பிரபலமான இடுகைகள்

திங்கள், 28 ஜூலை, 2014

மாமன்னன் இராசேந்திரனின் திட்டமிடலும், உருவாக்கமும்

ராசேந்திர சோழன் பெருவுடையார் கோவிலையையும், சோழகங்கம் ஏரியையும் மாத்திரம் திட்டமிட்டு அமைக்கவில்லை. தஞ்சையில் இருந்து தலைநகரை மாற்றுவது என்று முடிவெடுத்த பிறகு, திட்டமிட்டு அமைத்த நகரம் தான் கங்கை கொண்ட சோழபுரமும் அதனை சுற்றியுள்ள கிராமங்களும். 

              

அரியலூர் மாவட்டத்தில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள், கிட்டத்தட்ட மாமன்னன் இராசேந்திரனின் காலத்தில் உருவாகியவை என்பதே வரலாற்று ஆய்வுகளை கொண்டு இறுதி செய்ய முடியும்.

தனது கோட்டையை அமைத்த பகுதி “உட்கோட்டை”. இன்றும் அதே பெயரோடு இருக்கிறது கிராமம். இதன் அருகில் தான் அரண்மனை அமைந்த மாளிகைமேடு. பிறகு படையெடுத்த பாண்டிய மன்னர்களால் அரண்மனை இடிக்கப்பட்டு விட்ட்து. இது இப்போது தொல்லியல் ஆராய்ச்சி பகுதி.

ராசேந்திரன் வருவதற்கு முன் இது காட்டுப் பகுதி. காட்டை திருத்த ஆரம்பித்த இடம் தான் “காடுவெட்டி”. இதற்கு அருகில் தான் படை நிலை கொண்ட இடம், “படைநிலை”. அருகில் "பாப்பாக்குடி" உள்ளது. இது பார்ப்பனர்குடியாக இருந்திருக்க வேண்டும்.

கோவிலை கட்டுவதற்கு சுண்ணாம்பு அரைத்த இடம் தான் “சுண்ணாம்புக்குழி”. மன்னனின் அரண்மனை, கோட்டை கட்டுவதற்கு செங்கல் தயாரித்த இடம் தான் “கீழ செங்கல்மேடு”, “மேல செங்கல்மேடு”. அடுத்த ஊர் ‘தழுதாழைமேடு”..

இதற்கு அருகில் உள்ள கிராமம் “ஆயுதகளம்”. ஆயுதங்கள் தயாரிக்கப்பட்ட பகுதி. அடுத்து “மெய்காவல் புத்தூர்”. மன்னனின் மெய்காவலர்கள் மற்றும் தலைநகரை காவல்புரிந்த வீரர்கள் தங்கியிருந்த பகுதி. கோவிலுக்கு வருவோர் தங்குவதற்கு “சத்திரம்” கிராமம்.

வீரசோழன் பெயரில் “வீரசோழபுரம்’. அரசி பெயரில் “சோழமாதேவி”. இவைகள் இன்றும் இருக்கிற ஊர்கள். “நாயகனைப்பிரியாள்” இதுவும் ஒரு அரசி பெயரால் இருக்க வேண்டும். கடாரம் வென்ற நினைவாக “கடாரம் கொண்டான்”.

ராஜராஜ சோழன் பெயரில் “அருள்மொழி”, “தேவமங்கலம்”. ராசேந்திரனின் அரசி கட்டிய கோவில் “குருவாலப்பர்கோவில்”. தளபதிகள் பெயரால் “வானதிரையன் குப்பம்”, “வானதிரையன் பட்டிணம்”.

சோழ வீரர்கள் குடிகொண்ட “சோழன்குடிகாடு”, “நந்தியன்குடிகாடு”, “உகந்தநாயங்குடிகாடு”, “படைவெட்டிக் குடிகாடு”. இவை எல்லாம் செந்துறை ஒன்றியத்தில் வருபவை.

இதல்லாமல் பரவலாக பல இடங்களில் “செயங்கொண்ட சோழபுரம்”, “சோழங்குறிச்சி”, “சோழன்பட்டி”, “வால சௌந்திர சோழபுரம்”, "ராஜேந்திரபட்டிணம்" என்று சோழன் பெயர் தாங்கிய ஊர்கள் மாவட்டம் முழுதும் விரவிக் கிடக்கின்றன. எங்கும் சோழமயம்.
# சோழன் சோர்விலன், இன்றும் வாழ்கிறான் மக்கள் மனம் நிறைந்து !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக