பிரபலமான இடுகைகள்

திங்கள், 13 ஜூலை, 2015

மனசொன்னு இசை கட்டி பறக்குது !

ஆரூர் பாலா இப்படி என் ஞாயிறு பொழுதை வீணடிப்பார் என்று நினைக்கவில்லை. "இளையராஜா ரசிகர் மன்றம் ஆரம்பிச்சிடுவோமா அண்ணா?" என்று ஆரம்பித்தார். அதிலேயே நிலைகுலைந்தேன்.

திருவோணம் அருகில் ஊருணிபுரத்தில் தளபதி அவர்கள் தலைமையில் நடைபெற்ற முன்னாள் எம்.எல்.ஏ மகேஷ் தம்பி திருமணம் முடிந்து காரில் அப்போது தான் ஏறினேன். அப்போது தான் பாலா வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்த கவிப்பேரரசு வைரமுத்து பிறந்தநாளுக்கு அவரது  செய்தியை பார்த்தேன்.

அதற்குள் அலைப்பேசி அழைத்தது. ஆருர் பாலா தான் அழைத்தார். அப்போது தான் இப்படி கேட்டார். காரணம் அவரும் இசைஞானி ரசிகர். ஏற்கனவே என் பதிவுகளை படித்து, குறிப்பாக இசைஞானி குறித்த பதிவுகளை படித்து நண்பரானவர்.

கழகத்தை சேர்ந்தவர், இலக்கிய ரசனை உள்ளவர், வைரமுத்து ரசிகர் என பல விஷயங்களில் ஒத்துப் போவதை விட,  இசைராஜா ரசிகர் என்பதே அவர் மிக விரும்புவது. திருவாரூர்காரர். கத்தாரில் பணிபுரிகின்றார்.

15 நிமிடங்கள் பேசியிருப்பார். அதில் 14 நிமிடங்கள் இசை தான். 80கள்  தலைமுறை எப்படி இசைஞானி பாதிப்புடன் இருக்கிறது என்பது குறித்து விவாதித்தார். விஜய் டிவியில் 80 இசை குறித்த நீயா நானா பார்த்தீர்களா என வினவினார். இல்லை எனவுடன் லிங்க் அனுப்பினார்.

அவர் பேசி விட்டு வைத்து விட்டார். எனக்கு சிந்தனை அதிலேயே உழன்றது. வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் தமிழ்நாட்டில் இருப்பதாகவே உணர வைக்கிறார் இளையராஜா என்றால், அவரது இசையின் வீச்சை எப்படி அளவிடுவது.

காரிலும் இளையராஜா. பாடலின் ஒவ்வொரு இசைக்கட்டும் மனசை பரவி நிறைக்கிறது. இசை அவர் கட்டுப்பாட்டில்.

ஆதிகாலத்தில் இருந்து தமிழினம் இசையோடே வாழ்வது தான். நம் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், அது இன்ப நிகழ்ச்சியோ, துன்ப நிகழ்ச்சியோ அனைத்திலும் இசை முழங்கத் தான் நடக்கிறது.

அதன் பிரதிபலிப்பு தான் இசை ரசனை. கூத்து, நாடகம் என, இசை பரிமாணம் அடைந்து திரைத்துறை வந்த பிறகு இசை ஆக்கிரமித்து விட்டது. அவரவர் வாழ்வில் ஏற்படும், ஒவ்வொருவர் அனுபவத்திற்கும் தனித்தனியாக இசையமைத்த மாதிரி பாடல்களை கொடுத்து இசைஞானி பெரும்பாலோரை பாதித்திருக்கிறார்.

காதல், துக்கம், துள்ளல், கோபம், தனிமை, இனிமை, வெறுமை, மகிழ்ச்சி என எந்த உணர்வுகளையும் அவர் விட்டு வைக்கவில்லை. இப்படி சில தலைமுறைகளை பாதித்ததோடு அல்லாமல், இன்னும் ஒரு நூற்றாண்டை அவர் தான் இசையால் ஆள்வார்.

பதினைந்து நிமிடம் பாலா பேசி முடித்து விட்டார். அதிலிருந்து லேப்டாப்பில் இசையராஜா தொடர்கிறார்.

# அடி ஆத்தாடி இள மனசொன்னு இசை கட்டி பறக்குது !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக