பிரபலமான இடுகைகள்

ஞாயிறு, 15 மார்ச், 2015

அருளையும் நோக்கி, அறிவையும் நோக்கி !

காரின் வேகம் குறைந்தது. சாலையோரம் சிறு மக்கள் திரள். நடுவில் ஒரு வாகனம். மின் விளக்குகள் நடுவே ஒரு சிலை, மலர் அலங்காரத்துடன்.

       

கோவையில் இருந்து கிளம்பிய கார் கரூரை கடந்திருந்தது. மகளிர் தின விழா குறித்த நிலைத்தகவல் பதிவிட்டு, பின்னூட்டங்களை படிக்க ஆரம்பித்தேன். அப்போது தான் இது.

மறுபடியும் கார் வேகம் குறைந்தது. இது அடுத்த ஊர். பேட்டவாய்தலையாக இருக்க வேண்டும். இங்கு குட்டி யானையில் அம்மன் விக்ரகம். முன்னால் பூத் தட்டுகள்.

அடுத்து ஒவ்வொரு ஊராக இதே கதை. டிராக்டரில், லாரியில் என பல வித வாகனங்களில் அம்மன் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு. ஜெனரேட்டர் உதவியுடன் ஒளி வெள்ளம். ஒலி பெருக்கியில் பக்திப் பாடல்கள்.

மொபைலை வைத்து விட்டு, இளையராஜாவுக்கு காது கொடுத்தேன். இப்போது திருச்சியில் நுழைந்திருந்தோம். மணி இரவு 12.00 தாண்டியிருந்தது.

சாலை முழுதும் அம்மன் வாகன அணிவகுப்பு. ஒலிப்பெருக்கியில் பக்திப்பாடல்கள், நாதஸ்வரம்-மேளம், பறை ஒலி, ட்ரம்ஸ் அதிர்வு என கலந்து கட்டிய ஒலி வெள்ளம்.

பறை ஒலிக்கு 'உற்சாகமாய்' குத்து டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர் இளைஞர்கள், அம்மன் வாகனம் முன்பு. பெண்கள் வழிபட்டு கொண்டிருந்தனர், பக்தியாய்.

சத்திரம் பேருந்து நிலையம் தாண்டினோம். சாலையோரம் மக்கள் நடந்துக் கொண்டிருந்தனர். கார் வேகம் குறைந்து, ஊர ஆரம்பித்தது.

காவிரி பாலம். அம்மன் வாகன அணிவகுப்பு நகர்ந்து கொண்டிருந்தது. இப்போது தான் யோசனை, சமயபுரம் நோக்கி அம்மன்கள் பயணம் போலும். மறுநாள் பத்திரிக்கை செய்தி “பூச்சொரிதல் விழா” தெளிவுப்படுத்தியது.

டோல்கேட் தாண்டி, நெடுஞ்சாலை ஏறியது வாகனம். நான்கு வழி சாலையில், மீடியனுக்கு இந்தப்புறம் உள்ள இரு வாகனங்கள் பயணிக்கும் பாதை, காலி டிரம் வைத்து இரண்டாக பிரிக்கப்பட்டிருந்தது.

டிரமுக்கு அந்தப்புறம் மக்கள் மற்றும் அம்மன் வாகனம். ஆண்கள் மற்றும் பெண்கள். வயதானோர் மற்றும் இளையோர். சுடிதார் அணிந்த இளையவர்கள், நவ நாகரீகப் பெண்கள், அசல் கிராமப் பெண்கள். சிலர் கையில் பாலித்தீன் பையில் பூ.

வேட்டி கட்டியோர், பேண்ட் சட்டை அணிந்தோர், டிராக்-டிஷர்ட். இப்படி எல்லா விதமாகவும், எல்லா ரகமாகவும் மக்கள். எல்லோரும் சமயபுரம் நோக்கி. வழியில் இருந்த கடைகள் திறந்து வைக்கப்பட்டு வியாபாரம் ஆகிக் கொண்டிருந்தது.

சாலையோர வீடுகள் விளக்கு அணைக்கப்பட்டு உறக்கத்தில் இருந்தன. கோவில் பக்கத்தில் இருப்பதால் நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூட இருக்கலாம்.

சமயபுரத்தை கடக்கும் இடம். நெடுஞ்சாலை பாலத்திற்கு கீழ் நுழைந்த ஊர்வலம் சமயபுரம் ஆலயம் நோக்கி. மேலிருந்து பார்த்தோம். ஓளி மற்றும் ஒலி வெள்ளம்.

திறந்த டிரக்கில் நாதஸ்வர கோஷ்டி முன்னால், பின்னால் சீரியல் பல்பு மினுக்க அம்மன் விக்ரகம். ஓரத்தில் டிஜிட்டல் பேனரில், மௌனமாய் இரண்டு விரல் காட்டியபடி மக்கள் முதல்வர்.

பாடாலூர் கடந்தோம். தூரத்தில் ஒரு வாகனம் வெளிச்சமாய், சாலை தடுப்புக்கு அந்தப்பக்கம். நெருங்கும் போது பார்த்தால் இங்கும் அம்மன். ஆனால் மிக சிறு உருவம், பகலாக்கும் ஒளி. உடன் இரண்டு பேர்.

இன்னும் கடந்தோம். இடப்புறம் இருளில், சிறு வெளிச்சம். பகுத்தறிவுப் பகலவன். பேருருவாய் பெரியார்.

அவரவருக்கு அவரவர் நம்பிக்கை. தன் நம்பிக்கையா, இறை நம்பிக்கையா என்பதே வித்தியாசம்.

# பயணங்கள் அருளையும் நோக்கி, அறிவையும் நோக்கி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக