பிரபலமான இடுகைகள்

வியாழன், 12 மார்ச், 2015

பெண்களுக்கான 'ஆண்' குரல்

அது வழக்கமான அரசியல் நிகழ்ச்சியாக இருக்கும் என்று தான் பலரும் நினைத்திருப்பார்கள்.ஆனால் பங்கேற்பாளர்கள் பட்டியலே வித்தியாசமாக இருந்தது.

உலக மகளிர் தின பெரு விழா, "பெண் குரல்", கழக மகளிர் அணி சார்பாக 08.03.2015 அன்று கோவையில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி அவர்கள், மகளிர் அணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகான முதல் நிகழ்ச்சி.

         

மேடையே வித்தியாசமாக அமைந்திருந்தது. மேடையில் யாரும் அமரவில்லை. பேசுபவர் மாத்திரமே சென்று பேசி, கீழே வந்து அமர்ந்தனர்.

டாக்டர் காஞ்சனா கமலநாதன் வரவேற்புரை.

கவிஞர் கனிமொழி அறிமுக உரை. சுருக்கமான, எளிமையான உரை. விழாவின் நோக்கத்தை முன்னிலைப் படுத்தினார். இந்த நிகழ்ச்சி வெற்றி பெற தளபதி காட்டிய ஆர்வத்தை நன்றி கூர்ந்தார்.

"மகளிர் தினத்தை, மனவிக்கு காஃபி போட்டுக் கொடுத்து கொண்டாடுங்கள்" என எளிமையான அசைன்மெண்ட் கொடுத்தார், வலிமையானதும்.

அடுத்து அம்னஸ்ட்டி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தலைமை ஊடக அதிகாரி, துர்கா நந்தினி . இன்றைய பெண்களின் பிரச்சினைகளில் ஆரம்பித்து டெல்லி நிர்பயா வரை அலசினார். சாதாரண உரையாடல் போல் மனதை தைக்கும் பேச்சு.

அடுத்து மனித உரிமை ஆர்வலர் மீனாட்சி. சக்கர நாற்காலியில் வந்த மாற்றுத்திறனாளி. பெண்களின் சிரமங்களையும், மாற்றுத்திறனாளிகள் சிரமங்களையும் எடுத்துரைத்தார்.

அடுத்து ஸ்டெப்ஸ் பெண்கள் அமைப்பின் தலைவர் ஷரிஃபா. "பசுமாடு வேண்டும், முட்டை இடும் பெட்டை கோழி வேண்டும்னு சொல்றவங்க, பெண் குழந்தை மட்டும் வேண்டாம்னு சொல்றீங்களே, நியாயமா?" என் ஆரம்பிக்க, கைத்தட்டல்.

"சமயபுரம் மாரியாத்தாவா பார்க்க வேண்டாம், மேரி மாதாவா பார்க்க வேண்டாம். பெண்ணை பெண்ணா பாருங்க போதும்" என்றவர், இஸ்லாமிய பெண்களின் நிலையை விளக்கினார்.

அடுத்து பெரியாரியலாளர் ஓவியா வந்தார். பெண் விடுதலையாளர் பெரியார் குறித்து யாரும் பேசவில்லையே என்ற என் கவலையை தீர்த்தார்.

தேவதாசி ஒழிப்பு மசோதாவை சட்டமன்றத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்தபோது, அதனை சத்தியமூர்த்தி எதிர்த்ததையும், உங்கள் சாதி பெண்களை கொண்டு அந்த முறையை தொடருங்கள் என முத்துலட்சுமி வாதிட, சத்தியமூர்த்தி வாய்மூடி போனார் என்ற வரலாற்றை எடுத்துரைத்தார்.

ஆனால் அதே முத்துலட்சுமி , மக்கள் மன்றத்தில் இதற்காக போராடிய திராவிட இயக்கம், பெரியார் , மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் ஆகியோர் பெயர்களை மறைத்த வரலாற்றையும் பதிவு செய்தார்.

அடுத்து முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன். பெண் விடுதலைக்கு திராவிட இயக்கம், பெரியார், அண்ணா ஆகியோர் போராடிய வரலாற்றை விளக்கினார்.

பெரியாரின் கனவுகளை கலைஞர் நிறைவேற்றியதையும் சொன்னார். பெண்களுக்கு சொத்தில் சமபங்கு சட்டமாக்கியது அதில் மிக முக்கியமானது. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தளபதி அவர்களின் பணியை பதிவு செய்தார்.

டாக்டர் பூங்கோதை அருணா நன்றி உரையாற்றினார்.

இறுதியாக தளபதி அவர்கள் சிறப்புரை.

"இவ்வளவு பெண்கள் கூடியிருக்கிற இடத்தில் அமைதியாக உரையை கேட்கிறீர்களே, அதுவே இந்த மாநாடு வெற்றி என்பதை உறுதி செய்கிறது. இதை நான் ஐஸ் வைப்பதற்காக சொல்லவில்லை. யதார்த்தத்தை சொல்கிறேன்" என மென் நகைச்சுவையோடு துவங்க, அவை அவர் கட்டுப்பாட்டில் வந்தது.

பெண் விடுதலை , திராவிட இயக்கம் என நறுக்குத் தெறித்தார் போல் தன் உரையை கொண்டு சென்றவர், ஒரு கட்டத்தில் ஆண்கள் அனைவரையும் எழுந்து நிற்க சொன்னார்.

எழுந்து நின்றோம். உறுதிமொழி எடுக்க நெஞ்சில் கைவைக்க சொன்னார். வைததோம் அவரும் வைத்தார். உறுதிமொழியை சொன்னார், உடன் சொன்னோம்.

      

" எனையீன்ற தாய் மீதும் , என்னுயிர் தமிழ் மீதும் ஆணையிட்டு சொல்கிறேன்.

என் மகனையும், மகளையும் எவ்வித பாகுபாடுமின்றிச் சரிசமமாய் நடத்துவேன்.

என் மகள் கல்வி செல்வத்தை குறைவின்றி பெற்று வாழ்வின் மேன்மை பெற வழிவகுப்பேன்.

என் மனைவியை ஒரு போதும் அடித்துத் துன்புறுத்தாமல், வாழ்வின் உயிராய் மதித்து அன்பு செலுத்துவேன்.

பெண்களுக்கு எதிரான இழிசெயல்களில் என்றுமே ஈடுபட மாட்டேன்.

என் இல்லத்தில் நடைபெறும் திருமணங்களில், மாதர் தம்மை இழிவு செய்யும் வரதட்சணைக் கொடுமையை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன்.

இவற்றை என் வாழ்வின் இறுதி வரை கடைபிடிப்பேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன்."

உறுதிமொழி முடித்து ஆண்கள் அமர்ந்தோம். பெண்கள் எழுந்து விட்டனர், ஒட்டுமொத்தமாக. கைத்தட்டல் எழுந்தது விண்ணதிர. தளபதி எழுந்து நின்றார், விஸ்வரூபமாய், கூடியிருந்த பெண்கள் மனதில்.

ஒட்டு மொத்த விழாவையும், இரு நிமிடங்களில் வென்று விட்டார்.
உலக பெண்கள் தின பெருவிழா, "பெண் குரல்" பெரும் வெற்றி.

# பெண் குரலும், பெண்களுக்கான 'ஆண்' குரலும் ஓங்கி ஒலித்தன !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக