பிரபலமான இடுகைகள்

புதன், 11 மார்ச், 2015

இண்டர்வெல்ல நுழைஞ்சேன்...

மணி 07.50. இரவு. நான் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். மொபைல் அலறியது. எடுத்தால், தந்தி டீவியிலிருந்து அழைப்பு.

       Image result for thanthi tv

"சார், நிகழ்ச்சிக்கு வரலாமா?". "என்னைக்கு சார்?". "இன்னைக்கு தான் சார்". "இன்னைக்கா? எத்தன மணிக்கு சார்?" "எட்டு மணிக்கு சார்".

"என்ன எட்டு மணிக்கா?". "ஆமாம் சார்". 07.52. "சார் இரண்டு நிமிஷம், நான் வர முடியுமான்னு பார்த்து சொல்றேன்". வேறு வேலை இல்லை என்பதால் டிரைவரை அனுப்பி விட்டேன்.

ஒரு நிமிடம், 59 நொடி. மொபைல் அழைப்பு. ஒப்புக் கொண்ட யாரோ வரவில்லை என்பது புரிந்தது. சரி, போகலாம் என முடிவெடுத்தேன்.

"சார், நான் இருக்கற இடத்திலிருந்து வர லேட்டாவுமே". " நீங்க எக்மோர் ஸ்டுடியோவுக்கு வந்துடுறீங்களா?" "அதவிட எனக்கு தரமணியே பக்கம். நான் இங்கேயே வந்துடுறேன்".

சபாரி காரை நகர்த்தினேன். மொபைல் அழைப்பு. "சார் கிளம்பிட்டேன்". பயங்கர டிராபிக். முதல் சிக்னல். இடமிருந்து வலம் போகிறது வாகனங்கள். அடுத்து வலமிருந்து இடம் நகர்கின்றன.

மணி 08.10. மறுபடியும் அழைப்பு. "சார், முதல் சிக்னல் தாண்டுறேன். வந்துடறேன்". "சார், புரோக்ராம் ஆரம்பிச்சிடுச்சி". "வந்துடுறேன்"."வந்துடுங்க".

இரண்டாம் சிக்னல் தாண்டும் போது, மணி 08.20. தந்தி டீவி அலுவலக வாயிலுக்கு முன்பாக யூ டர்ன். அந்த இடத்தில் ஒரு ஆட்டோ ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தார். மொபைல் அடித்தது, எடுக்கவில்லை.

பொறுத்து நுழைந்தேன். 08.26. வாகன வேகத்தை பார்த்து, செக்யூரிட்டிகள் வழி விட்டனர். அலுவலக போர்டிகோவில் ஒருவர் காத்திருந்தார். பாவம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டும்.

காரை பார்க்கிங்கில் நுழைத்து விரைந்தேன். முதல் தளம். மூச்சு வாங்க, அரங்கில் நுழைந்தேன். ரங்கராஜ் பாண்டே முறுவலித்தார்.


மணி 08.28. இருக்கையை சேர்ந்தேன். ஆசுவாசமானேன். மற்ற இரு பங்கேற்பாளர்களான துக்ளக் பத்திரிக்கை ரமேஷ், பொதுவுடைமை இயக்கத்தின்   அருணன் ஆகியோர் இருந்தனர்.  திரும்பி பார்த்தனர். 08.30. விளம்பர இடைவேளை முடிந்து, நிகழ்ச்சி மீண்டும் துவங்கியது.

விவாதத்தின் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் ஒரு வழியாக லைன் பிடித்து விவாதித்தேன். எக்மோரில் இருந்து ச.ம.உ அண்ணன் தனியரசு தலையசைத்து ஒப்பேற்றிக் கொண்டிருந்தார்.

நிகழ்ச்சி முடிந்தது. விடை பெற்று காரை எடுத்தேன். மொபைல் அழைப்பு. கார் ஓட்டிக் கொண்டிருந்ததால் எடுக்கவில்லை. மீண்டும் அழைப்பு, அதே எண்ணிலிருந்து.

ஏதோ அவசரமோ என காரை ஒரம் கட்டி மொபைல் அழைப்பை ஏற்றேன். "வணக்கம் அண்ணே" "வணக்கம்".

"ஏண்ணே, டிவி பேட்டிக்கு போம்போதாவது நேரத்துக்கு போவக்கூடாதா. இண்டெர்வெல்ல நுழையறீயேண்ணே"

# என்ன கொடும சார் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக