பெறுநர்
கவிஞர். ராஜசுந்தர்ராஜன் அவர்கள்.
அன்பிற்கினிய அண்ணன் அவர்களுக்கு,
வணக்கம் !
மிக்க நன்றி, தங்களது மேலான, அன்பான அணிந்துரைக்கு.
இது வரை உங்களை நேரில் சந்தித்ததில்லை. அலைபேசியிலும் அதிகம் உரையாடியதில்லை. முகநூலில், என் பதிவுகளை வாழ்த்தும் போது வெளிப்பட்ட உங்கள் வாஞ்சை உணர்வு தான் நமக்குள்ளான உறவு. புதியவர்களை தட்டிக் கொடுக்கும் குணம்.
நேரில் சந்திக்காமலே, எப்படி அணிந்துரை கேட்பது எனத் தயங்கி அண்ணன் எம்.எம்.அப்துல்லாவை அணுகினேன். "பிரச்சினையே இல்லை, பேசிடறேன். சரியா செலக்ட் பண்ணி இருக்கீங்க. அண்ணன் நல்ல "கிரிடிக்". பளிச்னு சொல்லிடுவாரு" என்றார்.
அரை மணி நேரத்தில் அனுமதி பெற்று பேசினார். 'நேரில் தர அலைய வேண்டாம், வேலைப் பளு இருக்கும்' என்றீர்கள். மின்னஞ்சலில் பெற்று, மின்னஞ்சலிலேயே அனுப்பி விட்டீர்கள்.
நீங்கள் என் எழுத்தை வாசிப்பவர் என்பதால் உங்கள் அணிந்துரையை பெற விரும்பினேன் என்பதை விட, உங்கள் எழுத்தின் ரசிகன் நான் என்பது தான் காரணம்.
நீங்கள் தொடர்ந்து என் பதிவுகளை வாசிப்பதால், புதிதாக வாசிக்க வேண்டி இருக்காது என முடிவு செய்து உங்களை அணுகினேன்.
ஆனால் பதிவுகள் அனைத்தும் 2012 மற்றும் 2013 ஆண்டுகளை சேர்ந்தவை என்பதால், நினைவூட்டலுக்காக மின்னஞ்சலில் அனுப்பினேன்.
74 பதிவுகள். மகளுக்கு தேர்வுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டிய சூழலிலும், எனக்காக ஒரு இரவு விழித்து, படித்து , அணிந்துரை எழுதிக் கொடுத்தமைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.
உங்கள் தமிழ் நடை ஒரு கிறக்கத்தை தரும், அணிந்துரையிலும் அதை பெற்றேன். துவக்கத்தில் இருந்து இறுதி வரை உங்கள் எழுத்து எங்களை கட்டி இழுத்துச் செல்கிறது.
முகநூல் அனுபவம் இல்லாதவர்களுக்கு அதனை விளக்கி, அந்த அனுபவத்தை பெற தூண்டி இருக்கிறீர்கள். அதன் வித்தியாசத்தை உணர்த்தி இருக்கிறீர்கள்.
ஒவ்வொரு செய்தியின் நாயகரையும் குறிப்பிட்டு அந்த செய்தியின் ஆழத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் .
உங்கள் அணிந்துரை என் எழுத்தை தகுதிப் படுத்தும் சான்றாக அமைந்துள்ளது.
புத்தகத்திற்குள் நுழையும் முன் எழுதியவர் அரசியல்வாதி என்ற எண்ணத்தை படிப்பவர்கள் கழற்றிக் கொண்டு நுழைய உங்கள் அணிந்துரை வழிவகுக்கிறது.
ஆனால் தம்பி மீது இருக்கிற பற்று காரணமாக இலக்கியவாதி என்ற தலைப்பைக் கொடுத்து விட்டீர்கள். அதுதான் பயமாய் இருக்கிறது.
அன்புடன்
சிவசங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக