பிரபலமான இடுகைகள்

புதன், 15 ஜூலை, 2015

ஜனநாயகவாதி பெருந்தலைவர் காமராஜர்

1975, ஜூன் 26-ம் தேதி. இந்தியாவில் நெருக்கடி நிலை என்ற மிசா அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து எதிர் குரல் வருகிறது. திமுகவிடம் இருந்து மாத்திரமல்ல, பெருந்தலைவர் காமராஜர் அவர்களிடம் இருந்தும். திருத்தணியில் நடைபெற்ற கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கிறார் காமராஜர்,

நெருக்கடி நிலையால், தேசம் முழுதும் தனது நண்பர்களான பழைய காங்கிரஸ் தலைவர்கள், எதிர்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுகிற செய்தி தொடர்ந்து வருகிறது. மன வருத்ததிற்கு ஆளான காமராஜர் உடல் நலம் குன்றி, படுக்கையில் வீழ்கிறார்,

அப்போது இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த நெருக்கடி நிலையை, மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்த ஒரே மாநில அரசு, கலைஞர் தலைமையிலான திமுக அரசு தான். காமராஜர் உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களை கைது செய்ய மத்திய அரசு நெருக்கடிக் கொடுக்கிறது. ஆனால் கலைஞர் தலைமையிலான அரசு அசைந்துக் கொடுக்கவில்லை.

ஜூலை 4ம் தேதி. காமராஜரது இல்லம். அன்றைய முதல்வர் கலைஞரும், கல்வி அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனும், அவரை காண செல்கிறார்கள். அருகே அமர்ந்த கலைஞரை கண்டதும், காமராஜருக்கு கண்கள் கலங்கி விடுகின்றன. மெல்ல தொடுகிறார் கலைஞர். தழுவிக் கொள்கிறார் காமராஜர். அனைவர் கண்களிலும் கண்ணீர்,

“தேசம் போச்சு, தேசம் போச்சு” ஓங்கி குரல் கொடுக்கிறார் காமராஜர். கலைஞர் கதறி அழ ஆரம்பித்து விட்டார், கண்களில் வழியும் கண்ணீரோடு நாவலர் இருவரையும் சமாதானம் செய்கிறார். உணர்ச்சி மயமான சூழல். மீண்டும் பேச்சு துவங்குகிறது.

“அய்யா, நெருக்கடி நிலையை எதிர்த்து நாங்கள் ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறோம். நீங்கள் ஆணையிடுங்கள். இந்தியாவில் ஜனநாயகத்தை காத்திட, சர்வாதிகாரத்தை அழித்திட நீங்கள் தலைமையேற்று அணி நடத்துங்கள். உங்கள் பின்னால் அணி வகுக்கிறோம்” என்கிறார் கலைஞர்.

“பொறுமையாக இருங்க, அவசரப்படாதீங்க. இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் ஜனநாயகம் இருக்குது, நீங்க ராஜினாமா செய்தால், அதுவும் போயிடும். கொஞ்ச நாள் பொறுமையா இருங்க” என காமராஜர் பதிலளித்தார். காமராஜர் அறிவுரையால் திமுக பொறுமை காத்தது.

இந்த மனவேதனையில்  கொஞ்சம் கொஞ்சமாக உடல் தளர்ந்த காமராஜர் அக்டோபர் 2 அன்று மறைந்தே போனார். அவர் இறந்த சில நிமிடங்களிலேயே, கலைஞர் காமராஜர் இல்லம் சென்று விட்டார். இறுதி மரியாதைக்கான ஏற்பாடுகள் துவங்கின.

காங்கிரஸ் தலைவர்கள் காமராஜது உடலை, தேனாம்பேட்டை காங்கிரஸ் திடலில் வைத்து, அங்கேயே அடக்கம் செய்ய முடிவெடுத்தனர். முதல்வர் கலைஞர் குறுக்கிட்டார். அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்றார். காங்கிரஸ் தலைவர்களுக்கே திகைப்பு.

ராஜாஜி மண்டபத்தில் அரசு ஏற்பாட்டில், பொதுமக்கள் பார்வைக்கு காமராஜரது பூவுடல் வைக்கப்பட்டது. அடுத்து அடக்கம் செய்ய அரசு இடம் தேர்வு செய்ய வேண்டும். இரவாகி விட்டது. மழை பெய்து கொண்டிருந்தது.

முதல்வரே இடம் தேடி சென்றார், உடன் காங்கிரஸ் தலைவர்களான ராஜாராம் நாயுடுவும், திண்டிவனம் ராமமூர்த்தியும். கார் வெளிச்சத்திலேயே இடத்தை தேர்வு செய்து முடிவு செய்தார்கள்,

காந்தியின் தொண்டராக வாழ்ந்து, காந்தி பிறந்தநாளிலேயே மறைவுற்ற காமராஜருக்கு, காந்தி மண்டபத்திற்கு அருகிலேயே நினைவாலயம் முடிவானது. அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார். நினைவகமும் கட்டப்பட்டது.

நெருக்கடி நிலை பிரதமர் இந்திராகாந்தியும் இறுதி நிகழ்ச்சிக்கு வந்து பெருந்தலைவருக்கு மரியாதை செலுத்தினார். ஆயிரம் இருந்தாலும், இந்திராவை பிரதமராக்கியவர் பெருந்தலைவர் தானே. ஆனால் இறுதி காலம் வரை நெருக்கடி நிலைக்கு அஞ்சாதத் தலைவனாகவே வாழ்ந்து மறைந்தார் காமராஜர்.

# அஞ்சாத ஜனநாயகவாதி பெருந்தலைவர் காமராஜரை பின்பற்றுவோம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக