பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 13 மார்ச், 2015

மெத்தை வாங்குனேன், தூக்கத்த வாங்கல...

“மலரே, குறிஞ்சி மலரே,
தலைவன் சூட நீ மலர்ந்தாய்” நடிகர் திலகம் முடிக்க,
மக்கள் திலகம் தொடர்ந்தார்,
”தொட்டால் பூ மலரும்,
தொடாமல் நான் மலர்வேன்”.


தூரத்து புனல் ஸ்பீக்கரில் டி.எம்.எஸ் தம் கட்டி பாடிக் கொண்டிருந்தார், மாறி மாறி, திலகங்கள் இருவருக்காகவும். காற்றில் மிதந்து வரும் கீதத்தை ரசிப்பது என்றுமே சுகம்.

சிறு வயது டேஸ்ட் அது. இன்றைய அதிநவீன கருவிகளில் கேட்பதை விட, தூரத்து புனல் ஸ்பீக்கரே இன்றும் உசத்தியாய் தோன்றுகிறது. அதுவும் மதிய நேர புழுக்கத்தில், மொட்டை மாடி தனிமைக்கு நல்ல துணை.

அது திருவரங்கம் இடைத்தேர்தல் நேரம். முகாமிட்டு இருந்த வடக்குசேர்பட்டி கிராமம். கழகத் தோழர் அண்ணன் மாணிக்கம் வீடு. மாலை வாக்கு சேகரிக்கும் பணிக்காக கிளம்பினேன்.

இரவு தங்கலுக்கு அறை திரும்பினால், ராகதேவனின் இசை ராஜாங்கம். மோகனின் மைக் புகழ் பாடல்கள், ராமராஜனின் கிராமியப் பாடல்கள் என்று மெய் மறக்க செய்தது தூரத்து புனல் ஸ்பீக்கர்,

அங்கு பயங்கரப் பனி, காலை ஒன்பது மணி வரை பெய்யும் அளவிற்கு. அதனால் கதவை காற்று நுழையா அளவு இறுக மூடி, சன்னல்களை ஆணி அறையாத குறையாக சாத்தி படுத்தேன்.

காற்றுப் புகாத இடத்திலும் அவர் புகுந்தார். “இதயம் ஒரு கோயில், அதில் உதயம் ஒரு பாடல்”. தானே எழுதி, தானே பாடும் பாடல் என்பதாலோ என்னவோ, இசையோடு இசைந்து, இழைந்து பாடிக் கொண்டிருந்தார்.

அவர் தாலாட்டில் தூங்கிப் போனேன். காலை திருப்பள்ளி எழுச்சியும், அதே புனல் ஸ்பீக்கரோடு தான். இப்போது “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா”. இசையோடே குளித்து, தயாராகி வந்தேன்.

கழகத் தோழர்கள் சந்திப்பில் சற்றே மறந்தேன், ஸ்பீக்கரை. உணவருந்தும் இடைவெளி. மீண்டும் காற்றின் கீதத்தின் ஆதிக்கம். இப்போது “பூங்காத்து திரும்புமா, என் பாட்டை விரும்புமா?”

மலேசியா வாசுதேவன், வைரமுத்து வரிகளை, நடிகர் திலகத்திற்காக உருகிக் கொண்டிருந்தார்.

பக்கத்தில் இருந்த உள்ளூர்காரரிடம் கேட்டேன்,”எங்கண்ணே பாடுது. வெளுத்து வாங்குறாங்க”.

“அது அன்னைக்கு ஓட்டு கேட்டு போனோம்ல, அந்தக் கடைசி தெருவுல...”
“ஆமாம்”
“அதுல கடைசி வீடு ஒன்னு பெருசா இருந்துதே, மச்சி வீடு”
“ஆமாம்”
“அந்த வீட்ல”
“என்ன விசேஷம்ணே?”
“அங்க ஒரு பெரியவர் இருந்தாருல்ல...”
“ஆமாம்”
“அவரு தவறிப் போனாரு...”

கட். ஃபிரீஸ் ஆனேன். கட்.
“மெத்தை வாங்குனேன் தூக்கத்த வாங்கல
இந்த வேதன யாருக்கு தான் இல்ல”. அங்கருந்து மலேசியா.

அடப் பாவிங்களே, மொத்தமா தூங்கிப் போனவற வச்சிக்கிட்டா, "மெத்தை வாங்குனேன் தூக்கத்த வாங்கல", இந்த ஸ்பீக்கர் சேவை. சற்று நேரமானது, இயல்பாக. அதற்குள் ஜானகியம்மா முடித்துக் கொண்டிருந்தார்.

“நான் தானே அந்தக் குயில்
தானாக வந்த குயில்
ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி
பறந்ததா உலகம் தான் மறந்ததா”

# இசை பட வாழ்ந்திருப்பாரோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக