாக இருப்பதால் தான் மக்கள் பண்பாட்டோடு, உணர்வோடு இருக்கிறீர்கள். அதனால் தான் இந்த விழாவை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்” என்று பெருமிதப்பட்டார்.

“ஐரோப்பாவில் மாவட்ட தலைநகரங்களில் ஒரு மியூசியம் இருக்கும். இங்கு ஒவ்வொரு கோவிலுமே ஒரு மியூசியம் தான். பிரிட்டானிக்காவில் ‘தமிழர்கள் கோவில் கட்டுவதில் வல்லவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.”

“பெருவுடையார் கோவிலின் மூலஸ்தானத்திற்குள் நுழையுமுன் இடது பக்கமிருக்கும் துவாரபாலகரை கவனியுங்கள். அவன் ஒரு காலை கதாயுதம் மீது வைத்திருப்பான். கதை மீது ஒரு மலைப்பாம்பு படர்ந்திருக்கும். மலைப்பாம்பு வாயில் பாதி யானை சிக்கியிருக்கும். யானையை விட மலைப்பாம்பு பெரிது, அதை விட கதை பெரிது, அதை கையில் பிடித்திருக்கும் துவாரபாலகன் எத்தகையவனாக இருப்பான். ஆனால் அவன் ஒரு கையால் உள்ளே காட்டுவான்,”என்னை விடப் பெரியவர் உள்ளே இருக்கிறார்” என பெருவுடையாரை நோக்கி. இதன் அர்த்தத்தை பார்க்க வேண்டாம். சிற்பி எவ்வளவு எளிதாக் ஒரு சிற்பத்தில் இவ்வளவு செய்திகளை நுணுக்கமாக கொடுக்கிறார் என கவனியுங்கள். இது தான் சர்ரியலிஸம். இது சோழற்கால சிற்ப சிறப்பு” என்று விளக்கமளித்தார்.

கவிஞர் அறிவுமதி “வேட்டிக் கட்டியவர்களை வெளியேற்றுகிற இந்த நாட்டிலிருந்து தான் வேட்டிக் கட்டி போய் உலக நாடுகளை வென்று உலகப் பெருமை பெற்றான்.” என்று துவங்கியவர் “ஆனால் ராஜராஜனும், ராஜேந்திரனும் என்னைப் பொறுத்தவரை குற்றவாளிகள்” என்று நிறுத்தினார்.

“பூணூல் போட அனுமதி கொடுத்த ராஜேந்திரனுக்கு என்ன தைரியம் என்று கேட்டீர்களே பாலகுமாரன், நீங்கள் செருப்பையே அரியணையில் ஏற்றி ஆளவைத்தவர்கள். நாங்கள் செருப்பு போடவே 2000 ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று கர்ஜித்தார்.

“இன்று இந்தி,சமஸ்கிருதம் உள்ளே வர வேலை நடக்கிறது. நீங்களும் பிள்ளைகளுக்கு அப்படி தான் பெயர் வைக்கிறீர்கள். சமீபத்தில் நோயுற்ற தன் பிள்ளையை கருணை கொலை செய்ய கோரிக்கை வைத்தாளே ஒரு தாய், அவளைப் போல என் தாய் தமிழை கருணை கொலை செய்து விடுங்கள்” என்று சபையை அதிரடித்தார்.

அடுத்து கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் “ஆடித் திருவாதிரை தான் மாமன்னன் இராஜேந்திரனின் உண்மையானப் பிறந்தநாள். இதை திருவாருர் கோவில் கல்வெட்டிலே ராஜேந்திரனே பொறித்து வைத்திருக்கிறான்” என சர்ச்சைக்கு பதிலளித்து, “இந்த மன்னனுக்கு விழா எடுத்தீர்களே உங்கள் திருவடியை வரலாற்று ஆய்வாளர் என்ற முறையில் வணங்குகிறேன்” என்று உருகினார்.


             

அடுத்து பேசிய அரியலூர் இல.தியாகராசன் உரை அனைவரையும் கட்டிப் போட்டது. அது தனிப் பதிவாகப் போட வேண்டிய அளவு பெரிது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக