ஒரு நாள் பேராசிரியர் க.இராமசாமி அலைபேசியில் அழைத்தார்கள். "அரியலூரில் புத்தகத் திருவிழா நடத்த திட்டமிடுகிறோம். உங்களை எப்போ சந்திக்கலாம்?". "அய்யா, நானே வந்து பார்க்கிறேன். நீங்க அலைய வேண்டாம்"என்றேன்.
நீண்ட நாட்களாக எல்லோரும் 'இப்படி ஒன்று நடக்காதா?" என்று எதிர்பார்த்திருந்த விஷயம். பெரம்பலூரில் கடந்த சில ஆண்டுகளாக புத்தகத் திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. காரணம் மாவட்ட ஆட்சியர் தாரேஷ் அகமது.
செந்துறையில் கழக நிகழ்ச்சியில் இருக்கும் போது, திடீரென விழாக் குழுவினர் வந்தார்கள். பேராசிரியர் க.இராமசாமி, பெரியவர் சீனி.பாலகிருஷ்ணன், புலவர் இளங்கோ என புத்தகத் திருவிழா ஏற்பாடு செய்கின்ற குழுவினர்.
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி திடலில் அரங்கம் அமைக்க இருப்பது, பபாசி அமைப்புடன் பேசியிருப்பது, நிதி பிரச்சினை என விவரித்தார்கள்.
"பெரம்பலூர் போல நிகழ்ச்சிக்கு உதவ பெரிய கல்வி நிறுவனங்கள் இல்லை. இங்கிருக்கும் பெரிய தொழிலகங்கள் தாமாக முன் வரமாட்டார்கள். யாராவது அதிகாரத்தில் உள்ள ஒருவர் மூலமாக தொடர்பு கொள்ளுங்கள்" என்றேன்.
"ரிட்டயர் ஆன ஆளுங்களுக்கு வேற வேலை இல்லையா? இதெல்லாம் நடக்கற வேலையா?" என்று கிண்டல் அடித்தவர்கள் உண்டு. உதவி செய்யாமல் குதர்கம் பேசியவர்களும் உண்டு. ஆனால், அவர்கள் தங்கள் பணி தொடர்ந்தார்கள்.
பேராசிரியர் இராமசாமி, மைசூர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் பணியாற்றியவர். அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர். செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் செயல் அலுவலராக, தலைவர் கலைஞர் முதல்வராக இருக்கும் போது நியமிக்கப்பட்டு, சிறப்புற பணியாற்றியவர்.
பெரியவர் சீனி.பாலகிருஷ்ணன் அரியலூர் மாவட்டம் அமைய போராட்டக் குழு தலைவராக இருந்து பணியாற்றியவர். பொது வேலைகளில் முன் நிற்பவர். புலவர் இளங்கோ தொடர்ந்து கல்வி பணியாற்றுபவர்.
இவர்கள் எல்லாம் இரண்டு மாத காலம் தங்கள் சொந்தப் பணியை போல் இதே பணியாக இருந்தனர். உழைப்பிற்கான பலன் இருக்க வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
நாளை 17.07.2015 முதல் 26.07.2015 வரை அரியலூரில் புத்தகத் திருவிழா. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் துவக்கி வைக்கிறார்கள்.
நான் கடலூர் தளபதி நிகழ்ச்சி பணிகளில் இருந்ததால், தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டார்கள். ஆனால் மக்கள் பிரதிநிதியாக விட்டு விட முடியுமா?. இரண்டு நாட்களுக்கு முன், சென்று நிதி அளித்தேன். திருவிழா குறித்த சுவரொட்டியை எமது “பெரியார் அறிவு மய்யம்” சார்பாக ஏற்பாடு செய்துள்ளேன். நம் பங்கு.
ஒவ்வொருவரும் அவரவர் பங்காக திருவிழாவில் பங்கேற்று புத்தகம் வாங்கினால் போதும். பொது நலமும் சிறக்கும், சுய நலமும் சிறக்கும்.
# புத்தகம் வாசித்தால் புது “அகம்” மலரும். வாசிப்போம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக