எங்கள் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தின் எந்த கிராமத்திற்கு போனாலும் சில பெயர்கள் அதிகமாக இருக்கும். சில கிராமங்களில் குலதெய்வங்களின் பெயர்களும், சில ஊர்களில் திணிக்கப்பட்ட சாமிகளின் பெயரும், சில கிராமங்களில் நல்ல தமிழ் இலக்கியப் பெயர்களும் இருக்கும்.
ஆனால் எல்லா கிராமங்களிலும் ஒரு பெயர் நீக்கமற நிறைந்திருக்கும். முதலில் இதை நான் விளையாட்டாகத் தான் கவனித்தேன். ஆனால் கூர்ந்து கவனித்தப் போது தான் ஒவ்வொரு ஊருக்கும் பத்து பேருக்காவது இந்தப் பெயர் இருந்ததை கவனித்தேன்.
சில பெயர்கள் சில தலைமுறைகளோடு நின்று விடும். சில பெயர்கள் ஒவ்வொரு சமுதாயத்துக்குள், சாதிக்குள் முடங்கிவிடும். சில பெயர்கள் ஏழை, பணக்காரன் வித்தியாசத்தைக் காட்டிவிடும்.
ஆனால் இந்தப் பெயர் எல்லா வித்தியாசங்களையும் உடைத்து, எல்லைகள் கடந்து பரவி இருக்கிறது. பிறகு மற்ற மாவட்டங்களையும் சற்றே கவனித்துப் பார்த்ததில் அங்கும் இந்தப் பெயர் ஊடுவியிருப்பதை உணர முடிந்தது. அந்தப் பெயர்….
“ராஜேந்திரன்”
இந்தப் பெயர் எங்கள் மண்ணில் பரவியிருப்பதில் அர்த்தம் இருக்கிறது. எங்கள் மண்ணின் பெருமையான கங்கை கொண்ட சோழபுரத்தை அமைத்தவன். அதனையே தலைநகராகக் கொண்டு ஆண்டவன். அங்கே புகழ் பெற்ற “கற்றளி”யை அமைத்தவன்.
இங்கிருந்து போர் நடத்தி, கங்கைகொண்டவன், கடாரம்வென்றவன், ஈழம் ஆணடவன் என்ற பல கீர்த்திகளுக்கு சொந்தக்காரன். இதன் காரணமாக இந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தவன் என்ற வகையில் அவன் பெயர் வழங்கப்படலாம்.
ஆனால் வரலாற்றலாளர்களால் அதிகம் கொண்டாடப்படும் ராஜராஜசோழன் பெயரை விட ராஜேந்திரன் பெயரே அதிகம் புழங்குகிறது, அவன் ஆண்ட தஞ்சைப் பகுதியிலும், தமிழகத்திலும்.
தமிழகம் முழுதும் பல்வேறு மன்னர்களால் ஆளப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் பெயர் இந்த அளவிற்கு பெயரிடப்படுவதாகத் தெரியவில்லை. தென்மாவட்டங்களை எடுத்துக் கொண்டால் “பாண்டியன்” நிறைந்திருக்கும். ஆனால் அது ஒரு பரம்பரையின் பெயர்.
கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் உயரம், தஞ்சை பெரியக் கோவிலின் உயரத்தை தாண்டினால் தந்தையை விஞ்சியதாக ஆகிவிடும் என்று, கட்டுமானத்தில் மாற்றம் செய்து உயரத்தை குறைத்து அமைத்தான்.
கூடுதல் உயரத்தை கணக்கிட்டு அடித்தளம் அமைக்கப்பட்டு, அதனடிப்படையில் கர்ப்பகிரகமும் அமைக்கப்பட்டு, மேல் தளம் வந்தவுடன் திடீரென கூரை குறுக்கப்பட்டிருக்கும். மேல் தளம் ஏறிப் பார்த்தால் தெரியும்.
ஆனால் பெயரிடப்படுவதில் தந்தையை விஞ்சும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டான் “இராஜேந்திர சோழன்”
வருகிற 24.07.2014 இராஜேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா.
ராஜேந்திரனுக்கு பல்வேறு சிறப்புப் பெயர்கள் உண்டு. கங்கைகொண்ட சோழன், கடாரம் கொண்ட சோழன், முடிகொண்ட சோழன், மண்ணை கொண்ட சோழன். இனி இதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
# மக்கள் மனம் கொண்ட சோழன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக